செய்திகள்

முகேஷ் அம்பானியின் வீட்டருகே கடிதத்துடன் வெடிபொருள் கார்

மும்பை, பிப். 26–

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகள் நிரம்பிய ஸ்கார்பியோ கார் நிறுத்தி வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கும்பாலா ஹில், ஆல்டாமவுண்ட் சாலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லம் உள்ளது. அண்டிலியா ஹவுஸ் என்ற இந்த இல்லத்தில் இருந்து சிறிது தொலைவில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஸ்கார்பியோ கார் ஒன்று, கேட்பாரற்ற நிலையில் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டிருந்தது.

வாகனத்தை எடுக்க யாரும் வராததால், அம்பானி வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த காவலாளிகள், இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், உயர் அதிகாரிகள் உடனே விரைந்து வந்தனர். அங்கு அனாதையாக நின்றிருந்த பச்சை நிற ஸ்கார்ப்பியோ வாகனத்தை சோதனை செய்தனர்.

மிரட்டல் கடிதம்

சோதனையில், பாறைகளை வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தப்படும் சுமார் 20 ஜெலட்டின் குச்சிகள் அந்த காரில் இருந்ததாக கூறப்படுகிறது. காரில் இருந்து மிரட்டல் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். ஆனால், அது குறித்த விவரங்களை வெளியிட மறுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறும்போது, கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில், வெடிபொருள் நிரப்பிய காரை முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்தியது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு, மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தக் காரின் நம்பர் ப்ளேட் அம்பானி வீட்டின் பாதுகாப்பு வாகனங்களுக்கான பிரத்யேக எண்ணைக் கொண்டிருந்தது. விசாரணையில் அது போலி நம்பர் ப்ளேட் என்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *