செய்திகள்

தபால் ஓட்டு முறை பற்றி உரியவர்களுக்கு விளக்கவேண்டும்: கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 2–

80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் நடைமுறையை தெளிவாக விளக்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், அண்ணா தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா, காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப்பின் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பிரதிநிதிகள் கூறியதாவது:–

பொள்ளாச்சி ஜெயராமன் (அண்ணா தி.மு.க.): 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் வீடுகளில் இருந்து வாக்களித்து விட்டு, மீண்டும் அவர்கள் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தால், அதை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்த வழிமுறைகளை அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். வேட்பு மனுக்கள், வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு தொடர்பான படிவம் ஏ, பி ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க கூறியுள்ளோம்.

ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.): தி.மு.க. சார்பில் 12 கோரிக்கைகள் வைத்துள்ளோம். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்கு என்பது சந்தேகத்துக்குரியது. தபால் வாக்குகளில் தவறு நடைபெறும் என்பதால் அதை நீக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வந்த பின் அரசின் திட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தோஷ்குமார் (தே.மு.தி.க.): பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பறக்கும்படை சோதனை நடத்தப்பட வேண்டும். தெளிவான சின்னங்களை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

தாமோதரன் (காங்கிரஸ்): பணப்பட்டுவாடாவை தடுப்பது எழுத்தளவில்தான் உள்ளது. தபால்வாக்குகளை முறைப்படுத்த வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். குற்றப் பின்னணி வேட்பாளர்களை பரிசீலனையின்போதே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளோம்.

பாலச்சந்திரன், பால் கனகராஜ் (பாஜக): மூத்த குடிமக்களுக்கு வாக்களிக்க தனியாக வரிசை அளித்தல், முன்னுரிமை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் மற்றும் அந்த வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், குற்ற விவரங்களை 3 முறை தொலைக்காட்சி, பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என்பது விதி. இந்த விளம்பரம் தொடர்பான விளக்கம் கோரியுள்ளோம்.

மு.வீரபாண்டியன் (கம்யூனிஸ்ட்): தேர்தல் நடத்தை விதிகளை தமிழில் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களுக்கு கொள்கை வகுக்க வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *