செய்திகள் வர்த்தகம்

24–ந்தேதி வரை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கண்காட்சி

சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில்

24–ந்தேதி வரை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கண்காட்சி

சென்னை, பிப்.20

சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மாநில அளவிலான விற்பனை கண்காட்சியினை நேற்று (19 ந் தேதி) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டார்.

மகளிர் சுயஉதவி குழுவினரால் தயாரிக்கப்படும் பொருட்களை கிராம அங்காடிகள், கல்லூரி சந்தைகள், வட்டார, மாவட்ட, மாநில அளவிலான கண்காட்சிகள் மற்றும் தேசிய அளவில் சாராஸ் கண்காட்சிகள் வாயிலாக விற்பனை செய்வதற்கு ஏதுவாக பல்வேறு விற்பனை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் ஏராளமான மகளிர் சுய உதவி குழுவினரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு உரிய விலை கிடைப்பதோடு, வாடிக்கையாளர்களும் தரமான பொருட்களை நியாயமான விலையில் பெற முடிகிறது.

எதிர்வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மாநில அளவிலான விற்பனை கண்காட்சி நேற்று துவங்கி 24 ந் தேதி வரை நடைபெறுகிறது.

பருத்தி ஆடைகள், மண்பாண்ட பொருட்கள்

ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்டு 6 நாட்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பட்டு, பருத்தி ஆடைகள், மண்பாண்ட பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பல்வேறு உலோகங்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள்,

சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பல்வேறு தோல் பொருட்கள், வாசனைப்பொருட்கள், மூலிகைப்பொருட்கள், அனைவருக்கும் ஏற்ற தரமான ஆயத்த ஆடை வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் இக்கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கண்முன்னே சமைக்கப்படும் அறுசுவை மிகுந்த பாரம்பரிய கிராமிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோ ஆப் டெக்ஸ், பூம்புகார்

இக்கண்காட்சியில் அரசு நிறுவனங்களான கோ ஆப் டெக்ஸ், பூம்புகார் மற்றும் டாம்ப்கால் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. மூத்த குடிமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் நல வாழ்விற்கும் உரிய ஆலோசனைகளை வழங்கும் நலவாழ்வு மையம், சித்தா மற்றும் யோகா மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கும் காவல்துறை மையம் ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி நடைபெறும் நாட்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சிக்கு அனுமதி கட்டணம் இல்லை.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பா.ஜோதி நிர்மலா சாமி, கூடுதல் இயக்குநர்கள் ஜா.சம்பத், ஜெ.கணேஷ் கண்ணா, கே.சுமதி, எஸ்.சாமுவேல் இன்பதுரை, பொது மேலாளர், இணை இயக்குநர்கள், அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *