செய்திகள்

முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு 100வது பிறந்தநாள்

Spread the love

சென்னை, நவ. 8 –

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழக (நிறுவனர் – 3வது இணை வேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி) முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் சி. வி. சிட்டிபாபுவுக்கு நேற்று 100வது பிறந்தநாள். அதையொட்டி அவரை நேரில் சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்துக் கூறினார் – மறைந்த செட்டிநாட்டு அரசர் எம்.ஏ.எம். ராமசாமியின் நேர்முக உதவியாளராக இருந்த ராஜேந்திரன். (இவர் இப்போது காஞ்சிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எஸ். வித்யா மந்திரின் நிறுவனர் – தலைவர்) அவரோடு மனைவி சரோஜினியும் (வித்யாமந்தரின் தாளாளர்) உடன் சென்று வாழ்த்துக் கூறினார்.

சிட்டிபாபு, தனது கல்லூரிப் படிப்புக்குப் பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்து முனைவர் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் வரலாறு, அரசியல் துறையில் பேராசிரியராக பணியாற்றினார். வேலூர் அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முதல்வராக பணி ஏற்றார். பின்னர் தமிழக அரசின் கல்வித் துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், இணை இயக்குனராகவும், பள்ளிகல்வி இயக்குனராகவும், கல்லூரி கல்வி இயக்குனராகவும் பணிபுரிந்தார். சாரண, சாரணியர் இயக்கம் தமிழ்நாட்டுப் பிரிவின் மாநில தலைமை ஆணையராகவும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டிபாபுவின் கல்விப் பணியினால் தமிழ்நாட்டின் கல்வித் துறையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. தமிழக கல்வித் துறையில் இவர் ஆற்றிய பணிகள், புகுத்திய கல்வி சீர்திருத்தங்கள், மாற்றங்கள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் அயல் நாடுகளில் நடைபெற்ற பல கல்வி, கலாச்சார மாநாடுகளிலும் கலந்து கொண்டு சிறப்புரைகளையும், கட்டுரைகளையும் வழங்கியுள்ளார்.

அரசியல் கலப்பற்றது இவரது கல்விப் பயணம். செட்டிநாட்டரசர் ராஜா சர் முத்தையா செட்டியாரிடம் நெருங்கிய நட்பும், பாசமு கொண்டிருந்தவர். எம்.ஏ.எமுக்கு ஒரு நல்ல ஆசானாகவும், நண்பராகவும், வழிகாட்டியாகவும் விளங்கினார். இவற்றுக்கெல்லாம் மேலாக எம்.ஏ.எம்மை தனது தந்தை போல் இறுதிவரை மதித்து வந்தார் சிட்டிபாபு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *