சினிமா செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழா துவங்கியது

ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழா துவங்கியது:

42 திரைப்படங்களை 30ந் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக பார்க்கலாம்

சென்னை, நவ. 17

இந்தியாவில் நடைபெறும் 25-வது ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழாவில் , இம்மாதம் முழுவதும் திரையிடப்பட உள்ள 42 திரைப்படங்களோடு, மேலும் சில இணைய வழி நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 5ந் தேதி தொடங்கிய இவ்விழா, தற்போது உலகம் முழுக்க பரவியுள்ள கரோனா பெருந்தொற்று சூழலை மனதில் கொண்டு, முதல்முறையாக இணைய வழி அவதாரம் எடுத்துள்ளது. கடந்த ஆண்டுகளைவிட அதிகமான நாடுகள் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்பு ஆர்வத்தால் மொழி, திரைப்படத்தின் வகை போன்றவற்றிலும் விரிவடைந்துள்ள இந்த ஆண்டுக்கான திரைப்பட விழாவில், 27-ந் தேதிக்குள் 8 வகையான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திரைப்பட விழாவில் பங்கேற்கும் திரைப்படங்களை 30 தேதி வரை கால வரையறையின்றி, நமக்கு வசதியான எந்த நேரத்திலும் பார்க்க இணைய வழியில் இயலும். மறுபுறம், சிறப்பு நிகழ்ச்சிகளாக ஏற்பாடு செய்யப்படுபவை மட்டும், குறிப்பிட்ட நேரத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

திரைத்துறையில் ஆர்வமுள்ள யாரும், இந்த நிகழ்வை கட்டணம் எதுவுமின்றி பார்த்து மகிழலாம். ஸூம் செயலி (ZOOM App), சினிஃபில்ஸ் (Cinephiles) போன்ற பல்வேறு இணைய காட்சி பகிர்வு தளங்கள் மூலம் இவற்றைப் பார்க்க இயலும்.

ஐரோப்பா மற்றும் இந்தியத் திரையுலகில் பங்காற்றும் – திரைக்கதை எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலதுறை ஜாம்பவான்கள் இந்தச் சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

ரோமானிய நாட்டைச் சேர்ந்த விருது வென்ற நடிகையும், எழுத்தாளரும், இயக்குனருமான அலினா செர்பன் தனது திரைப்படமான “அலோன் அட் மை வெடிங்” அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். சைப்ரஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் செயல்படும் திரைப்படத் தயாரிப்பாளரான ஜெனின் டீர்லிங் தனது நகைச்சுவை திரைப்படமான ஸ்மக்லிங் ஹென்ரிக்ஸ் குறித்த அறிமுகத்தை வழங்க இருக்கிறார்.

ஐரோப்பிய திரைப்படங்களுக்கான இந்திய விழா குறித்து மேலும் தகவல்களைப் பெற euffindia.com வலைதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *