சிறுகதை

எதிர் ஈட்டி | செருவை.நாகராசன்

Spread the love

அய்யா! என்ற கெஞ்சலுடன் வௌியே ஓங்கிய குரல் ஒலிக்கவும் வௌி கேட்டை நோக்கினார் வள்ளி நாயகம். அருகில் அவர் மனைவி வான்மதி.

மெலிந்த உடலுடன் தாடியில் நாற்பது வயது தோற்றம் காட்டிய தேங்காய் பறிப்பவன் மாணிக்கம் வந்துவிட்டான்.

‘‘மொதல்ல குடிச்சிருக்கானான்னு பாரு. காலையிலேயே எங்கேயாவது போட்டுட்டுதான் இங்கே வருவான். மரம் ஏறி கீழே விழுந்து தொலைஞ்சிட்டான்னா… யாரு ஹாஸ்பிடல்ல சேர்த்து இவனைப் பார்க்கிறது?’’ என்றார் எரிச்சலுடன் வள்ளி நாயகம்.

‘‘அம்மா குடிக்க பணம் இல்லம்மா. இதுதாம்மா மொதல் வீடு. என்னை நம்புங்கம்மா’’ என்று கையெடுத்துக் கும்பிட்டதும் உள்ளே அனுமதித்தாள் வான்மதி.

ஓவ்வொன்றாக மாணிக்கம் மரமேற தொப் தொப்பென்று காய்கள் கீழே தரையில் விழ ஆரம்பித்தன. நான்காவது மரம் கொல்லைப்புறம் மதிற்சுவர் ஓரமிருந்தது.

யம்மோவ் இங்கே கொஞ்சம் வாங்கம்மா என்று சப்தமிட்டான் மாணிக்கம். வான்மதி விரைந்து வந்தாள். பின் தொடர்ந்து கணவரும் வந்துவிட்டிருந்தார்.

யம்மா சுவத்துக்குப் பின்னாடி ஒரே சாராயப் பாட்டிலாக் குவிஞ்சு கெடக்கேம்மா? யாரு போட்டது. அய்யா என்னைக் குடிகாரன்னு சொல்றாரு என்றான் எகத்தாளமான குரலில்.

ஆவசரமாக மறுத்தார் வள்ளிநாயகம். இருட்ட ஆரம்பிச்ச உடனே பின்னாடி நெறைய பேர் வந்திடறானுங்க. அவனுங்க வேலைதான் இதெல்லாம். அது தெரியாம நீ என்னடா பேசறே என்று கத்தினார்.

யம்மா! பின்னாடி கொளத்துக்கரை ஒரே கருவேலங்காடு. ஒரு பய உள்ளே வர முடியாது. அய்யா நல்லா கதை சொல்றாரு என்று நக்கலான குரலோடு கீழே இறங்கத் தொடங்கினான் அத்தொழிலாளி.

மெல்லிய நகைப்பு முகம் காட்டிய வான்மதியிடம் மவுனம். அதுவே கணவருக்கான அவமான மொழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *