செய்திகள்

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை

சென்னை, மார்.1–-

அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6–-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சியான அண்ணா தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பாரதீய ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம் முதல் அண்ணா திமு.க. தொடங்கியது.

பா.ம.க.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பாரதீய ஜனதா, தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி ஆகியோர் ஏற்கனவே சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் பாரதீய ஜனதா குழுவினர் நேற்று காலை சந்தித்து பேசினர்.

இதற்கிடையே, நேற்று இரவு காரைக்கால், விழுப்புரம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது பாரதீய ஜனதா தரப்பில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி, பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அண்ணா தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது.

கன்னியாகுமரி, கோவை, திருச்சி, வேலூர் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று (1–ந் தேதி) பாரதீய ஜனதா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு ஆகலாம் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *