செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் மக்கள் பேராதரவுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி கோட்டையில் அமருவார்

குண்ணவாக்கத்தில் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கி காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் பேச்சு

காஞ்சீபுரம், ஜன. 8-–

வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் பேராதரவுடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி கோட்டையில் அமருவார் என்று குண்ணவாக்கத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கி பேசினார்.

பொங்கல் திருநாளையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் குண்ணவாக்கம் கிராமத்தில் தமிழக அரசின் ரூ.2500 ரொக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு பொங்கல் பரிசு வழங்கி தொடங்கி வைத்தார்.

அம்மா வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, அம்மா செயல்படுத்திய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தமிழக மக்களின் தேவைகளை முதலமைச்சர் அறிந்து, கோரிக்கைகளுக்கு முன்பாகவே பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழ்நாடுதான் மிகச்சிறந்த மாநிலமாகவும், முன்னணி மாநிலமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் ஆனாலும் அண்ணா தி.மு.க.தான் மக்கள் பணி செய்யும் என்று சட்டமன்றத்தில் அம்மா சூளுரைத்தார். அவரது லட்சிய கனவை நாம் நிறைவேற்றி காட்ட வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலை தி.மு.க.விற்கு முடிவு கட்டும் தேர்தலாக உருவாக்கிட நீங்கள் அனைவரும் களப்பணியாற்ற வேண்டும்.

இன்னும் 2 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வர உள்ளது. நாம் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தால் எதிர்த்து போட்டியிடுபவர்களை எளிதாக தோற்கடிக்கலாம். நம்மிடையே ஒற்றுமை இருந்தால் நம்மை தோற்கடிக்க எந்த கொம்பனாலும் முடியாது. அம்மா ஆட்சியை, புரட்சித்தலைவர் ஆட்சியை மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் மக்கள் பேராதரவுடன் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக கோட்டையில் அமருவார். இது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட கழக அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளர்கள் திருப்புலிவனம் கே.பிரகாஷ்பாபு, களியாம்பூண்டி தங்கபஞ்சாட்சரம், கே.ஆர்.தருமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *