செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் எடப்பாடி நாளை ஆய்வு

கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் எடப்பாடி நாளை ஆய்வு

சென்னை, அக்.12

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு நடத்துகிறார்.

நாளை மறுநாள் (14 ந் தேதி) கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்கிறார்.

மாவட்டந்தோறும் சென்று கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.

மதுரை, கோவை, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் என இதுவரை 24 மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், விவசாய பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினரை சந்தித்து குறைகளை கேட்டு அறிவிப்புகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நாளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

இதற்காக நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு காலை 10.15 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து நேராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்கிறார். அங்கு அமைச்சர், கலெக்டர், அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்கிறார்.

விவசாய பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுவினர், சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பினரை தனித்தனியாக சந்தித்து குறைகளை கேட்கிறார்.

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார்.

இதன் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஏராளமான புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்து வருகிறார்.

நாளை தூத்துக்குடியில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நேராக கன்னியாகுமரி செல்கிறார். கன்னியாகுமரியில் நாளை இரவு தங்கும் முதலமைச்சர் நாளை மறுநாள் (14 ந் தேதி) காலை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், அன்று மாலை விருதுநகர் மாவட்டத்திலும் ஆய்வு செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *