செய்திகள்

அய்யா வைகுண்டர் அவதாரத் திருநாள்: முதல்வர் வாழ்த்து

சென்னை, மார்ச் 4–

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20–ம் தேதி ‘அவதார தினம்’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று (4–ந் தேதி) அய்யாவின் 189–வது அவதார தினம் கொண்டாடப்படுவதை அறிந்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சாதாரண மனிதராக திருச்சம்பதியில் மூழ்கி, 3 நாட்கள் கடலுக்குள் இருந்து, விஷ்ணு மகாலெட்சுமியின் அருளோடு, வைகுண்டர் என திருநாம் பெற்று, மக்களுக்கு அருள்புரிய வந்த தினமே அய்யாவின் ‘அவதார தினம்’ என கொண்டாடப்படுகிறது.

சாதி, மத பேதங்கள் அதிகம் உள்ள காலத்தில் சாதி, சமய பேதமின்றி சமத்துவத்தையும், தர்மத்தையும் போதித்த அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள் அவனி எங்கும் பரவிற்று. அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு, அய்யாவின் வழி மக்கள், பாதயாத்திரையாக பல்வேறு ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்புக்கு வந்து அய்யாவின் அருளைப் பெற வாழ்த்துகிறேன்.

அய்யா வைகுண்டரின் போதனைகளை நாமும் பின்பற்றி, அய்யா வைகுண்டர் அவதார திருநாள் விழாவில் கலந்து கொண்டு, அய்யாவின் அருள்பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *