செய்திகள்

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், நெசவாளர்களுடன் எடப்பாடி கலந்துரையாடல்

தமிழகத்தில் சிறப்பான தொழில் வளர்ச்சி

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், நெசவாளர்களுடன் எடப்பாடி கலந்துரையாடல்

கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து நடவடிக்கை என உறுதி

கோவில்பட்டி, ஜன.4-–

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக கோவில்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.

‘தூத்துக்குடி மாவட்டத்தில் 2-–வது பெரியநகரம் கோவில்பட்டி ஆகும். இங்கு தொழில் பூங்கா அமைக்க வேண்டும். ஒற்றை சாளர அமைப்பு மூலம் தொழில் உரிமம் வழங்கவேண்டும். தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே பொது பயன்பாட்டு மையம் அல்லது சிட்கோ மூலம் வெளிநாடுகளில் இருந்து தீக்குச்சிக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்துதர வேண்டும். கோவில்பட்டியில் பொட்டாசியம் குளோரைடு தயாரிப்பு தொழிற்சாலை, காகித அட்டை தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எட்டயபுரம் ரோடு, பசுவந்தனை ரோடு, மந்தித்தோப்பு ரோடு வழியாக நாலாட்டின்புத்தூர் வரை 17.2 கிலோ மீட்டர் தூரம் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

தீப்பெட்டிக்கு வரி குறைப்பு

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–-

தீப்பெட்டி தொழிலுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசிடம் பேசி 12 சதவீதமாக குறைத்தேன். கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற்றுத்தந்தது அண்ணா தி.மு.க. அரசு தான். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கினோம். பல்வேறு நாடுகளில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நல்ல நிலையை எட்டி உள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில்களுக்கு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் உற்பத்தியாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பு இன்றி தொழில் செய்கின்றனர். ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது இப்படி இருந்ததா? கோவில்பட்டி பகுதி வணிகர்கள், உற்பத்தியாளர்கள் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அங்கு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கடலை மிட்டாயை எடப்பாடி பழனிசாமி சாப்பிட்டு ருசி பார்த்து பாராட்டினார்.

மின்மிகை மாநிலம்

பின்னர் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் நான்கு வழிச்சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நெசவாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில்,

‘‘நெசவாளர்களின் வாழ்வை மேம்படுத்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 200 யூனிட் இலவச மின்சாரத்தை வழங்கினார். நெசவாளர்களுக்கு தி.மு.க. ஆட்சியின்போது மின்தடையால் தொழில் பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2011–-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தீட்டியதன் விளைவாகவும், தொடர் நடவடிக்கையாலும் இன்று மின்வெட்டு கிடையாது. மேலும் தமிழகம் மின்மிகை மாநிலமாகவும் மாறி உள்ளது. நெசவாளர்கள் வாழ்க்கை மேம்பட பணியாற்றி வரும் அண்ணா தி.மு.க. அரசு தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அண்ணா தி.மு.க.வை வெற்றி பெற செய்யுங்கள்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *