பொய் சொல்லி ஏமாற்ற புறப்பட்டுள்ளார் ஸ்டாலின்
நல்லத்திட்டங்கள் கொண்டு வந்து தமிழக மக்களின் மனதை தொட்டு விட்டார் எடப்பாடி பழனிசாமி
அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெருமிதம்
நாகை, ஜன. 19–
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பயன் பெறும் வகையில் நல்லத்திட்டங்களை வழங்கி தமிழக மக்களின் மனதைத் தொட்டுவிட்டார். ஸ்டாலின் பொய் சொல்லி ஏமாற்ற புறப்பட்டுள்ளார் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசினார்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நாகப்பட்டினத்தில் உள்ள அவுரித் திடலில் மாவட்ட அவைத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:
எம்.ஜி.ஆர். ஒரு வேளை சாப்பாட்டின் கஷ்டத்தை அறிந்தவர். எனவே தான் எவ்வளவு சிரமம் ஏற்பட்ட போதும் சத்துணவு திட்டத்தை விடாமல் சிறப்பாக நடத்திக் காட்டினார். அவர் காட்டிய வழியில் அம்மா விலையில்லா அரிசியை மக்களுக்கு வழங்கி பசி, பட்டினியை போக்கினார். இந்த இருவர் காட்டிய வழியை பின்பற்றி தமிழக மக்கள் பயன் பெறும் வகையில் சட்டங்களையும், நல்லத் திட்டங்களையும் கொண்டு வந்து அவை மக்களிடம் நேரடியாக சென்று சேர வைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எனவே அவர் தமிழக மக்களின் மனதை தொட்டு விட்டார்.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களை தொடங்கி 11 மருத்துவ கல்லூரிகளை அறிவித்து இந்தியாவிலே தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்க மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கி, உலக முதலீட்டாளர்கள் தேடி வந்து தொழில் தொடங்க தமிழகத்தை மாற்றித் காட்டியவர் எடப்பாடி பழனிசாமி. இந்தியாவிலே தமிழகம் தான் மருத்துவத் துறையில் சிறப்பாக விளங்குகிறது. குடி மராமத்து பணியை குமிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை சிறப்பாக செய்து தண்ணீர் பஞ்சமின்றி தமிழகம் விளங்குகிறது.
ஸ்டாலின் தற்போது அண்ணா தி.மு.க.வை நிராகரிப்போம் என்று கூட்டம் நடத்தி வருகிறார். தி.மு.க.வை. ஆதரியுங்கள் என்று கேட்டால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு மக்களை பொய் சொல்லி ஏமாற்ற புறப்பட்டுள்ளார். நாங்கள் கூறுகிறோம் குடும்ப அரசியலை ஒழிப்போம் அம்மா ஆட்சியை அமைப்போம் என்று. தற்போது தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமில்லை, திருடர்கள் பயமில்லை. கொரோனா பயமும் இல்லாமல் மக்களின் உயிர் காக்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு மக்களை தமிழகம் காப்பாற்றி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி சட்ட மன்றத்தில் கூறியதையும், 110 விதியின் படி கூறியதையும் எல்லாவற்றை செய்து விட்டு மக்களை சந்திக்க வருகிறார். ஆனால் தி.மு.க.தேர்தல் நேரத்தில் ஏதாவது பொய்யை கூறி ஓட்டை பறிக்க பார்ப்பார்கள். தமிழக மக்கள் இனி ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். 234 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க வெற்றி பெற எதிர் நீச்சல் போட்டு, கடுமையாக உழைத்து வெற்றி பெற்று புதிதாக கட்டப்பட்டு வரும் அம்மாவின் நினைவிடத்தில் வெற்றியை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் நாகை நகர செயலாளர் தங்க கதிரவன், முன்னாள் அமைச்சர் ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ. ஆசை மணி, கோடி மாரி, தலைமை கழக பேச்சாளர்கள் முத்துமணி, நைனா முகமது மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணியினர் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.