செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் மீனவர்களைத் தேடி வாழ்வியல் தொழில் பயிற்சிகள்

Spread the love

விழுப்புரம்,பிப்.27

தமிழகத்தில் முதன் முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சார்பில் மீனவர்களை தேடி வாழ்வாதார தொழில் பயிற்சி அளித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மரக்காணம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மீனவர் மக்கள் நலனுக்கான திறன் வாழ்வாதார பயிற்சியினை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையின் அறிவுறுத்தலின்படி உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் பத்திரிக்கையாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மரக்காணம் மற்றும் வானூர் பகுதிகளைச் சார்ந்த மீனவ கிராமங்களில் வசிக்கக்கூடிய இளைஞர் மற்றும் மகளிருக்கு புயல் மற்றும் மழைகாலங்கள் மாற்றுத்தொழிலாக வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக திறன் மேம்பாட்டுப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் மீனவர்கள் வசிக்கக் கூடிய பகுதியில் மீனவ மக்கள் சுயதொழில் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து சுயதொழில் செய்ய விருப்பம் உள்ள மீனவர்களிடம் அணுகி, அவர்களின் ஆர்வத்திற்கேற்ப கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி, எலக்ட்ரிக்கல், பிளம்பிங், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் பராமரிப்பு மேற்கொள்ளுதல், மீனவர்கள் பயன்படுத்தும் படகு இயந்திரம் பழுதுபார்க்கும் பயிற்சி, மகளிருக்கு அழகுகலை பயிற்சி, டைலரிங். எம்ராய்டரிங். போன்ற பயிற்சியினை மேற்கொள்ளும் வகையில் மீனவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்திலேயே இப்பயிற்சியினை மேற்கொள்ள அரசு நிர்ணயித்து ஆர்வமுள்ள மீனவர்களுக்கு திறன் வளர்பயிற்சியினை வழங்கிவருகிறது.

இதில் 19 கிராமத்தை சேர்ந்த மீனவ மக்களிடம் கலந்தாலோசித்ததில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களுடைய சுய விருப்பத்துடன் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல்கட்ட பயிற்சியாக 320 நபர்களை தேர்வு செய்து பயிற்சி காலத்தில் மாத உதவித்தொகையுடன் மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் அனைத்தும் செயல்முறையில்; கற்பிக்கப்பட்டுவருகிறது. இதுமட்டும் இல்லாமல் இவர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கி கடன் பெற்றுத்தரும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்ற மீனவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் சில முக்கிய நிறுவனங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலைவாய்ப்பினை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அழகுகலை திறன் வளர்பயிற்சி

அழகுகலை திறன் வளர்பயிற்சி பெற்ற சில மகளிர் தங்கள் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்காக பயிற்சி காலகட்டத்திலேயே விடுமுறை நாட்களில் திருமணம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அழகுகலை திறமையை வெளிப்படுத்தி வருவாய் ஈட்டிவருகின்றனர்.

இதேபோன்று படகு இயந்திரம் பயிற்சி பெற்ற இளைஞர்களும் தங்கள் பகுதியில் உள்ள பழுதடைந்த படகுகளை சரிசெய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் இப்பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ்களை அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நேர்முக வேலைவாய்ப்பு தேர்வில் 3 நபர்கள் சிறப்பான முறையில் செயல்முறை விளக்கம் செய்து காட்டியதால், ஓமன் நாட்டுற்கு பணிபுரிவதற்கான ஆணையினை பெற்று வெளிநாட்டிற்கு செல்ல உள்ளனர். மேலும், வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வாகன ஓட்டுநர் பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிறப்புமிகு திட்டத்தினை உருவாக்கி எங்கள் கிராமத்து இளைஞர்களுக்கு முன்மாதிரியாக வருவாய் ஈட்டும் வாய்ப்பினை ஏற்படுத்திய தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் எங்கள் பகுதியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என மீனவ பகுதியைச்சார்ந்த ஆறுமுகத்தின் மனைவி ஜெயசுதா என்பவர் மீனவர்களின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இப்பயிற்சி நடைபெறும் பகுதியில் நேரடியாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் வாயிலாக பத்திரிக்கையாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மீனவ கிராம இளைஞர்கள் மற்றும் மகளிரிடம் பத்திரிக்கையாளர்கள் கலந்துரையாடியதில் இவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உறுதியாக முழு முயற்சியுடன் இத்திட்டத்தினை 100 சதவிகித வெற்றியினை நேரடியாக களத்தில் காண முடிந்ததென செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதில் உதவி இயக்குநர் திறன் மேம்பாட்டு கழகம், உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை), பேரிடர் மேலாண்மை மாவட்ட திட்ட அலுவலர், பொது மேலாளர் (இந்திய சாலை பாதுகாப்புக்கழகம்), இணை இயக்குநர் (இந்திய சாலை போக்குவரத்துக் கழகம்) மற்றும் தனியார் வங்கி தலைமை மேலாளர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *