சிறுகதை

ஆக்கிரமிப்பு | ராஜா செல்லமுத்து

Spread the love

சாலையின் முனையில் இருக்கும்‘ டீக்கடை’ வழக்கம் போலவே அன்றும் ரொம்பவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மகேஷும் முருகனும் வடை எடுத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தனர்.

‘‘சார்.. சட்னி கொஞ்சம் போட்டுக்கிறீங்களா..? என்று டீக்கடைக்காரன் கேட்டார்.

‘‘இல்ல வேணாம்..’’ என்று சொல்லிக் கொண்டே இருவரும் இருக்கையைத் தேடினர். அங்கிருந்த இருக்கையில் ஏற்கனவே ஆட்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் கையில் டீயோ, காபியோ இல்லை. முன்னால் வடையோ, பல

காரமோ? எதுவும் இல்லை. வெற்று அரட்டை அடித்துக் கொண்டும் விதண்டா வாதம் பேசிக்கொண்டும் தேவையில்லாமல் சிரித்துக் கொண்டும் இருந்தது ஒரு கூட்டம்.

கையில் வடையுடன் போன முருகனுக்கும் மகேஷுக்கும் ரொம்பவே கோபம் வந்தது.

‘‘இவங்கதான் சாப்பிட்டாங்களே.. அப்பறம் ஏன்..? இவங்கெல்லாம் ஒக்காந்திட்டு இருக்காங்க..முருகன் சொல்லுடா.

இவனுகள நாலு கேள்வி கேப்பமா? என்றான் மகேஷ்.

என்னன்னு?

‘‘ஏண்டா.. டேய்…. நீங்க தான் சாப்பிட்டிங்களே.. அப்பறம் ஏன் இங்க ஒக்காந்திட்டு இருக்கிங்க.. அடுத்தவங்க சாப்பிடுறதுக்கு எடம் விடுங்கன்னு..’’ என்று மகேஷ் சொன்னான்.

‘‘ஏய்.. வேணாம்பா.. நமக்கு எதுக்கு வம்பு..’’ என்று விலகிக் கொண்டான் மகேஷ்.

‘சுற்றி நிற்பவர்கள் யாரும் உட்கார்ந்திருப்பவர்களை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. ஏன்.. இவங்கல்லாம் இப்படி இருக்காங்க. அங்கங்க நின்னுட்டு சாப்பிட்டு இருக்காங்க. ஆனா, ஒரு ஆள் கூட சாப்பிட்டிங்களே.. எந்திரிச்சு போங்கன்னு சொல்லலியே..’ என்று ஆதங்கப்பட்ட மகேஷ் சுற்றி நிறபவர்களைப் பார்த்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் திரும்பிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

எல்லோரையும் நோட்டம் விட்ட மகேஷ்.ஒருவரின் முகத்தில் மட்டும் மையமிட்டு நின்றான். அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தவனின் புத்தியில்

‘‘யார் இவர்?’’ என்ற எண்ணமே சுரீரென்று உதித்தது.

‘‘என்ன மகேஷ் அப்பிடிப் பாத்திட்டு இருக்க..’’

‘‘முருகா அங்க பாத்தியா..?’’

‘‘எங்க..?’’ என்று ஆவலாக முருகன் பார்த்தான்.

‘‘அந்த டேபிள் ஓரமா ஒருத்தர் நின்னு சாப்பிட்டு இருக்காரே.. அவரக் கவனிச்சியா..?’’ என்றதும் முருகனின் கவனமும் அவரிடம் குவிந்தது.

‘‘ஆமா.. மகேஷ் இவங்க சாப்பிடுறதுக்கும் அவருக்கும் ரொம்பவே வித்யாசம் இருக்கு..’’

‘‘பாத்தியா.. கை கால் எல்லாம் சிமெண்ட் ஒட்டிட்டு இருக்கு. அத விட அவர் சாப்பிடுற விதமே ஒரு மாதிரி இருக்குல்ல..

‘‘ஆமா…

‘‘அவதி கொவதியா.. அள்ளித் தின்னுட்டு இருக்காரு பாத்தியா.. பாவம் என்ன பசியோ..? என்று பேசியபடியே இருவரும் பார்த்தனர். அந்த மனிதன் தட்டிலிருந்த வடையை விட்டுக் கண்ணைக் கொஞ்சம் கூட எடுக்காமல் பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் வாயின் இரண்டு பக்கமும் வடை மென்று தின்ற எச்சங்கள் ஒட்டியிருந்தன. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்.

‘‘இவனுகளைப் பாத்தியா..? சும்மா ஒக்காந்திட்டு அரட்டை அடிச்சிட்டு இருக்கானுக. ஆனா.. அவரப்பாத்தா.. காலையில இருந்து கடுமையா உழச்சிட்டு வந்தவரு மாதிரி தெரியுது. அவரு நிம்மதியா ஒக்காந்து சாப்பிடக்கூட முடியல.. ஆனா..! இவனுக ஏசி ரூம்ல ஒக்காந்து வேல செஞ்சிட்டு வந்தவனுக. ஒரு தொழிலாளி ஒக்காந்து சாப்பிடக் கூட முடியல.. அதுக்கும் இடைஞ்சல் பண்றானுக..’’ என்றான் மகேஷ்.

‘‘ஹலோ..’’ என்று சேர் முழுக்க உட்கார்ந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்த ஆட்களைப் பார்த்துக் கூப்பிட்டான்.

‘என்ன’ என்பது போல் அவர்கள் பார்த்தனர்.

‘‘சாப்பிட்டிங்களா..?’’

‘‘ம்..’’ என்று ரொம்பவே திமிராகப் பதில் சொன்னார்கள்.

‘‘அப்பிடின்னா..அடுத்தவங்களுக்கு வழி விடுங்க..’’ என்று சொன்னதும் ஒருவன் மகேஷை முறைத்துப் பார்த்தான்.

‘‘என்ன..?’’ என்று மகேஷ் கோபமாக கேட்க எதுவும் பேசாமல் அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்தனர்.

அந்த இடத்தில் மகேஷோ முருகனோ உட்காரவில்லை. மாறாக அங்கே ஆவலாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளியைக் கூப்பிட்டு உட்கார வைத்தனர்.

‘‘ஏன்.. தம்பி இவர ஒக்கார வைக்கத்தான் இவனுக கூட சண்ட போட்டிங்களா..?’’ என்று அங்கிருந்த ஒருவர் கேட்டார்.

‘‘இங்க இருக்கிற ஆளுகளெல்லாம் ருசிக்கு சாப்பிடுறீங்க..? ஆனா.. அவரப் பாத்திங்களா..? பாவம் சார்.. காலையில இருந்து கை கால் உடம்பு வலிக்க வேல செஞ்சிட்டு நிம்மதியா.. ஒக்காந்து சாப்பிட்டு போகலாம்னு வந்தா.. இந்த மாதிரி தெனாவட்டு புடிச்ச ஆளுக எல்லா எடத்திலும் ஒக்காந்திட்டு.. ரொம்ப டார்ச்சர் பண்ணீட்டு இருக்காங்க.. அதான் நாலு போடு போட்டேன்..’’ என்றான் மகேஷ்.

அப்போது ….

அந்தத் தொழிலாளி உட்காந்திருந்தபடி ஒரு வார்த்தையும் பேசாமல் தன் பசியைப் போக்க வடையை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்..

ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஆளையே காணோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *