சிறுகதை

என்னோட நட்சத்திரா | ராஜா செல்லமுத்து

Spread the love

உள்ளம் பார்க்கும் காதல் வேறு. உடல் பார்க்கும் காதல் வேறு. இரண்டிருக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் விரவிக் கிடக்கின்றன.

சுந்தரின் காதல் உள்ளம் பார்த்தது. அதனால் தானோ என்னவோ அவன் நட்சத்திராவின் காதலில் நனைந்து கிடந்தான். நட்சத்திரா அவன் உயிர் வரை ஊடுருவி வேறொரு உலகத்தில் சுந்தரைச் சஞ்சரிக்க வைத்தாள்.

நட்சத்திராவின் காதலில் விழுந்து கிடந்தவனை நண்பர்கள் தூக்கி நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் அது முடியாமலே போனது.- இந்தக் காதல் பற்றி சுந்தரிடம் பேச வேண்டுமென்று நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவே இல்லை.-அந்த ஒரு நாள் அன்று வந்தே தீர்ந்தது . ஏதோ ஒரு வேலைகளில் மூழ்கிக் கிடந்தவனை விஷ்ணு தட்டி எழுப்பினான்.

‘‘என்ன சுந்தர்.. உன் கூட பேச முடியுமா..?’’ விஷ்ணு கேட்டான்.

‘‘ஓ.. தாராளமா பேசலாமே..’’என்று சுந்தர் சுதந்திரம் கொடுத்தான். அது தான் சமயம் என்று கருதிய விஷ்ணு உடும்புப் பிடியாய் கேள்வி கேட்க ஆரம்பித்தான். விஷ்ணுவின் முதல் கேள்வியே சுந்தருக்குச் சுருக்கென்று இருந்தது.

‘‘மறுபடியும் சொல்லு..’’ என்று சுந்தர் கேட்டான்.

‘‘உன்னோட நடவடிக்கை நல்லா இல்லையே..’’ என்று விஷ்ணு சொன்ன வார்த்தைகளில் சுந்தருக்குக் கோபம் விர் என ஏறியது.

‘‘இப்ப..என்ன சொல்ற..? விஷ்ணு..’’என்ற விடை சுந்தருக்கு முன்னைவிட கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.

‘‘இல்ல. சொன்னா நீ.. திட்டுவ. அதான்..’’ என்று விஷ்ணு நீட்டி முழங்கினான்.

‘‘எதாயிருந்தாலும் நேரா.. சொல்லித் தொலைய வேண்டியது தானே..அதென்ன குறுக்குக் கேள்வி..’’ என்று பளிச்சென சுந்தர் சொன்னான்.

‘‘அந்த நட்சத்திரா விசயம் தான்..’’ என்றான் விஷ்ணு .

‘‘அதான் நட்சத்திரா விசயம் இந்த உலகத்துக்கே தெரிஞ்சதுதானே..! – நீ என்ன புதுசா சொல்லப் போற..?’’ என்று சுந்தர் கொஞ்சங்கூட வருத்தமில்லாமல் சொன்னான்.

‘‘அப்பிடியில்ல சுந்தர். ஒனக்குன்னு ஒரு இது இருக்கு.. சமுதாயம், பிரண்ட்ஸ், சொந்த பந்தம், அப்பிடி இப்பிடின்னு கேலி பேசுவாங்க.. ஏன்? நட்சத்திரா தான் பொண்ணா..? உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா..? நட்சத்திரா வேண்டாம்..’’ என்று மூர்க்கமாக பேசினான் விஷ்ணு.

‘‘இப்ப என்ன..அவ கற்ப நீங்க சோதனை போடணும். அவ எத்தனை ஆம்பளைங்க கூட வாழ்ந்திருக்கான்னு லிஸ்ட் கேக்கணும்.. அவ இந்த சமுதாயத்துக்கு ஏற்றவ இல்ல.. பல பேரு கூடப் பழகுனவ, ஸி இஸ் எ ப்ராஸ்டிடியூட்டுன்னு சொல்லணும் அப்பிடித்தானே விஷ்ணு..’’ சத்தம் போட்டு உக்கிரம் கொண்டவனாய்ப் பேச ஆரம்பித்தான் சுந்தர்.

‘‘ஏய் என்ன.. இவ்வளவு டேரிங்கா பேசுற..?’’ என்று விஷ்ணு கேட்டான்.

‘‘ஆமா இதத்தானே..? நீங்க என்னோட நட்சத்திரா மேல குற்றம் சாட்டப் போறீங்க..? இங்க பாரு விஷ்ணு.. என்னோட நட்சத்திராவப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவ ஒடம்ப வேணும்னா இங்க நெறையா பேரு கொத்தியிருக்கலாம்.. ஆனா..! அவளோட மனச எவனும் தொட்டதில்ல.. அப்பிடியே..! எவனாவது தொட நினைச்சாலும் அது அவனால முடியாது. ஏன்னா நட்சத்திராவோட மனசு என்கிட்ட இருக்கு..’’ என்று சுந்தர் சொல்லும் போதே அவன் கண்கள் இரண்டும் கலங்கியிருந்தன.

‘‘உஷ்..’’ எனப் பெருமூச்சு விட்டான் விஷ்ணு – ‘‘நீ.. திருந்தவே மாட்ட..’ என்று தலையில் அடித்துக் கொண்டான் விஷ்ணு.

‘‘நீ.. என்ன வேணும்னாலும் சொல்லு விஷ்ணு.. என்னோட நட்சத்திரா என் இதயம்.. என் உலகம்..’’ என்று உற்சாகம் பொங்கப் பேசினான் சுந்தர். உடனே வேற எதுவும் பேசாமல் விஷ்ணு அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான். விஷ்ணு போகவும் சுந்தரின் எண்ணம் சுர் எனச் சுருங்கியது.

‘ஏன் நட்சத்திராவ இப்படிப் பேசுறாங்க.. அவள காதலிச்சிட்டு ஏமாத்துன ஆளுகள பேச மாட்டேங்கிறாங்க.. அவ கூட உறவாடுன ஆம்பளைங்கள கேக்க மாட்டேன்கிறாங்க.. ஆனா..! நட்சத்திரா மட்டும் தான் குற்றவாளி மாதிரி பேசுறாங்களே..! – இது தவறு..’ என்று எண்ணிக் கொண்டிருந்த போது எதிரில் நட்சத்திரா வந்து நின்றாள்.

அவள் வந்து நிற்கும் போதே, வசந்தம் வந்ததாய் உணர்ந்தான் சுந்தர். நட்சத்திராவை உயிர் வரை ஊடுருவிப் பார்த்த சுந்தரைச் சட்டெனப் பார்த்தாள் நட்சத்திரா,

‘‘என்ன யோசனை டார்லிங்..’’அவள் சொல்லும் போதே நட்சத்திராவின் பேச்சில் கொஞ்சம் கிறக்கம் இருந்தது.

‘‘நத்திங்.. நட்சத்திரா..’’ – என்று சுந்தர் சொன்னபோது கட கடவெனச் சிரித்தாள் நட்சத்திரா –

‘‘ஏன் இப்பிடி சிரிக்கிற..?’’ சுந்தர் கேட்க அப்படியிருந்தும் அவள் சிரிப்பின் நீளம் கூடியதேயொழிய குறைந்த பாடில்லை பிறகு சிறிது நேரம் கழித்து சிறிப்பை அடக்கிக் கொண்டு

‘‘இல்ல..நத்திங்.. என்றால் எதுவுமில்லன்னு தானே அர்த்தம்.. – அப்ப நான் எதுவுமில்லையா..? சுந்தர்..’’ என்று அவன் தோள் பற்றி நட்சத்திரா கேட்டபோது சுந்தரின் பூமி, தட்டையா? உருண்டையா? என்ற விவாதப் பொருளுக்குள் வந்தது.

‘‘அப்பிடியெல்லாம் இல்ல நட்சத்திரா.. -யூ ஆர் எ ஹோல்வேல்ட் இன் மை லைப் … பட், நான் சொல்ற நத்திங்க்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு..’’ என்று சுந்தர் சொன்னபோது‘‘ஓ..அப்பிடியொரு அர்த்தம் இருக்கா..?’’ என்று சுந்தரைப் பார்த்து மென்முறுவல் பூத்தாள் நட்சத்திரா.

‘‘எஸ்..’’ என்று கண்ணசைத்தான் சுந்தர். நீண்ட நேரம் சிரித்ததால், நட்சத்திராவின் கண்கள் நீரால் நிரம்பி வழிந்தன. அது அழுகையா? ஆனந்தக் கண்ணீரா? என்பதன் அர்த்தம் சுந்தருக்குப் புரியவே இல்லை.

‘‘நட்சத்திரா..’’ – என்று சுந்தர் கூப்பிடும் வார்த்தை நங்கூரம் அடித்தது போல ‘நச்’ சென்று இருந்தது.

சுந்தரை உற்று நோக்கினாள் நட்சத்திரா.

‘‘என்ன சுந்தர்.. உன்னோட பார்வையும் வார்த்தையும் எனக்கு வேறொரு..அர்த்தத்தைத் தருதே சுந்தர்..’’என்று நெக்குருகிக் கேட்டாள் நட்சத்திரா.

இல்லையே ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் சுந்தர்

இல்ல சுந்தர், நேத்து மாதிரி நீ இல்ல, ஒனக்குள்ள ஒரு மாற்றம் இருக்கு – அத உன்னோட முகமே சொல்லுது என்று நட்சத்திரா சொன்னபோது சுந்தருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

‘‘போதும் சுந்தர்.. இந்த ரெட்டை நாடகம் – இந்த வாழ்க்கை எனக்கு போரடிச்சுப் போச்சு.. – இந்த மனுசங்களப் பாத்தாலே எனக்கு வெறுப்பா இருக்கு.. – நான் தான் சொன்னேனே.. – நான் இப்பிடித்தான்.. – என்னோட உலகம் இப்பிடித்தான்.. – என்னோட லைப் ஸ்டைல் இப்படித்தான்.. – என்னோட முன் வாழ்க்கை எப்படியோ ஆரம்பிச்சு.. எப்பிடியோ முடிஞ்சு போச்சு.. – நான் தப்பானவ தான், நான் கற்போட தான் இருக்கேன்னு உங்கிட்ட சர்டிபிகேட் கேக்கல..என்னோட வறுமை, என்னோட குடும்பம் இதெல்லாம் தான் என்னோட வாழ்க்கையப் புரட்டிப் போட்டுச்சு..மத்தபடி என்னோட உடம்பு வேணும்னா..! நிறையப் பேரு, பாத்திருக்கலாம்; தொட்டிருக்கலாம். என்னோட உடம்ப ஆராய்ச்சி கூடப் பண்ணியிருக்கலாம் – ஆனா..! என்னோட மனச இதுவரைக்கும் நான் யாருக்கும் குடுத்ததில்ல சுந்தர்.. என்னோட மனச….. யாருக்கும் குடுத்ததில்ல.. முதன் முதலா என்னோட மனச உங்கிட்டத் தான் குடுத்திருக்கேன். அந்த மனசில நீ மட்டும் தான் இருக்க சுந்தர். நீ மட்டும் தான் இருக்க..’’ என்று நட்சத்திரா அழுது புலம்பிய போது சுந்தரின் இதயம் எத்தனையோ லட்சம் துண்டுகளாய் உடைந்து நொறுங்கியது.

‘நட்சத்திரா.. இந்த உலகமே என்ன சொன்னாலும் பரவாயில்ல.. நீ.. தான் என்னோட காதலி, நீ.. தான் என்னோட மனைவி..’ என்று ஓங்கிக் கத்தியபடியே நட்சத்திராவை அனைத்துக் கொண்டான்.

இணைந்த இரு இதயங்கள் இல்லறம் புக ஆரம்பித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *