செய்திகள்

2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

முதல் இன்னிங்சில் இந்தியா 337 ரன்களுக்கு ஆல் அவுட்

சென்னை, பிப். 8–

சென்னையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 337 ரன்களில் ஆல் அவுட்டானது.

2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினார்கள்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 5–ந் தேதி தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 180 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 555 ரன்கள் குவித்தது.அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் அடித்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 190.1 ஓவரில் 578 ரன்களுக்கு அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிப்லி 87, ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3, இஷாந்த் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்தியா மோசமான தொடக்கம்

இதைத் தொடர்ந்து 579 ரன் இலக்குடன் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்கார்களாக ரோகித் சர்மா, ஷுப்மன் கில் களம் இறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்களுடனும், ஷுப்மன் கில் 29 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னிலும் அவுட்டாகி இந்திய அணிக்கு மோசமான தொடக்கத்தை கொடுத்தனர். அதன் பின்னர் ரிஷப் பண்ட் களம் இறங்கினார். ரிஷப் பந்த், புஜாரா பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடி பார்ட்னர்ஷிப் அவர்கள் இருவரும் தலா 91 மற்றும் 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் இணைந்து ரன்களை குவிக்கத் தொடங்கினர். நேற்று 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களுடனும் (68 பந்து, 5 பவுண்டரி), அஸ்வின் 8 ரன்னுடனும்(54 பந்து) களத்தில் இருந்தனர்.

4வது நாள் ஆட்டம்

இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாஷிங்டன் சுந்தர் இன்றைய ஆட்டத்தில் 82 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 9 பவுண்டரிகளும் அடக்கம். வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் ஆகியோர் 64 மற்றும் 31 ரன்களை அடித்து பார்ட்னர்ஷிப்பில் 95 ரன்களை எடுத்து அணியை சிறப்பாக கொண்டு சென்றனர். 86.2வது ஓவரில் 91 பந்துகளில் 31 ரன்களை எடுத்த அஸ்வின் ஜாக் லீச் பந்துவீச்சில் அவுட்டான நிலையில் களம் இறங்கிய நதீம் 12 பந்துகள் ஆடி ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அதன் பின்னர் களம் இறங்கிய இஷாந்த் சர்மா 11 பந்துகளில் 4 ரன்களுடனும், பும்ரா 2 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் அடித்தது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 138 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியின் டாம் பெஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர், ஆண்டர்சன், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

ஃபாலோ-ஆனைக் கடப்பதற்கு இன்னும் 42 ரன்கள் தேவைப்பட்டபோதிலும் இந்திய அணிக்கு ஃபாலோ ஆன் வழங்காமல் 241 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி ஆகியோர் களம் இறங்கினர். இந்திய அணியின் சார்பில் முதல் ஓவரை தமிழக வீரர் அஸ்வின் வீசினார். முதல் பந்தை ரோரி பர்னஸ் அடிக்க முயன்ற போது அதனை ரஹானே கேட்ச் பிடித்தார். இதனால் ரோரி பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலே அவுட்டாகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய டேனியல் லாரன்ஸ் சிப்ளியுடன் இணைந்து ரன் எடுக்க துவங்கினார். 10.6வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை சிப்ளி (37 பந்துகளில் 16 ரன்) அடிக்க முயன்ற போது அவுட்டாகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். 13வது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் அடித்திருந்தது.

இதைத் தொடர்ந்து 15.3வது ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய பந்தை அடிக்க முயன்ற டேனியல் லாரன்ஸ் (47 பந்துகளில் 18 ரன்) எல்பிடபிள்யூ ஆகிய வெளியேற, அதன் பின் களம் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 12 பந்துகளில் 7 ரன் அடித்த நிலையில் 18.1வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை அடிக்க முயன்று ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் களம் இறங்கிய ஓலி போப் ஜோ ரூட்டுடன் இணைந்தார். 20 ஓவரில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *