செய்திகள்

19 பேரை பலிகொண்ட பட்டாசு ஆலை விபத்தில் இன்ஜினீயரிங் மாணவி

விருதுநகர், பிப். 13–

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியுடன் இயங்கும் இந்த ஆலையில் 20க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், வழக்கம் போல் தொழிலாளர்கள் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் தற்போது வரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிர்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கருகிப்போன உடல்கள்

இவர்களில் 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகியுள்ளது. 22 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் 7 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து விருதுநகர் கலெக்டர் கண்ணன் கூறுகையில், “இறந்தவர்களின் உடல்களை விரைந்து பிரேதப் பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில உடல்கள், ஆணா, பெண்ணா என்பதை கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. உறவினர்களை வைத்துச் சரி பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில், 20 வயது மாணவி ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பின் நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் சந்தியா. பிஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்ததால், பட்டாசு ஆலையில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற விபத்தில் சந்தியாவும் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *