நியூயார்க், நவ. 24-
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கொரோனா நெருக்கடி மிகுந்த இக்காலத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரியான எலான் மஸ்க் சொத்து மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் உயர்ந்ததையடுத்து, அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்தி 3ம் இடத்தைக் கைப்பற்றிய எலான் மஸ்க், தற்போது 127.9 பில்லியன் அமெரிக்க டாலருடன் 2ம் இடத்திற்கு முன்னேறி, பில்கேட்ஸ் இடத்தைக் கைப்பற்றியுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 182 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறார்.