நாடும் நடப்பும்

தமிழகத்தில் மின்னணு அறிவியல் புரட்சி: பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தி வரும் பழனிசாமி – பன்னீர்செல்வம் டீம் சாதனை

நம் நாடு விவசாயப் பொருளாதாரத்தை சார்ந்த நாடு. ஆனால் விவசாயிகளின் நிலை தான் பரிதாபமானதாகவே இருக்கிறது. பல ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ள விவசாய உபகரணங்கள் இன்னும் அப்படியே உபயோகத்தில் இருக்கிறது.

கணினி யுக தொழில் நுட்பங்கள் முழுமையாக நுழைந்து விடாமல் இருக்கும் ஓர் முக்கிய துறை விவசாயமாகவே இருக்கிறது. ஏனைய வாழ்வியல் சமாச்சாரங்கள் நவீனமாகி விட்ட நிலையில் பணிகள் காரணமாகவும் அதிகப்படி ஈர்ப்பு பல விவசாயம் அல்லாத பிற துறைக்களுக்கு என்ற நிலை இருப்பதால் அடுத்த தலைமுறை விவசாயிகள் நிலத்தையும் வானத்தையும் பார்த்தபடி வாழ்வியலை தொடர விரும்புவது குறைந்து வருவதும் புரிகிறது.

இந்நிலை மாறினால் மட்டுமே விவசாயமும் நமது அன்றாட வாழ்வும் சிறக்கும்! நல்ல விளைச்சல் காண ஆரம்பித்தால் விவசாயிக்கும் லாபம், சமுதாயத்திற்கும் ஆரோக்கியமான உணவை கட்டுபடியாகும் விலையில் பெற முடியும்!

இந்தச் சங்கிலி தொடர் வாழ்வியலில் சாமானிய விவசாயிகளை தொழில்நுட்ப வல்லமை பெற வைப்பதில் சிக்கல்கள் இருக்கும். காரணம் பண்டைய உழவு உபகரணங்களை விட்டுவிட மனம் இருக்காது. கையில் போதிய நிதி வசதியும் இல்லாத ஓர் இக்கட்டையும் சந்திப்பார்கள்.

மெல்ல விவசாயிகளே தொழில்நுட்ப வல்லமை கொண்டவர்களாக உயர்ந்துவிட்டால் தமக்கு வேண்டிய வசதிகளையும் விவசாயம் செழிக்க அதை எப்படி உபயோகிப்பது என்ற அறிவியல் அனுபவ அறிவுத் திறனை உபயோகிக்க துவங்கி விடுவார்கள்.

அந்த வரிசையில் ஒடிசாவை சார்ந்த சுஷில் அகர்வால் என்ற விவசாயி நாட்டிற்கே நல்ல உதாரணமாக இருக்கிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு இருந்தபோது இவர் வீட்டில் இருந்தபோது பல்வேறு தொழில்நுட்ப புத்தகங்களை படித்து வந்துள்ளார்.

ஊரடங்கு விலக்கப்பட்ட நாட்கள் முதலாக பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து வந்தால், மின்சாரத்தில் இயங்கும் விவசாய உபகரணங்கள் உருவாக வேண்டுமென்று எண்ணியுள்ளார். ஒரு கட்டத்தில் அவற்றை உருவாக்க முயற்சிகளையும் எடுக்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது தான் ஒரு மின்சாரத்தில் இயங்கும் காரை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார். இன்டர்நெட்டில் இருந்த வீடியோக்கள், புத்தகங்களை கொண்டு மின்சார காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தும் உள்ளார்.

அவர் , ‘‘ இந்தக் காரை சூரிய சக்தி பேட்டரி உதவியுடன் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளேன். 850 வாட்ஸ் மோட்டார், 100 ஏஎச்/54 வோல்ட்ஸ் பேட்டரியில் இந்தக் காரை தயாரித்துள்ளேன். இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. தூரம் பயணிக்கலாம். இந்த பேட்டரி முழுவதும் சார்ஜ் ஆக 8.5 மணி நேரம் ஆகும். மெதுவாக சார்ஜ் ஆகும் பேட்டரி என்பதால், இது 10 ஆண்டுகள் வரை உழைக்கும்.

இந்தக் கார் தயாரிக்கும் பணி முழுவதையும் என்னுடைய வீட்டில் உள்ள பணி மனையிலேயே முடித்துவிட்டேன். இதற்காக 2 மெக்கானிக் உதவி செய்தனர் என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத இது போன்ற ஓரிரு வாகனத்தை ஓரு விவசாயியே உருவாக்கும் போது விரைவில் விவசாய உபகரணங்கள் புதிய சக்தியுடன் பரிணமிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இப்படிப்பட்ட தொழில் புரட்சிகள் தமிழகத்தில் ஏற்பட கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுப்பதும் அதன் பாதிப்பில் இருந்த நோயாளிகளை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்புவதிலும் கவனம் செலுத்தி வந்த போதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிகளுக்கு தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்தி கொள்கையையும் வெளியிட்டுள்ளார்கள்.

நாட்டின் மொத்த எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 16 சதவீதமாகும். கணினி, மின்னணுவியல், ஒளியியல் போன்ற பொருட்களின் உற்பத்தியில் தேசத்திலேயே 2–வது இடத்தில் இருக்கிறது.

வருங்காலத்தில் உருவாக இருக்கும் அடுத்த தலைமுறை உபகரணங்களை வடிவமைக்கவும் நாட்டிலேயே இத்துறையில் முதன்மை மாநிலமாக உயர்த்தவும் இப்படி ஓர் கொள்கை முழக்கத்தை அவர்கள் அறிவித்து செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தின் வளர்ச்சிக்கு ‘விஷன் 2023’ என்ற தொலைநோக்குக் கொள்கை பிரகடனம் செய்தது போல், அவர் வழியில் எடப்பாடி தலைமையிலான அரசு மின்னணு வன்பொருள் உற்பத்தி கொள்கையை அறிவித்துள்ளார்.

இதன் சாராம்சம்:

* 2025–க்குள் தமிழகத்தின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தியை ரூ.8 லட்சம் கோடியாக உயர்த்துவது.

* நாட்டின் மின்னணு ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கை 25 சதவீதமாக உயர்த்துவது.

* தமிழகத்தில் ‘செமி கண்டக்டர்’ புரட்சியை ஏற்படுத்துவது.

* 2024–க்குள் 1 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி தந்து இத்துறைக்கு நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள் படையை உருவாக்குவது.

* எல்இடி, சிப்புகள், பி.சி.பி.க்கள், சோலா பேட்டரிகள், மோட்டார் வாகன மின்னணுவியல், மருத்துவ மின்னணுவியல் போன்ற கருவிகள் தயாரிப்பவர்களுக்கு விசேஷ ஊக்கமும், அழைப்பும் தந்து, மதிப்பூட்டல் மின்னணு சாதனங்களை தமிழகத்தில் தயாரிப்பது.

* மின்னணு துறையில் புரட்சி ஏற்படுத்த ஆராய்ச்சிகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மேம்பட்ட ஊக்கமும் வரவேற்பும் தருவது.

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட கொள்கைகளை அறிவித்தனர். அது மட்டுமின்றி முதலீடுகளுக்கும் பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளார்கள்.

அதன்படி இத்துறைக்கு 30 சதவீத மானியம் உண்டு. தொழில் துவங்க மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் தருவது, மின்னணு உற்பத்தியாளர்களுக்கு நிலவரிச் சுமையை பாதிக்குப்பாதியாய் குறைத்தும் உள்ளார்கள். மேலும் பல்வேறு பிற்படுத்தப்பட்ட பகுதியில் 100 சதவீத வரி விலக்கும் தந்துள்ளனர்.

இப்படி பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளதால் லாபகரமாக இயங்காத பிற துறையில் உள்ளவர்கள் மின்னணு உற்பத்திப் புரட்சியில் ஈடுபட களம் தமிழகத்தில் தயாராகவே இருக்கிறது.

ஒடிசாவை சார்ந்த சாமானிய விவசாயி சுஷில் அகர்வால் போன்றே தமிழகத்திலும் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் விவசாயிகளும் மீன்பிடி தொழிலாளர்களும் ஏனைய தினக்கூலி சம்பளதாரர்களும் நேரிடையாக நுழைந்து தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கே ஊக்கம் தரும் பணியில் நுழைய தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பல்வேறு புரட்சி திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளனர்.

அவர்களது நல்லாட்சி தொடர்ந்தால் தமிழகம் 2030 ல் உலகமே வியந்து பாராட்டும் உன்னத பொருளாதாரமாக உயர்ந்து இருக்கும்; இருக்க வேண்டும் என்றால் ஏப்ரல் 6 அன்று நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழு மனதோடு அண்ணா தி.மு.கவின் ஆட்சியே மீண்டும் தொடர வாக்களித்து ஆட்சிப் பொறுப்பில் நீடிக்க வைத்தாகவேண்டும்; வைக்கும் என்பது தான் நிதர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *