முழு தகவல்

தேர்தல்: நடைமுறைகளும் – வளர்ச்சியும்!

தேர்தல் என்பது சமூகத்தை வழிநடத்த செய்யப்பட்ட ஏற்பாடாகும். ஆதி மனித சமூகத்தில், அவர்களின் தேவைகளை ஒழுங்குபடுத்தவும் நிறைவேற்றவும் ஒரு அமைப்பு முறை தேவைப்பட்டது. அந்த அமைப்பில் யாரை அமர்த்தலாம் என முடிவு செய்ய, பொது மக்களின் கருத்தை அறிய, ஏற்படுத்தியது தான் தேர்தல் நடைமுறை என்பது. மன்னராட்சி காலத்திலேயே கூட, ஊராட்சி அளவில் சமூகத்தை ஒழுங்குபடுத்த தேர்தல்கள் நடந்து வந்துள்ளது என்பது குடவோலை முறை மூலம் தெரிய வருகிறது. இந்த தேர்தலுக்கான நடைமுறைகளும் விதிமுறைகளும், நாட்டுக்கு நாடு, காலத்துக்கு காலம், தேவைகளுக்கு ஏற்ப சீர்திருத்தமும் மாற்றமும் பெற்றே வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குடவோலை முறைத் தேர்தல்

குடவோலை என்பது சோழர்கள் காலத்தில், நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்கப் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். இடைக்காலச் சோழர்களின் ஆட்சி காலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை இந்த குடவோலை முறை தேர்தல் நடைமுறையில் இருந்தது.

இதற்கான ஆதாரமாக கி.பி. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்திற்கு உட்பட்ட மூன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இதில் இரண்டு காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன. இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் முதலாம் பராந்தக சோழன் ஆவான்.

தேர்தல் முறை

குடவோலை தேர்தல் முறையின் விதிகளுக்கு உட்பட்ட குற்றமற்றோரின் பெயர்களையும் தகுதியுள்ளோர்களின் பெயர்களையும் ஓலைகளில் எழுதி மக்கள் எதிரில் அவற்றைக் குடத்தில் இட்டுக் குலுக்குவார்கள். பின்னர், கள்ளம் கபடம் ஏதும் அறியாத சிறு பிள்ளையைக் கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்வர். அந்த ஓலையில் வரும் பெயருடைய நபரையே தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிப்பார்கள். இந்த குடவோலை முறையில் பூசலின்றி தேர்தல் நடைபெற்றது என்பதை கல்வெட்டு வாயிலாக நாம் அறியலாம்.

பொது வேலைகள் பல வாரியங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாரியத்திற்கும் குடவோலை முறையில் தேர்தல் நடைபெற்றது. தோட்டவாரியம் (தோட்டப் பணிகளை கண்காணிக்க), ஏரிவாரியம் (நீர்நிலைகளை கவனிக்க), பொன் வாரியம் (தங்கத்தின் தரத்தை காண), பஞ்சவார வாரியம் (நில வரி வாரியம்) என்று பல வாரியங்கள் இருந்துள்ளது.

தகுதியும்- தகுதியின்மையும்!

வேட்பாளராக நிற்க ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளாக, தனது நிலத்திலேயே வசிக்க வீடு கட்டிக் கொண்டுள்ளவர், 35 வயதிலிருந்து 70 வயதிற்குட்பட்டவர், 3 ஆண்டுகளுக்குள் வாரியப்பணி புரியாதவர், அவர்கள் தொழிலில் நிபுணனாக இருத்தல் வேண்டும், பொருள் சுத்தம் மனச் சுத்தம் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி கற்றிருக்க வேண்டும். நேர் வழியில் சம்பாதித்த பொருளை உடையவனும் நல்ல மனம் உடையவனாகவும் இருக்க வேண்டும். மிகமிக இன்றியமையாத தகுதி ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடுத்த மூன்று தேர்தல்களுக்கு நிற்க முடியாது.

தகுதியின்மையாக, வாரியங்களுக்குக் கணக்கு காட்டாது இருந்தவன், கையூட்டு (லஞ்சம்) செய்தவன், பிறரின் பொருள் பறித்தவன், பாதகம் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தன் ஆனவன், ஒருவரின் சிற்றவை, பேரவை மக்கள், அத்தை மாமன் மக்கள், தாயோடு உடன் பிறந்தான், தந்தையோடு உடன் பிறந்தான், உடன் பிறந்தான், பிள்ளை கொடுத்த மாமன் என்று, பல உறவு முறையிலும் தொடர்பிலும் வருவோரும் சேர்ந்தே தகுதி இழக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவிக்காலத்தில் (ஓராண்டு) இடையில் தவறு செய்தால் உடனே பதவியிலிருந்து விலக்கக் கூடிய நடைமுறை அமைந்திருந்ததையும் உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது

சென்னை மாகாண தேர்தல்-1920

1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பலனாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன.

சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரிட்டிஷ் ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. அதுவரை ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக் கூடிய சட்ட மன்றம் விரிவு படுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.

சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல்-1920

அப்போது, தமிழகம், தமிழ்நாடு என பெயர்பெறவில்லை. சென்னை மாகாணம் (Madras Presidency) என்றே இருந்தது. பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர்தான் தமிழ்நாடு என பெயர்சூட்டப்பட்டது. 1920 இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. அப்போது இந்த மாகாணத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் பிரதமர் என்றே அழைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறை அமல்படுத்தப்பட்ட பின், முதல் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது.

வகுப்புவாரித் தேர்தல்

இந்திய அரசாங்கச் சட்டம், 1919 இன் படி, சென்னை மாகாணத்தின் சட்ட சபையில் ஒரு அவை மட்டும் இருந்தது. கவுன்சில் என்றழைக்கப்பட்ட அந்த அவையில் மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் (சில தொகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தன).

இத்தொகுதிகளுக்குள் பிராமணர்கள், பிரமணரல்லாதோர், முஸ்லீம்கள், கிருத்துவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்ககள் என பல்வேறு பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்கள்; 5 பேர் தலித்துகள். வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது.

இரட்டை ஆட்சி முறையின் கீழ், முதல் தேர்தல் நவம்பர் 1920 இல் நடத்தப் பட்டது. நான்கு கோடி மக்கள்தொகை கொண்ட சென்னை மாகாணத்தில் 12,48,156 பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். அவர்களுள் 3,03,558 பேர் தேர்தலில் வாக்களித்தனர். நியமிக்கப்பட்ட 18 உறுப்பினர்கள் நீதிக்கட்சிக்கு ஆதரவளித்ததால், சட்டமன்றத்தில் அதன் பலம் 81 ஆக உயர்ந்தது.

நீதிக்கட்சி பெருவாரியான இடங்களில் வென்றதால், ஆளுனர் வில்லிங்டன் பிரபு, அக்கட்சியின் தலைவர் தியாகராய செட்டியை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால் அவர் தனக்கு பதில் ஏ. சுப்பராயுலு ரெட்டியாரை நியமிக்குமாறு பரிந்துரைத்ததால், ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரானார். பனகல் அரசருக்கு சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகள் வழங்கப்பட்டன. புதிய அமைச்சரவை டிசம்பர் 20, 1920 இல் பதவியேற்றது. பதவியேற்ற சிறிது காலத்திற்குள் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் ரெட்டியார் பதவி விலகினார். அவருக்கு பதிலாக ஜுலை 11, 1921 இல் பனகல் அரசர் முதல்வரானார்.

பெண்களுக்கு வாக்குரிமை

இந்த சட்டமன்றத்தின் பதவிக்காலம் செப்டம்பர் 11, 1923 இல் முடிவடைந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்கு பெருமளவு அதிகாரம் வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. 1916 இல் பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1920 இல் ஆட்சிக்கு வந்தது. 1926-30 இடைவெளியைத் தவிர 1937 வரை சென்னை மாகாணத்தை ஆண்டது. நீதிக்கட்சி அரசின் சில திட்டங்கள் இன்றும் அமலில் உள்ளன. செப்டம்பர் 16, 1921 இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துவத்திற்கான அரசாணை (Communal GO # 613) பிறப்பிக்கப்பட்டது.

இதுவே தற்போது இந்தியாவில் பின்பற்றப்பட்டுவரும் இட ஒதுக்கீடு கொள்கையின் முன்னோடி. பனகல் அரசரின் நீதிக்கட்சி அரசே இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றி இந்து கோவில்களை நிர்வகிக்க இந்து அறநிலையத் துறையினை தோற்றுவித்தது. இச்சட்டம் டிசம்பர் 18, 1922 இல் தாக்கல் செய்யப்பட்டு 1925 இல் நிறைவேற்றப்பட்டது.

இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவதைத் தடை செய்திருந்தது. ஏப்ரல் 1, 1921 இல் நீதிக்கட்சி பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த தடையை நீக்க, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பலனாக, 1926 இல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சென்னையின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரானார். தமிழ்நாட்டில் இப்போது வழக்கிலிருந்து வரும் சத்துணவுத் திட்டம் முதன் முதலாக நீதிக்கட்சி அரசால் காலை உணவுத் திட்டமாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைக்கு பிறகு இந்திய தேர்தல்

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது நாட்டின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு பொறுப்பேற்றார். பிரதமராக நேரு பொறுப்பேற்றிருந்தாலும், இடைக்காலத்துக்கு நிறுவப்பட்ட அமைச்சரவைக்குத் தலைவராகவே இருந்தார். இந்தக் காலத்தில் பிரிட்டிஷ் சட்டங்களே இந்தியாவில் பின்பற்றப்பட்டன. 1950 ஜனவரி 26-ல் இந்தியா குடியரசு நாடாக மாறியது. இந்தியாவுக்கென உருவாக்கப் பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதல் பொதுத் தேர்தல் அதன் பிறகே நடத்தப்பட்டது.

68 கட்டங்கள் – 4 மாதங்கள்

நாடு விடுதலை அடைந்த பிறகு, முதல் மக்களவைத் தேர்தலை 1951-52-ல் நாடு எதிர்கொண்டது. மிகப் பெரும் சவால்கள் நிலவிய அந்தக் காலகட்டத்தில் 68 கட்டங்களாக இந்தியாவில் முதல் தேர்தல் நடைபெற்றது. 1951 அக்டோபர் 25-ல் இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்கிய முதல் கட்டத் தேர்தல், 1952 பிப்ரவரி 21-ல் உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்டமாக நிறைவு பெற்றது. இந்தியாவில் மிக அதிக நாட்கள் நீண்ட தேர்தல் இதுதான். இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற சுகுமார் சென், முன்அனுபவம் ஏதுமின்றி வெற்றிகரமாகத் தேர்தலை நடத்திக் காட்டினார்.

சுதந்திரத்துக்கு முன்பும் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு தேர்தலை நடத்தியிருந்தாலும், அப்போது சென்னை மாகாணத்தைத் தவிர இந்தியாவில் வேறுஎங்கும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. மேலும், பிரிட்டிஷ் சட்டத்தின்படியே தேர்தல்கள் நடத்தப் பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில்தான் 1951-ல் முதல் தேர்தலை இந்தியா எதிர்கொண்டது.

முதலில் தேர்தலில் வாக்குரிமை வயதை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 21 வயது நிரம்பிய எல்லோருக்கும் வாக்குரிமை என 1950-ல் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்கள், கிராமங்கள் எதுவும் வளர்ச்சியடையாமல் இருந்தன. எழுத்தறிவு சதவீதமும் குறைவாக இருந்தது. அப்போது 15 சதவீதத்தினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்கிறது புள்ளிவிவரம். எனவே, தேர்தலைப் பற்றியும் வாக்குரிமை பற்றியும் பாமர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இருந்தது.

இரட்டை உறுப்பினர்-இரட்டை வாக்கு

இப்போது இருப்பதுபோல முதல் தேர்தலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளும் இருந்திருக்கவில்லை. அப்போது 489 தொகுதிகள் மட்டுமே இருந்தன. முதல் மக்களவைத் தேர்தலில் தனித் தொகுதிகளுக்கு வேறொரு நடைமுறை பின்பற்றப்பட்டது. 489 தொகுதிகளில் தலித்துகள், பழங்குடிகளுக்கு 94 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித் அல்லது பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் பின்பற்றப்பட்டன. அதாவது, ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித் அல்லது பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது. இவர்களுக்கான ஓட்டுகளை தலித்துகள், பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே அளிப்பார்கள். இப்படி சில தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தலில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 84 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 489 மக்களவைத் தொகுதிகளிலும் 1,849 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். நாடு முழுவதும் 17.3 கோடிப் பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். ஆனால், தேர்தலில் 45 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின. முதல் மக்களவைத் தேர்தலில் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இந்தியத் தேசிய காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. எஸ்.ஏ. டாங்கே தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

மக்களாட்சித் திருவிழா

உலக நாடுகளில் ஆட்சிமுறை என்பது, முழுமையான மக்களாட்சி (ஜனநாயகம்), குற்றமுள்ள அலலது குறைபாடுள்ள (அரைகுறை) மக்களாட்சி, கலப்பு ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. மக்களாட்சி நாடுகளில், நார்வே, அயர்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, டென்மார்க், கனடா, பின்லாந்து, சுவிட்ச்ர்லாந்து ஆகிய நாடுகள் முழுமையாக கடைபிடித்து வருகின்றன. இந்த பட்டியலில் நார்வே முதலிடம் வகிக்கிறது.

குறைபாடுகள் கொண்ட மக்களாட்சி நாடுகள் பட்டியலில் ஜப்பான், போர்ச்சுகல், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, பிரேசில், மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்தியா, இந்தப் பட்டியலில் 41வது இடத்தில் உள்ளது.

நம் நாட்டைப் போல் தேர்தலில் வாக்களிக்கமால் ஆஸ்திரேலியாவில் ஒதுங்க முடியாது. கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதும், தவறினால் தண்டனை என்பதும் விதி. கடந்த தேர்தல் அந்நாட்டில் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த கட்டாய வாக்களிக்கும் நடைமுறை பெல்ஜியம் நாட்டிலும் உள்ளது. ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படும் தேர்தல் நடத்தும் நாடுகளில், ஏழு நாடுகளில் மட்டுமே மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் மக்களாட்சி விதை

மக்களாட்சியின் அடிப்படையான இந்த நாடாளுமன்ற முறையின் விதை இந்தியாவில் ஊன்றப்பட்டது 1919 ல். பிரிட்டன் காலனியாதிக்கத்தின் கீழ் இந்தியா தொடர்ந்து நீடித்தபோதும், ஆட்சியில் இந்தியர்களுக்கும் உரிமை வேண்டும் என்ற தொடர் கோரிக்கைகளின் பலனாக, மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய சட்டமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது.

ஆர். கே. சண்முகம் செட்டியார் 

இது முழுமையான ஜனநாயக அமைப்பாக இல்லை. அனைவருக்கும் வாக்குரிமை இல்லை. வாக்குரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை இந்தியா முழுமைக்கும் சில லட்சம் பேர்தான். எனினும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் விதை இதுவே. இந்த அவையின் முதல் தலைவராக ஆங்கிலேயர் இருந்தபோதும், அதன் பிறகு இந்தியர்களே அவைத்தலைவர்களாக இருந்தனர். இரண்டாவது அவைத்தலைவராக இருந்தவர் வித்தல்பாய் பட்டேல். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே.ஷண்முகம் செட்டி மார்ச் 1933 முதல் டிசம்பர் 1934 வரை இந்த அவையின் தலைவராக இருந்தார்.

ஆறாவது மத்திய சட்டமன்றம் நடப்பில் இருந்தபோது, 1947 ஆகஸ்டு 15-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்தது. அதன் பணிகளை இந்திய அரசமைப்பு மன்றமும் (Constituent Assembly), பாகிஸ்தானில் பாகிஸ்தான் அரசமைப்பு மன்றமும் மேற்கொண்டன.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய அரசமைப்புச் சட்ட வரைவினை இந்த மன்றம் விரிவாக விவாதித்து, திருத்தங்கள் மாற்றங்கள் செய்து 1949 நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொண்டது. அன்று முதல், இந்தியக் குடியரசின் கீழ் பொதுத் தேர்தல் நடந்து முதலாவது மக்களவை அமைக்கப்படும் வரையில் இந்த அரசமைப்புச் சட்டமன்றம் தாற்காலிக நாடாளுமன்றமாக செயல்படத் தொடங்கியது.

தேர்தல் ஆணையம்

1950 ஜனவரி 26-ம் தேதி அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முதல் நாள் ஜனவரி 25 அன்று அரசமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரே ஒரு ஆணையரைக் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு மார்ச் 21-ம் தேதி முதல் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் நியமிக்கப்பட்டார். முதல் முறையாக, சாதி, மத, பாலின, சமூக அந்தஸ்து உள்ளிட்ட எந்த பேதமும் இல்லாமல் 21 வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் அரசைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை கிடைத்தது.

இதையடுத்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான முதல் மக்களவைத் தேர்தலில் 14 தேசியக் கட்சிகள் உட்பட 53 கட்சிகள் போட்டியிட்டன. இவற்றில் அதிகபட்சமாக 479 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 44.9 சதவீத வாக்குகளைப் பெற்று 364 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காந்தியவாதி ஜே.பி.கிருபளானி தோற்றுவித்த கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி 145 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது.

வேட்பாளர்கள்: தனித்தனிப் பெட்டி

அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை தருவது குறித்து பல தலைவர்களுக்கு தடுமாற்றமும், ஐயமும் இருந்தது.

ஏனெனில் அப்போது இந்திய மக்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். பெரும்பான்மை மக்கள் வறுமையில் உழன்றனர். இவர்களால் யோசனை செய்து பொறுப்புடன் வாக்களிக்க முடியுமா, இந்த முடிவு ஜனநாயக முயற்சிக்கு வெற்றி தேடித் தருமா என்பதே எல்லோருக்கும் இருந்த ஐயம்.

இந்தப் பின்னணியில்தான், எளிய மக்கள் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக உறுதியான, மையப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தை அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பாக உருவாக்கும் திட்டத்தை அம்பேத்கர் முன்வைத்தார். எழுத்தறிவு குறைந்த, எளிய மக்கள் பங்கேற்ற தேர்தல் என்பதால் முதல் தேர்தலில் வாக்களிக்கும் முறை வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு கட்சிக்கும்/ வேட்பாளர்களுக்கும் தனித்தனி சின்னம் பொறித்த வாக்குப் பெட்டிகள் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்குச் சீட்டைப் பெறும் வாக்காளர்கள் அதனை மடித்து தாங்கள் விரும்பும் கட்சியின் பெட்டியில் போட்டுவிட்டு செல்லவேண்டும். எல்லாக்கட்சியின் சின்னங்களும் பொறித்த வாக்குச்சீட்டில் தேவையான சின்னத்தில் முத்திரையிட்டு ஒரே பெட்டியில் போடும் முறை பிறகுதான் வந்தது. அதன்பிறகு வந்ததே தற்போதைய மின்னணு வாக்கு இயந்திரங்கள்.

தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதுடன் தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றி நடக்கின்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்புள்ள சவாலான பணியாகும். எனவே, தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன.

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது. பதவி உயர்வும் அளிக்கக் கூடாது. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.

சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது. கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது. மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது. மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது.

அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது. தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

தேர்தலில் மை பயன்பாடு

தேர்தல் மை என்பது, தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்புவதற்காக, வாக்காளர்களின் விரலில் (பொதுவாக ஆள்காட்டி விரலில்) பூசப்படும் மை. இந்த மை சில வாரங்களாக நகங்களிலிருந்து அழியாமல் இருக்கும். தரப்படுத்தப்பட்ட அடையாளங்காட்டுதல் முறைமைகள் இல்லாத நாடுகளில் தேர்தல் மோசடியை தடுப்பதற்காக தேர்தல் மை ஒரு திறமான முறையாக அறியப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தும் தேர்தல் மை, மைசூர் பெய்ன்ட்ஸ் அண்டு வார்னிஷ் லிமிட்டெட் எனும் மைசூரில் இருக்கும் அரசு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.

பொதுத் தேர்தல்களில் தேர்தல் மையினை பயன்படுத்தும் நாடுகள் பின்வருமாறு: அமெரிக்க ஐக்கிய நாடுகள், அல்சீரியா, ஆப்கானித்தான், இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, ஈராக், உகாண்டா, எகிப்து, கனடா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காம்பியா, கென்யா, சாட், ஜிம்பாப்வே, சுரிநாம், செர்பியா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துருக்கி, துனீசியா, தென்னாப்பிரிக்கா, நிக்கராகுவா, நேபாளம், பாக்கிஸ்தான், பிலிப்பீன்சு, புர்க்கினா பாசோ, பெரு, பெனின், மலேசியா, மாலைத்தீவுகள், மூரித்தானியா, மெக்சிக்கோ, மொசாம்பிக், லிபியா, லெபனான், வங்காளதேசம், வெனிசுவேலா, ஜப்பான், ஜோர்தான், ஹொண்டுராஸ் ஆகியவை மை பயன்படுத்துகின்றன.

தேர்தல் வரலாறு

தேர்தல்கள் சரித்திரத்தில் மிகவும் முற்பட்ட பண்டைய கிரேக்கம் மற்றும் பண்டைய ரோமானியர்கள் காலத்திலேயே அமலுக்கு வந்து விட்டிருந்தன. மத்தியக் கால கட்டத்தில் புனித ரோமானியப் பேரரசர் மற்றும் போப்பாண்டவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்தது. அரசாங்கப் பதவிகளுக்காக பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் நவீன “தேர்தல்” முறை, 17ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை. அந்தக் கால கட்டத்தில்தான், பிரதிநிதித்துவ அரசாங்கம் என்ற கருத்தாக்கம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எழுந்தது.

வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கலாசாரக் குழுக்களை ஆக்கிரமித்திருந்த ஆண்களே, வாக்காளர் தொகுதியையும் ஆக்கிரமித்தனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு போன்றவற்றில் ஆரம்ப காலத் தேர்தல்களை நிலக்கிழார்கள் அல்லது ஆளும் வர்க்க ஆண்கள் போன்றோரே ஆக்கிரமித்திருந்தனர். இருப்பினும், 1920ஆம் ஆண்டு அளவில் மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க குடியாட்சிகள் அனைத்தும் ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிவிட்டன. பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதைப் பற்றியும் யோசிக்கத் துவங்கின.

தபால் ஓட்டுகள்

முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் டிக் அடிக்க வேண்டும். நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரில் வைத்து ஒட்ட வேண்டும்.ஸ்டேபில் பண்ணக்கூடாது.*13A என்று ஒரு படிவம் இருக்கும். அதை சரியாக பூர்த்தி செய்து தங்களுக்கு தெரிந்த சான்றொப்பமிட தகுதி உடைய நண்பர்களிடம் அந்த படிவம் 13A ல் சான்றொப்பம் வாங்க வேண்டும்.பின்னர் A என்ற ஒட்டிய இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரையும், 13A படிவத்தையும் சேர்த்து B என்ற கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும் .செய்ய கூடாதவைபடிவம் 13A ல் சான்றொப்பம் வாங்காமல் இருக்கக் கூடாது.இரண்டு அலுவலக கவரையும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.படிவம் 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாதுமேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் ஆலோசித்து தெளிவு படுத்தி கொள்ளுங்கள் .இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது

கோவிட்-19: புதிய தேர்தல் விதிகள்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்தியாவில் கோவிட்- 19 காலத்தில், பீகாரில் நடைபெற உள்ள முதல் தேர்தலில் நடைமுறைபடுத்தப்படும் புதிய விதிமுறைகள் பற்றி கூறியதாவது:-

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலத் தேர்தல் என்பது, ஒப்பீட்டு அளவில் புள்ளிவிவரங்களை பார்த்தால், இது கொரோனா தொற்று காலங்களில் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தேர்தல். பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.29 கோடி. 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். முன்பு 1500 பேர் வரையில் ஒரு வாக்குச் சாவடிக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா தொற்று வாக்காளர்கள், வாக்குப்பதிவு நாளின் கடைசி மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

85 வயதுக்கு மேற்பட்டோர், கொரானா நோயாளிகளுக்கு தபால் வாக்கு வசதி ஏற்படுத்தி தரப்படும். வீ்ட்டிலேயே சென்று வாக்குப்பதிவு செய்வதும் தேவையானால் செய்யப்படும். வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வீடுவீடாக பிரசாரம் செய்ய 5 பேர் வரை செல்லலாம். வேட்பாளர் நியமனம் மற்றும் பிரமாணப் பத்திரத்தை ஆன்லைனில் சமர்பிக்கலாம். அதேபோல், வைப்புத்தொகையை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். வேட்பு மனுவை சமர்ப்பிக்க வேட்பாளருடன் 2 நபர் மற்றும் 2 வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேர்தல்-விதிகள்

அமெரிக்க அதிபர் தேர்தல், ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளது. பல நாடுகளைப் போல அமெரிக்க அரசியல் அமைப்பிலும் இரு பெரிய கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன. அதில் ஏதேனும் ஒரு கட்சியிலிருந்து அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒன்று, அமெரிக்காவின் பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி. அடுத்து, தாராளவாத கட்சியான ஜனநாயக கட்சி.

அதிபரை தேர்ந்தெடுப்பது யார்?

நவம்பர் மாதம் அமெரிக்க பிரஜைகள் வாக்களிக்க செல்லும்போது, அவர்கள் டிரம்புக்கோ பைடனுக்கோ நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். அதற்கு பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். இதனை வாக்காளர்கள் குழு என்று சொல்லலாம். அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பது இவர்கள் பணி. இந்த வாக்களிப்பு முறை, 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

அமெரிக்கா, ஜனநாயக அமைப்பையே கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், மக்களால் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும்போது தகுதியற்ற யாரேனும் ஒருவர் அதிபராகி விடுவாரோ என்று கவலையடைந்தனர். அதற்காக அமைக்கப்பட்டதுதான் “எலக்டோரல் காலேஜ்” எனப்படும் வாக்காளர் குழு.

என்ன நடைமுறை?

ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். இன்று மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர் இருக்கிறார்கள். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றியடைய முடியும். பெரும்பாலான மாகாணங்களில், எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த வாக்காளர் குழு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும்.

உதாரணமாக, கலிஃபோர்னியா மாகாணத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு வெற்றி பெரும் வாக்காளருக்கு 99% வாக்குகள் கிடைத்தாலும் சரி அல்லது வெறும் 51% வாக்குகள் கிடைத்தாலும் சரி, அந்த மாகாணத்துக்கான மொத்த 55 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளும் வெற்றியாளருக்கே போய் சேரும். அதனால்தான் மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரால் கூட, அதிபராக முடியும்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனெனில் அவரிடம் வாக்காளர் குழுவின் வாக்குகள் பெரும்பான்மையாக இருந்தது. கடந்த தேர்தலில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றது இப்படித்தான்.

2000ஆம் ஆண்டில் குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷும் மக்களின் வாக்குகள் குறைவாக பெற்று, வாக்காளர் குழு வாக்குகளால்தான் வெற்றி பெற்று அதிபரானார். அதற்கு முன்பு கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற நிலை அமெரிக்காவில் இருந்ததில்லை. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரமானது, பெரும்பாலும் இந்த 270 வாக்காளர் குழு வாக்குகளை பெறுவதை இலக்காக வைத்திருக்கும்.

எலக்டோரல் காலேஜ் முறையை மாற்ற பல ஆண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அமெரிக்காவை போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், சிறந்த தேர்தல் முடிவுகளை பெற இதுவே சரியான வழி என்று இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

வாக்களிக்க தகுதி-முறை

அமெரிக்காவில் யாரெல்லாம் வாக்களிக்க முடியும்? வாக்களிப்பது எப்படி? அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவருக்கு 18 வயது முடிந்திருந்தால் அதிபர் தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியும். எனினும் பல மாகாணங்கள் வாக்களிக்கும் முன்னர் வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும் என சட்டம் இயற்றியுள்ளன. அதேபோல், சிறைக்கைதிகள் வாக்களிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஒவ்வொரு மாகாணமும் வெவ்வேறு விதிகள் வைத்துள்ளன.

பெரும்பாலும் சிறை தண்டனை பெற்ற கைதிகள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள். தண்டனை காலம் முடிந்த பிறகு வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு மீண்டும் கிடைக்கும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் சமீப ஆண்டுகளில் வேறு சில முறைகளும் கொண்டுவரப்பட்டன. 2016ஆம் ஆண்டு 21 சதவீத மக்கள் தபால் வழியாக தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

எழுத்து, தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *