நாடும் நடப்பும்

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தயார்

தமிழகத்தில் தேர்தல்களம் பரபரப்பாக மாறி வரும் சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் கொரோனா மகா தொற்று காரணமாக நடைமுறைப்படுத்த வேண்டிய பல்வேறு ஏற்பாடுகள் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

தற்போது எல்லா கட்டமைப்பு உரிய வகையில் இருப்பதால் தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் தேர்தல் ஆணையர் பாராட்டியும் உள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய, தேர்தல் ஆணைய பொதுச்செயலர் உமேஷ் சின்கா தலைமையில் 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவினர் சென்னை வந்தனர். இக்குழுவினர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வருமானவரித் துறையினர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.நேர்மையான, வெளிப்படையான, அனைத்தையும் உள்ளடக்கிய, அமைதியான, அனைத்து வகையான மக்களும் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய பெருந்தொற்று காலகட்டத்தில், பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. முன் திட்டமிடல்தான் தேர்தல் ஆணையத்தின் மந்திரமாகும். குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு முன்னரே தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு விடும்.

தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இது தொடர் நிகழ்வு என்பதால் தற்போதும் விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்களர் பட்டியல் வெளியிட்ட பின்பு, பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்கள் சேர்க்கப்படும். குறிப்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கும், மறு குடியமர்வு பகுதிகளில் வசிப்போருக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளோம். தவறுதலாக யார் பெயரும் நீக்கப்பட மாட்டாது.

தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தளம், சக்கர நாற்காலிகள், கழிப்பிடம், உரிய கூரையுடன் கூடிய காத்திருக்கும் பகுதி, மருத்துவம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திற னாளிகளுக்கும் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து முன்னேற்பாடுகளும் ஜனவரி 31-க்குள் முடிக்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவது ஆறுதலுக்குரியது. இருப்பினும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளின்போது அனைத்து கொரோனா தடுப்பு ஏற்பாடுகளும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போதும் அமைதியான முறையிலேயே தேர்தல்கள் நடந்துள்ளன.

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. தேர்தலுக்கு தேவையான நிதியை மாநில அரசு ஏற்கெனவே ஒதுக்கியுள்ளது.

வரும் மே 24–ம் தேதியே நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. ஆக, ஜனவரி இறுதிக்குள் அனைத்து தேர்தல் முன்ஏற்பாடுகளும் நிறைவு பெற்று தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துவிடும்.

சென்ற மாதம் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் கொரோனா காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது, அதை தமிழகத்திலும் பின்பற்றப்பட ஆலோசனை வழங்கப்படும்.

அதன்படி கொரோனா நோயாளிகள் தபால் வாக்கு பெறுவார்கள். 80 வயதை தாண்டியவர்களுக்கும் தபால் வாக்கு இருக்கும்.

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ஆயிரம் பேர் மட்டுமே என கணக்கிட்டு அதிகப்படி வாக்குச்சாவடிகள் அமைக்க இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *