செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

Spread the love

காஞ்சீபுரம், பிப்.27-–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை நேற்று காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1236 வாக்குச்சாவடிகளும், காஞ்சீபுரம் நகராட்சியில் 198 வாக்குச்சாவடிகளும், 5 பேரூராட்சிகளில் 144 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 1578 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் வாக்குச்சாவடிகளின் வரைவுப் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் 26ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதிக்குள் அதன் விவரத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), நகராட்சி ஆணையர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்), காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை கலந்தாலோசிப்பதற்கான கூட்டம் மார்ச் 2ம் தேதி காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி, கலெக்டர் தலைமையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெறவுள்ளது.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களின் மீது ஆட்சேபனைகள், கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்களது கருத்துக்களை நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *