சிறுகதை

ஈரம் | ராஜா செல்லமுத்து

Spread the love

மாலை மயங்கும் இரவு நேரம், ‘சல்..சல்..’ என கொட்டிக் கொண்டிருந்தது பருவமழை .

திறந்திருக்கும் ஜன்னலை இழுத்துச் சாத்திக்கொண்டு, குளிருக்கு இதமாக பாடலைக்கேட்டு ரசித்தபடியே நடனமாடிக்கொண்டிருந்தனர் வசதி படைத்த சிலர். உணவு வேளை நெருங்கிய போது கணவன் அசோக்கை உசுப்பினாள் மனைவி மாளவிகா.

‘‘டார்லிங் …. வாட் எபவுட் டின்னர்..’’

‘‘ம்..ம்.. – வாட் வில் டூ..’’ என்று ஆங்கில உச்சரிப்பை நுனி நாக்கில் உதிர்த்துவிட்டவர்.

‘‘வெளிய ஹெவி ரெய்ன்ல..’’

‘‘எஸ் டார்லிங்..’’

‘‘ம்.. வில் டூ ஒன் திங்.. வீ ஆர் நாட் கோயிங் டூ அவுட் சைட். சோ.. யூ டோண்ட் குக். வி வில் புக் பார் லஞ்ச்’’ என்றான் அசோக்

‘‘ஓகே.. குட் ஐடியா யூ ப்ரோசிட்..’’ என்ற மாளவிகா டின்னர் மெனுவை அடுக்கினாள். ‘‘அஞ்சு மட்டன் பிரியாணி, நாலு பிஷ் பிரியாணி, மூணு சிக்கன் பிரே, அஞ்சு நாண் , மூணு பிஷ் … நெக்ஸ்ட் – தலைக்கறி, நமக்கும் கொழந்தைகளுக்கும் சரியாய் இருக்குமில்ல..’’

‘‘ஓகே.. ஆர்டர் பண்ணலாமா..?’’

‘‘ம்..பண்ணுங்க..’’ என்று மாளவிகா அனுமதி கொடுக்க. தன் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை எடுத்து அசோக் ஆன்லைனில் ஆர்டர் செய்தான். அவன் ஆர்டர் பண்ணிக் கொண்டிருக்கும் போது அவன் குழந்தைகளும் முன்னால் வந்து நின்றனர்.

‘‘அப்பா.. எனக்கு ஐஸ்கிரீம்..’’ என்று சொன்னதும்

‘‘ஐயே..மழ..கொட்டிக்கிட்டிருக்கு.. ஒங்களுக்கு ஐஸ்கிரீமா..? வேணாம்..’’ என -அதட்டினாள் மாளவிகா

‘‘இல்ல.. வேணும்மா.. என்று குழந்தைகள் அடம்பிடிக்க அவர்களுக்கும் சேர்த்து ஆர்டர் செய்யப்பட்டன.

‘‘ஆர்டர் பண்ணுனது எப்ப வரும்..?’’

‘‘இன்னும் பத்து நிமிசத்தில..’’

‘‘அப்பிடியா..?’’

‘‘ஆமா..’’ என்று அசோக் சொல்ல மறுபடியும் ஒரு பாட்டை மாளவிகா ஆன் செய்ய குடும்பமே குதூகலத்தில் கொண்டாடிக் கூத்தாடியது.

ஆர்டர் செய்யப்பட்ட உணவு ‘ஊபர்’ வழியாகச்சென்று அது சதீஷ் என்பவரின் கணக்குக்கு போய்ச் சேர்ந்தது. கொடுக்கப்பட்ட ஆர்டர் உணவை வாங்குவதற்கு நகர்ந்தான் சதீஷ்.

மெல்லப் பொழிந்த மிதமழை இப்போது உக்கிரம் கொண்டு வலுக்க ஆரம்பித்திருந்தது. ரெயின் கோட்டை எடுத்துப்போட்டான்.

அப்பவும் அவனால் வெளியே இறங்க முடியவில்லை நாலாபக்கமும் சுழன்று சுழன்று அடித்தது மழை.

‘‘என்ன செய்யலாம்..?’’ யோசித்தவனின் புத்தியில் இப்பவேணாம். அப்பெறம் போகலாம்..’’ என்று உதித்தது.

மழையோடு இசையை ரசித்துக் கொண்டும் நடனமாடிக் கொண்டும் இருந்தனர் அசோக் குடும்பத்தார். சற்று நேரமானது. –

‘‘அப்பா..நீ.. ஆர்டர் பண்ணுனது இன்னும் வரலியே..’’ எனக் குழந்தைகள் கேட்டனர்,

‘‘வரும்மா.. ’’

‘‘சரிப்பா..’’ என்று பதில் சொல்லிய குழந்தைகள் மீண்டும் நடனமாட ஆரம்பித்தன. சற்று நேரத்திற்கெல்லாம் மனைவி மாளவிகாவும் அதே பழைய பல்லவியைப் பாடினாள்.

‘‘என்னாச்சு..?’’ இன்னும் ஆர்டர் வரலியே..’’

‘‘என்னம்மா.. மழை பேஞ்சிட்டு இருக்கு.. அதனால இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துரும்..’’என்றான் அசோக்

‘‘ஏன் மழைன்னா.. வரமாட்டாங்களா..?’’ அதுக்கு தானே.. நாம பணம் குடுக்கிறோம். இவங்க கிட்ட ஆர்டர் குடுத்ததுக்கு நீங்களே.. போயிட்டு வந்திருக்கலாம்..’’

‘‘என்னம்மா.. மழை பேஞ்சிட்டு இருக்கு.. நான் எப்படி..?’’ இழுத்தான் அசோக்.

‘‘சரி.. ஆர்டர் குடுத்த ஆளுக்கு போன் போடுங்க..’’

‘‘சரி..’’ என்ற அசோக் போனை எடுத்து சதிஷின் நம்பருக்கு பேச ஆரம்பித்தான்.

‘‘என்னாச்சு ? இன்னும் வரலியா..?’’

‘‘சார்.. மழ.. பேஞ்சிட்டு இருக்கு. அதான்..’’

‘‘யோவ்.. ஆன்லைன்ல ஆர்டர் குடுக்கிறது.. – சீக்கிரமா வாரதுக்கு தான். நீ.. பேசாம நீட்டி நிமிந்து வாரதுக்கு இல்ல..’’ என கொஞ்சம் கடுமை கலந்து பேசினான்.

‘‘ஸாரி.. சார்.. இப்ப ஒடனே வாரேன். ’’கொட்டும் மழையில் இறங்கினான். மழைக் கோட்டை சரியாகப் போட்டான்.

ஆர்டர் செய்யப்பட்ட உணவகத்திற்கு ‘விர்..’’ என விரைந்தான் சதிஷ். நாலாபக்கமும் அடிக்கும் மழையில் நன்றாக நனைந்தான். ஆர்டர் உணவுகளை வாங்கிக் கொண்டு அசோக் வீட்டிற்கு விரைந்தான்.

‘‘டுர்..’’ என்று காலிங் பெல்லை அழுத்தினான்.அந்தச் சத்தம் கூடக் கேட்காமல் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தது குடும்பம். இரண்டு மூன்று முறை காலிங் பெல்லை அழுத்தி விட்டு வாசலில் நின்றிருந்தான். அப்போது அவன் செல்போன் அலறியது.

‘அம்மா ஏன் இந்நேரம் கூப்பிடுறாங்க..’ என்று நினைத்தபடியே போனை எடுத்தான் சதிஷ்.

‘‘என்னம்மா..’’

‘‘ஐயா.. சதீசு..ஊர்ல ரொம்ப மழயாமே..வேல..வேலன்னு மழயில ரொம்ப நனையாதய்யா.. ஒடம்பு கிடம்புக்கு முடியாம போச்சுன்னு..ஒத்தையில இருக்கிற ரொம்ப கஷ்டம் யா.. – பாத்து பத்திரமா இருய்யா..வச்சுரட்டா.. சரிம்மா..’’

‘‘நான் அப்பெறம் பேசுறேன்..’’ என்று சதிஷின் அம்மா பேசி முடிப்பதற்கும் மாளவிகா கதவைத்திறப்பதற்கும் சரியாக இருந்தது.

‘‘ஏன்..இவ்வளவு நேரம் ஆர்டர் பண்ணுனா டைமுக்கு வர மாட்டீங்களா..?’’ மாளவிகா கேட்டுக் கொண்டிருக்கும் போதே அசோக்கும் வந்தான். அவன் பங்குக்கு அவனும் திட்டினான்.

‘‘ஸாரி சார்..’’ என்றான் சதிஷ்

ஆர்டர் உணவுகளை வாங்கிக்கொண்ட அசோக் ‘‘போ..’’ என்ற உதாசீன வார்த்தையால் சதிஷை விரட்டினான் அசோக்.

சதிஷின் பெருகிய கண்களிலிருந்து ‘கன்னங்களில் நீர் வழிந்தோடியது’

மழை வெளுத்து, வாங்கிக் கொண்டிருந்தது. அப்போது ‘டொய்ங்’ என்ற சத்தத்தோடு இன்னொரு ஆர்டர் வந்து விழுந்தது.

மழையைப் பாராமல் தன் டூவிலரை முடுக்கினான் சூடாக.

மறுபடியும் அவன் செல்போன் அலறியது. போனை எடுத்துப் பார்த்தான்.

அது அம்மாவின் அழைப்பாக இருந்தது. அவனுள் சூடு மாறி ஈரம் பரவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *