செய்திகள்

மனப்பாட முறையை தவிர்த்து–கல்வி செயல் முறையில் இருக்க வேண்டும்: கல்வியாளர் டாக்டர் சுப்பிரமணியம் வலியுறுத்தல்

Spread the love

சென்னை, ஜன. 12–

கல்விமுறையானது, மனப்பாட முறையில் இருந்து விடுபட்டு, செயல்முறைக்கு மாற வேண்டும் என்று கல்வியாளர் டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.

மக்கள் குரல் இணையத் தொலைக்காட்சிக்காக, இசைக் கலைஞரும் நெறியாளருமான ஸ்ரீதர் செய்த நேர்காணலில், கல்வியாளர் சுப்பிரமணியம் கூறியதாவது:–

‘மெக்கானிக்கல் என்ஜினியரிங்’ படித்த நான், டீசல் எரிபொருள் சிக்கனம் குறித்து ஆய்வு செய்தேன். இதனால், கல்லூரி வளாக தேர்வில் தேர்வுபெற்று அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணி செய்தேன். அதன் பிறகு தலைமைத்துவம் குறித்த பயிற்சியை தேர்ந்தெடுத்து படித்தேன். 1992 ல் திருமணம் முடித்தேன். எனது மனைவி, உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

தலைமைத்துவ பயிற்சி பெற்றதைத் தொடர்ந்து, இந்துஸ்தான் கல்வி நிறுவனத்திலும், 2014 முதல் கிரசண்ட் கல்வி நிறுவனத்திலும் பணியாற்றி பணி ஓய்வு பெற்றேன். எனது கல்விப்பணி, கற்பித்தல் முறையை பாராட்டி, நான் மிகவும் நேசிக்கிற தலைவரான அப்துல் கலாம் பெயரில், ‘வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த ஆண்டு ஜனவரியில் எனக்கு வழங்கப்பட்டது. அதேபோல், கிரசண்ட் கல்லூரி மாணவர்கள் எனக்கு வழங்கிய விருதும் என் மனதிற்கு நெருக்கமானவை என குறிப்பிடலாம்.

எப்படி இருக்க வேண்டும் கல்வி!

எனது பல்லாண்டு கல்வி பணியின் அடிப்படையில் சிலவற்றை சொல்ல வேண்டும் எனில், மாணவர்களுக்கு தேர்வுக்கான புத்தகப் பாடம் என்பது, 25 சதவீதம் அளவுக்கே இருக்க வேண்டும். 75 சதவீதம் செயல்முறை கல்வி என்பதே சரியானதாக இருக்கும். மனப்பாடம் செய்து அதனை தேர்வில் சிறப்பாக வெளிக் கொண்டு வருபவர்கள் திறமைசாலிகள் என்பது சரியான மதிப்பீடாக இருக்க முடியாது.

மேலும் மாணவர்களின் படைப்பாக்கத் திறனையும் (Creativity), சிந்தனை வளத்தையும் மேம்படுத்தும் பணியை, கல்வி நிலையங்கள் செய்ய வேண்டும். அதுவே கல்வி நிறுவனங்களின் தலை சிறந்த பணியாக இருக்க முடியும். அதோடு, கல்வியானது, மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுவதாகவும் இருக்க வேண்டும்.

மேலும், பண்பு, பழக்க வழக்கம் ஆகியவை, மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியம். நடத்தை (Behavior) ஒவ்வொருவரின் வாழ்வின் வெற்றியிலும் பங்கு வகிக்கக்கூடிய ஒன்று. தங்களுடைய வாழ்வை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், நடத்தையை மாற்ற வேண்டும் (Change the Behavior). எனவே மாணவர்களுக்கான ஒழுக்கம், வீட்டில் இருந்தே தொடங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

மாணவர்களுக்கு செல்போன்?

நவீன செல்பேசி பயன்பாடுகள், மாணவர்களின் கற்கும் திறன், வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உண்மை என்றாலும், புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்க முடியாது. எனவே, அதனை சரியான முறையில் கையாள்வதை உறுதிப்படுத்த வேண்டும். அறிவியல் முன்னேற்றம் உள்ளிட்ட எதுவும் நன்மை தீமை என்ற இரண்டையும்தான் கொண்டிக்கும். அதில் நன்மையை மட்டும் கையாள, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், சரியானதை நாம்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில், தமிழக அரசின் ஸ்ரீ, காவலன் மொபைல் செயலிகள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருப்பதையும் நாம் மறக்க முடியாது. அத்துடன், கல்வி நிறுவனத்தில் மத, சாதிய வேறுபாடுகள் நுழையாமல் பார்த்துக் கொண்டு, மாணவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம் என்றும் கல்வியாளர் சுப்பிரமணியம் கூறினார்.

இந்த நேர்காணலில் கல்வித் தொடர்பாக, நெறியாளர் ஸ்ரீதர் மிக நேர்த்தியாக கேட்ட கேள்விகளுக்கு, டாக்டர் சுப்பிரமணியம் அளித்த விரிவான பதில்களையும் விளக்கங்களையும், மேலும் அறிந்து கொள்ள, மக்கள் குரல் www.makkalkural.tv இணைய தொலைக்காட்சியை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *