நாடும் நடப்பும்

பொருளாதார வளமும் உற்பத்தி முதலீடுகளும்

கடந்த வார இறுதியில் பிரதமர் மோடி 20 மிகப்பெரிய சர்வதேச முதலீட்டாளர்களை வீடியோ தொடர்பில் கலந்துரையாடினார். மோடி சந்தித்த அந்த 20 நிறுவனங்களின் சொத்து மதிப்பு 6 டிரில்லியன் டாலர் அதாவது 6 லட்சம் கோடி டாலர் மதிப்பாகும்!

1991–ல் நவம்பர் மாதத்தில் நாம் உலகக் கடனை சீர்செய்ய நமது தங்கத்தை அடமானம் வைத்தோம். மத்திய அரசு கப்பலில் அனுப்பி வைத்தபோது பலர் கண்ணீர் விட்டனர். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு வளர்ச்சி பாதையில் வழி நடத்த உறுதி ஏற்றனர்.

கடந்த 30 ஆண்டுகளில் சாப்ட்வேர் துறையில் உலக ஆதிக்கம் செய்யும் திறன் மிக்க நாடாக உயர்ந்து விட்டோம். அடுத்த 4 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் நாடாக உயர இலக்கை அறிவித்தார்.

இன்றைய கோவிட்-– 19 பிரச்சினையால் மட்டுமின்றி பல்வேறு சிக்கல்களால் தவித்துக் கொண்டிருக்கும் நமது பொருளாதாரத்தை வலுவுள்ளதாக உயர்த்த நாம் எடுத்து வரும் முயற்சிகள் சரியான முடிவுகளா? என்ற கேள்விக்கு விடை தருவது போல் கடந்த வாரம் நிகழ்வு இருக்கிறது. அந்த உயர் மட்ட சந்திப்பின் போது அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதியகம், டென்மார்க் ஓய்வூதிய நிறுவனம், கத்தார் முதலீட்டு கழகம், ஜப்பான் போஸ்ட் வங்கி, கொரியா முதலீட்டு கழகம் போன்ற உலக ஜாம்பவான் நிதி அமைப்புகள் பங்கேற்றனர்.

இந்திய நிறுவனங்கள், ரிலையன்ஸ், டாடா, கோட்டக், எச்டிஎப்சி ஆகியவற்றின் சேர்மன்களும் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட ஒரு முக்கிய கருத்து, உற்பத்தி துறை, எரிசக்தி, இ –வே கட்டணங்கள், சரக்கு ரெயில் சேவைகள், ஜிஎஸ்டி, வங்கி வருமானம் போன்றவை மிக சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்து விட்டது. அவற்றின் மொத்த மதிப்பு 102 டிரில்லியனாம்!

ஆம். இந்த மலைப்பான மொத்த வருமானத்தில் நமது விவசாயத் துறையின் பங்களிப்பைச் சேர்த்துக் கொள்ளவில்லை.

நாம் விவசாயத்தையும் சேவைத் துறையையும் நம்பியிருக்கும் பொருளாதாரமாகும். இத்துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் இருக்க முடியாது. ஆனால் உற்பத்தி துறையில் அடிப்படை கட்டுமானத்திலும் தயாரிப்பு இயந்திரங்களிலும் அந்நிய முதலீடுகள் வரவேற்கப்படுவதை அறிவோம்.

ஆனால் நமது சமீபத்து வருவாய் அதிகம் வருவது விவசாயத் துறையிலும் சாப்ட்வேர் ஏற்றுமதி துறையிடமும் இருந்து தான். இன்றைய கோவிட் ஊரடங்கால் சீனா உட்பட பல நாடுகளில் உற்பத்தி தடையானதால் அவர்களது பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்து விட்டது.

ஆனால் நம் நாட்டிலோ விவசாயமும் வீட்டில் இருந்தே பணியாற்றும் நிலையில் சாப்ட்வேர் துறையும் கடுமையான வீழ்ச்சி அபாயத்திலிருந்து தப்பித்துக் கொண்டது. இதையெல்லாம் மனதில் கொண்டே சர்வதேச முதலீட்டாளர்கள் நமது பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெற ஆர்வமாக இருக்கிறார்கள்.

2014–ல் பிரதமர் மோடி ஆட்சியை பிடித்தவுடன் அறிவித்தது, ‘இந்தியாவில் தயாரிப்பு’ என்ற கொள்கைப் பிரகடனமாகும்.

ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் உற்பத்தி தொழில்துறை எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெற வில்லை என்பதுதான் கண்முன் இருக்கும் உண்மையான நிலை என்பதை உணர்ந்து வருகிறோம்.

ஆண்டிற்கு 15 லட்சம் இளைஞர்கள் புதிதாக வேலை தேடி வரும் ஜனத்தொகை கொண்ட நாம் அவர்களுக்கு பெருவாரியான வேலை வாய்ப்பை உருவாக்க உற்பத்தித் துறையை மேம்படுத்தியாக வேண்டும்.

எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், பதனிடுவது, ஆடைகள், இரும்பு துறை, வாகன உதிரிப் பாகங்கள் என பல்வேறு துறைகளில் வளர்ச்சிக் கொள்கைகள் சமீபமாக புதிய உத்வேகத்துடன் நாடெங்கும் செயல்படுத்தத் தீவிரம் காட்டப்படுகிறது.

கோவிட் -– 19 ஏற்படுத்திய பொருளாதார சீரழிவு நமது பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய விளைவுகளின் பாதகத்தை கண்டு வருந்துவதால் எந்த லாபமும் இல்லை! அதை உணர்ந்து பிரதமர் மோடியும் தயாரிப்பு துறைக்கு விசேஷ கவனம் செலுத்தி வருவது புரிகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் மோடி பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். வரும் வாரத்தில் எஸ்.சி.ஓ., பிரிக்ஸ், ஜி20 தலைவர்களுடன் கலந்துரையாட இருக்கிறார்.

அமெரிக்காவில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டு விட்ட நிலையில் அமெரிக்க உறவுகள் சாதகமாக இருக்குமா? என்ற கேள்விக்கு விடை நம் மண்ணின் வாரிசாக இருக்கும் கமலா ஹாரிஸ் அந்நாட்டு துணை ஜனாதிபதியாக வென்று விட்டார்.

தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் தொழில் சிறப்புகளை நன்கு உணர்ந்தவர் என்பதால் நம்பிக்கை எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் ஏதேனும் சலுகை கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன் பார்த்த நாம் எங்கள் ‘ இந்திய தயாரிப்பு ‘ அறை கூவலைப் புரிந்து கொண்டு வளரும் உற்பத்தியாளர் நாடாக உயரும் இந்தியாவில் உங்கள் கவனம் திசை திரும்பட்டும் என்பதைச் சுட்டிக் காட்டி வருகிறோம். முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்திலும் தற்போது விடைபெற இருக்கும் டிரம்ப் காலம் வரை அமெரிக்கா சீனாவின் உற்பத்தி கொள்கையை எரிச்சலோடு பார்த்தாலும் அவர்களிடமே தஞ்சமடைந்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது.

இனிப் பணக்கார உலக நாடுகளுக்கு நமது பாரம்பரிய உற்பத்தி திறனை வெளிப்படுத்தி வளர்ச்சிகளைக் காண வேண்டிய நல்ல நேரம் வந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *