போஸ்டர் செய்தி

தமிழகத்தில் நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21–ல் வாக்குப்பதிவு

Spread the love

புதுடெல்லி,செப்.21–

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் நாங்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபையில் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் நாங்குனேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த பதவி காலியானது.

அதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ராதாமணி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவி காலியானது. இதையடுத்து அந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகிய மூவரும் டெல்லியில் இன்று மதியம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–-

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியும், அரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2-ம் தேதியும் நிறைவடைகிறது. எனவே, மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன.

மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளும், அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் 8.94 கோடி வாக்காளர்களும், அரியானாவில் 1.80 கோடி வாக்காளர்களும் உள்ளனர். மகாராஷ்டிராவுக்கு 2 சிறப்பு தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்கள். திங்கட்கிழமை முதல் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்குகிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அனைத்து வாக்குசாவடிகளிலும் வெப் கேமிராக்கள் பொருத்தப்படும். நக்சல் பாதித்த இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 1.39 லட்சம் விவிபாட் யந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்குப்பதிவுடன் ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கப்படும். ஒரு தொகுதிக்கு வேட்பாளர்கள் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 24–ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 27–ம் தேதி துவங்கி அக்டோபர் 4–ம் தேதி நிறைவுபெறும். அக்டோபர் 5–ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

இதேபோல் தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜர் நகர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் காலியாக இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 21–ம் தேதி தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24–ம் தேதி நடைபெறும்.

இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 23–ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 30–ம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் அக்டோபர் 1–ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3–ம் தேதி கடைசி நாள் ஆகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *