செய்திகள்

சென்னையில் வருமான வரி வழக்குகளை விரைந்து முடிக்க இ–கோர்ட் துவக்கம்

Spread the love

சென்னை, நவ.16-

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக சென்னையில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ‘இ-கோர்ட்’ அறை திறக்கப்பட்டு உள்ளது. இதனை தீர்ப்பாய தலைவர் பி.பி.பட் திறந்து வைத்தார்.

வருமான வரி செலுத்தாமல் தவறான கணக்கை சமர்ப்பிப்பது, பணியாளர்களிடம் வருமான வரியை பிடித்தம் செய்து விட்டு அதை செலுத்தாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்துவது வழக்கம்.

இதன் இறுதிக்கட்ட விசாரணை சென்னை பெசன்ட்நகர் ராஜாஜி பவனில் இயங்கி வரும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடைபெறும். இங்கு மேல்முறையீடு செய்பவர்கள் ஒவ்வொரு விசாரணையின் போதும் வெளியூரில் இருந்து சென்னைக்கு வர வேண்டி உள்ளது.

இதை தவிர்க்க அதிநவீன இணையவழி ‘வீடியோ கான்பரன்சிங்’ வசதி கொண்ட இ–கோர்ட் தீர்ப்பாய அலுவலகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மதுரை, கோவை ஆகிய இடங்களில் இருந்தவாறு மேல்முறையீட்டு வழக்குகளில் வாதாடலாம்.

‘இ–கோர்ட்டு’ அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தீர்ப்பாய தலைவர் பி.பி.பட் இதனை திறந்து வைத்தார். துணை தலைவர்கள் எஸ்.பண்ணு, என்.வி.வாசுதேவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தீர்ப்பாய தலைவர் பி.பி.பட் கூறுகையில், ‘மும்பை, டெல்லி, ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் ‘இ–கோர்ட்டு’ சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நாடு முழுவதும் 89 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் மட்டும் 5,200 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை விரைந்து முடிக்கப்படும். ‘இ–கோர்ட்’ மூலம் விரைவில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *