நாடும் நடப்பும்

ரஷ்யாவில் தமிழ் வளர்த்த துப்யான்ஸ்கி

இனிமை, செழிமை கொண்ட செம்மொழியாம் தமிழ் மீது ஈர்ப்பு பெற்று காதலாக மலர்ந்து தங்களது உயிரோடு கலந்து வாழ்ந்த அறிஞர்கள் பலர் உண்டு, அதில் வியப்பைத் தருவது வெளிநாட்டு அறிஞர்களின் தமிழ் ஆர்வமும் பற்றும் தான்!

அந்த பட்டியலில் ராபர்ட் கால்டுவெல், ஆலன் டேனியல், ஹென்ரிக்ஸ், ஹெர்மன், ஜி.யு. போப், இவர்களில் முத்தாய்ப்பாய் தமிழர்களால் வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் பெஷ்சி என்ற ஓர் பெரிய பட்டியல் இருக்கிறது.

இவர்கள் எல்லோருமே தமிழின் பெருமையை தங்களது தாய்மொழியில் மொழிபெயர்த்து அதன் சொற்சுவை, பொருட்சுவையை உலகறியச் செய்தவர்கள் ஆவர்.

அவர்களில் ரஷ்ய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 20–ம் நூற்றாண்டில் தமிழை ரஷ்யாவில் பிரபலப்படுத்திய அறிஞர் ஆவார்.

1941–ல் பிறந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது 79–வது வயதில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நம்மிடமிருந்து மறைந்து விட்டார்.

இந்தியாவிற்கு வரும் ரஷ்ய தூதரக அதிகாரிகள், அறிஞர்கள் தமிழகம் வருவது மிக குறைவாகும். அவர்களது பணிகள் டெல்லியில் இருப்பது புரிந்தது தான்.

ஆனால் கலை, இலக்கிய ஆர்வத்துடன் சென்னை வருபவர்கள் ஒரு சிலர் உண்டு. அவர்களுக்கு தமிழ் மீது ஆர்வத்தை விட நமது பாரம்பரியத்தை ரசிப்பார்கள். மகாபலிபுரம் செல்வது, கடற்கரையில் உல்லாசமாக இருப்பதும் உண்டு.

ஆனால் அவர்களில் மிக வித்தியாசமானவர் துப்யான்ஸ்கி ஆவார். இவரது சென்னை வருகையின் பின்னணியில் தமிழ் வேட்கையே பிரதானமானதாகும்!

தொல்காப்பியம், ராமாயணம் முதல் பாரதியார், கண்ணதாசன் உட்பட ஜெயகாந்தனின் படைப்புகள் வரை அனைத்தையும் ரசிப்பவர், அதன் சாராம்சங்களை தமிழக அறிஞர்களுடன் பேசி பல தகவல்களை பெறுவது இவரது ஆர்வமாகும்.

எல்லா உலகத் தமிழ் மாநாடுகளுக்கும் வந்தவர் மட்டுமல்ல சொற்பொழிவுகளும் அதுவும் தூய தமிழில் செய்தவர் ஆவார்.

1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார் அவர்.கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராக துப்யான்ஸ்கி ரஷ்யாவில் தமிழ் கற்பித்துவந்தார். 10 பல்கலைக்கழகங்களின் இளங்கலை மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதழியல், வெளியுறவு என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் அவரிடம் ஆர்வமாகத் தமிழ் கற்றனர். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள் தொன்மங்கள் குறித்து அவர் 2000-ல் வெளியிட்ட ‘ரிச்சுவல் அண்டு மித்தாலஜிக்கல் சோர்ஸஸ் ஆஃப் தி ஏர்லி தமிழ் பொயட்ரி’ என்ற புத்தகம் தமிழுக்கு அவரது முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்று.

கோவையில் 2010-ல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி அவர் வாசித்த ஆய்வுக்கட்டுரை பலத்த விவாதத்தை எழுப்பியது. கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை அவர் நடத்திவந்திருக்கிறார்.

துப்யான்ஸ்கியின் மறைவால் தமிழ் மொழிக்கும் ரஷ்ய மொழிக்கும் இடையே இருந்த வலுவான இணைப்புப் பாலத்தை நாம் இழந்துவிட்டோம். இந்தியாவிலிருந்து ரஷ்யா சென்று தமிழ்க் கற்பிப்பதற்கான திட்டம் இருக்கிறது. அதைப் புதுப்பித்து, துப்யான்ஸ்கியின் மரபு அங்கே தொடரும்படி செய்தால் அதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

ரஷியர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் ஏதோ பிறந்த குழந்தை உருண்டு விளையாடுவது போல் இருக்கிறதே என்று வியந்து பாராட்டியதை ஒரு முறை எனது ரஷ்ய பயணத்தின் போது தெரிந்து கொண்டேன்.

அந்த கலாச்சாரத்தில் வந்துள்ள ஒரு அறிஞர் தமிழில் நல்ல புலமையை பெற்று, ஆர்வத்தால் பலருக்கு அதை கற்பித்து தமிழின் சிறப்பை கடும் குளிர் பிரதேசமான ரஷ்யாவில் உள்ள மாங்கோ பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தி பலருக்கு தமிழின் இன்பத்தை கொண்டு சென்று சேர்த்து இருக்கிறார். இது தமிழழுக்கும் தமிழர் வாழ்வின் சிறப்புக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம்.

அந்த பெருந்தகையின் மறைவுக்கு தமிழகம் வருந்துகிறது. அவர் குடும்பத்தாருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *