செய்திகள்

பேரிடர்களில் சிக்குபவர்களை மீட்க உதவும் ஆளில்லா குட்டி விமானம்: சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடிப்பு

Spread the love

சென்னை, அக்.10-

பேரிடர் காலங்களில் சிக்கி கொள்பவர்களை மீட்க உதவும் ஆளில்லா குட்டி விமானத்தை சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் இதர பகுதிகளில் இயற்கை பேரிடர் காலங்களின் போது பல்வேறு தேவைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அதுபோன்ற பேரிடர் காலங்களில் சிக்கி கொள்பவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு மையம் ஆய்வு நடத்தி வந்தது.

அதன் பலனாக, பேரிடர் காலங்களில் சிக்கி கொள்பவர்களை மீட்க உதவ ஆளில்லா குட்டி விமானம் (‘டிரோன்’) ஒன்றை அந்த மையத்தின் மாணவர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த விமானத்தில் பல்வேறு அறிவுசார்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி உருவாக்கி இருக்கின்றனர். இந்த சேவைக்கு ‘வானத்தில் கண்’ என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

ஆயுஷ் பரஸ்பாய் மனியார் (எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் மாணவர்), ராஜத்விகாஸ் சிங்கால் (கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங்), நச்சிகேத் தேவ் (மெக்கானிக்கல் என்ஜினீயரிங்), இர்பான் ஆரிப் (மெக்கானிக்கல் என்ஜினீயரிங்) ஆகிய 4 மாணவர்கள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி காட்டி இருக்கின்றனர்.

இந்த ஆளில்லா குட்டி விமானம், பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக எவ்வளவு பேர் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள்? என்பதை மிகவும் துல்லியமாக கணக்கெடுத்துவிடும். இதன் மூலம் பேரிடர் மீட்பு படையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு வந்துவிடுவார்கள்.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. வான்வெளி என்ஜினீயரிங் துறை பேராசிரியர் பி.ஆர்.சங்கர் கூறுகையில், ‘எதிர்காலத்தின் தேவையை கருதி யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாத புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது பல உயிர்களை காப்பாற்றும் சக்திவாய்ந்த கருவியாகும். பேரிடர் மீட்பு படை, மனிதநேய உதவிகளுக்கும் இது பேருதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதை கண்காணிப்பு பணிக்கும் ஈடுபடுத்த முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *