உலக அளவில் ஒவ்வாமை பிரச்சனை குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமையைக் கசக்குவது எனத் தொடங்கி சில நேரங்களில் உதடு, முகம் வீங்குவது, சிறுநீர்த் தடைபடுவது, மூச்சிரைப்பு… என ஒவ்வொருவருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும் அவரவர் சாப்பிட்ட உணவைப் பொறுத்தும் ஏற்படும் அலர்ஜி, சில நேரங்களில் அனப்பைலாக்டிக் ஷாக் (Anaphylactic shock) எனும் மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும் அபாயம் உடையது.
ஒவ்வாமையால், பின்னாளில் ஆஸ்துமா, சைனசைடிஸ், எக்ஸிமா போன்ற நோய்களை உண்டாக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
தோலில் முக்கியமாக ஏற்படும் பிரச்சினை அரிப்பு. உடலில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அரிப்பின் மூலம் அதை முதலில் அறிவிப்பது தோல்தான்.
தோல் அரிப்பு ஏற்பட்டவுடன், அதை வெறும் அரிப்புதானே என்று எடுத்துக்கொள்ளாமல், அதன் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும்.
நாம் உண்ணும் உணவில் உள்ள கத்தரிக்காய், தக்காளி, புளி, கடுகு, நல்லெண்ணெய், காலிபிளவர், கருணைக்கிழங்கு, காளான் ஆகியவையும், மா, கொய்யா போன்ற பழங்களும் மீன், கருவாடு, வறுத்த கோழி, முட்டை போன்றவையும் தோல் நோய் உள்ளவர்களுக்கு அரிப்பை அதிகப்படுத்தும்.
மேலும் சில காரணங்கள் உடலின் சத்து குறைபாடு, கிருமிகள், சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் உள்ளே படியும்போது, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவற்றில் எதுவாக இருந்தாலும் அரிப்பு உண்டாகும்.
இதற்கு என்ன செய்யலாம்?
இதற்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் தெரிந்துவிடும். அதற்கேற்ப மேற்கூறிய உணவுகளைத் தவிர்ப்பதுடன் அரிப்பு குணமாகும் வரை அதிகளவு நீர் அருந்துவது மிகவும் அவசியம்.