செய்திகள்

ரூ.2400 கோடி செலவில் 19 பாதாள சாக்கடை பணிகள்

நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புக்கான டாக்டர் சி.ரங்கராஜன் குழு பரிந்துரை ஏற்பு

3 மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில்…

ரூ.2400 கோடி செலவில் 19 பாதாள சாக்கடை பணிகள்

சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை, பிப்.23–

ரூ.2400 கோடி செலவில் 19 பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அவர் பேசியதாவது:–

வாழ்வாதாரத் திட்டங்கள்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநிலத்தில் சுய உதவிக் குழு இயக்கத்தை வழிநடத்தி வருகிறது. 2012-13ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் அனைத்து வட்டாரங்களிலும், அதாவது, 388 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 96,304 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், இக்குழுக்கள் ஊராட்சி மற்றும் வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 13,047 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 2020-21ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 14,000 கோடி ரூபாயை விட, அதிகமாக வங்கிக் கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. 2011–12ஆம் ஆண்டிலிருந்து சுய உதவிக் குழுக்களால் பெறப்பட்ட மொத்த வங்கிக் கடன் 80,100 கோடி ரூபாயாகும். கிராமப்புற வாழ்வாதார இயக்கத்துடன் ஏனைய துறைகள் மற்றும் முகமைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், இயந்திர வாடகை மையங்கள், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் மற்றும் ஏனைய உற்பத்தி நடவடிக்கைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன. உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டத்தின் மூலம், 2020-21ஆம் ஆண்டில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான கோவிட் நிதியுதவித் தொகுப்பு வழங்கப்பட்டது. இதுவரை, 2,53,457 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2020-21ஆம் ஆண்டில் நகர்ப்புறப் பகுதிகளில் 17,021 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 15,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சுய வேலைவாய்ப்பு பிரிவின் கீழ், 897.38 கோடி ரூபாய் மதிப்பில்

வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நகர்ப்புறத்தில் வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு உறைவிடம் வழங்கும் திட்டத்தின் கீழ், 110.83 கோடி ரூபாய் செலவில் 254 உறைவிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 202 உறைவிடங்கள் பயன்பாட்டிலும், 52 உறைவிடங்கள் கட்டுமானப் பணியிலும் உள்ளன. ஓர் ஆய்வின் மூலம், 1,21,098 சாலையோர வணிகர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான வட்டி மானியத்துடன் வங்கிக் கடன்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு

நகர்ப்புற ஏழைகளின் நலனை நோக்கமாகக் கொண்ட அரசின் திட்டங்கள், வீட்டுவசதி, திறன் மேம்பாடு மற்றும் குறு நிறுவனங்களுக்கான ஆதரவு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. கோவிட்-19 பெருந்தொற்று நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதார வாய்ப்புகளையும், மாற்று வேலை தேடும் திறனையும் கடுமையாக பாதித்துள்ளது. எனவே, நகர்ப்புறங்களில் ஊதிய உத்தரவாதம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளது என்று டாக்டர் சி.ரங்கராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட பகுதிகளில் சமூக சொத்துகளை உருவாக்கிட இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை அரசு வகுத்து வருகிறது. மேலும் விரிவான வழிகாட்டுதல்கள், சம்பந்தப்பட்டவர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் இறுதி செய்யப்படும்.

நகராட்சி நிருவாகம்

தமிழ்நாடு வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை சேவைகளை வலுப்படுத்துவதற்கான முதலீடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் இதுவரையில், 11,000 கோடி ரூபாய் செலவில் 507 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றங்களுக்கான திட்டத்தின் கீழ் (அம்ருத்), 11,441.32 கோடி ரூபாய் செலவில் 445 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 420 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 2020-21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கான ஒதுக்கீடு1,850 கோடி ரூபாயாகவும், அம்ருத் திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டு இடைக்காலவரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சீர்மிகு நகரங்கள் திட்ட இயக்கத்திற்கு 2,350 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2015-16 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 2.70 இலட்சம் தனிநபர் வீட்டு கழிப்பறைகள் மற்றும் 7,708 சமூகக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. பேரூராட்சிகளில் 2.31 இலட்சம் தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள், 13,114 சமூகக் கழிப்பறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் திறந்தவெளியில் மலம் கழித்தலற்றவையாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

32 மில்லியன் அமெரிக்க டாலர் சேமிப்பில்….

2015ஆம் ஆண்டிலிருந்து, மொத்தம் 3,831 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (TNSUDP), உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடையும். இத்திட்டத்தில் ஏற்பட்ட 32 மில்லியன் அமெரிக்க டாலர் சேமிப்பில், சென்னையின் முக்கிய பகுதிகளில் விடுபட்டுப்போன மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் அமைத்த காரணத்தால் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்துதல் உட்பட 2 துணைத் திட்டங்களை கூடுதலாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான ஒப்புதலை உடனடியாக அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம். முக்கியமான தொழில் வழித்தடங்களில், முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் வடிகால் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 3 கட்டங்களில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் 502 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டுத் திட்டம் (TNUFIP) தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக மொத்தம் 871.31 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் கொசஸ்தலையாறு வடிநிலத்தில் ஒருங்கிணைந்த வெள்ளநீர் வடிகால் வலையமைப்புத் திட்டம் நடப்பாண்டில் 3,220 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 287 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் வழங்கல்

2020-21ஆம் ஆண்டில், 1,690.67 கோடி ரூபாய் செலவில் 3 மாநகராட்சிகள், 6 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 1,311 ஊரக வாழ்விடங்களில் 40.85 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றிற்கு 271 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும், 21 குடிநீர் வழங்கல் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 5 மாநகராட்சிகள், 22 நகராட்சிகள், 57 பேரூராட்சிகள் மற்றும் 12,346 ஊரக வாழ்விடங்களில் மொத்தம் 12,013.79 கோடி ரூபாய் செலவில், நாளொன்றிற்கு

1,223.35 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட 56 குடிநீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு, பல்வேறு நிலைகளில் உள்ளது. இத்திட்டங்களின் மூலம் 185.58 இலட்சம் மக்கள் பயனடைவர். திருப்பத்தூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 2020-21ஆம் ஆண்டில், 5 பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 285.87 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. 2,391.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில், 19 பாதாள சாக்கடை கட்டும் திட்டப் பணிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *