செய்திகள்

போன் செய்தால் வீடு தேடிவரும் இலவச மருத்துவ உதவிக்கான புதிய சேவை: அரசு மருத்துவமனையில் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி துவக்கினார்

Spread the love

திருவண்ணாமலை டிச.3-

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவமனை செல்ல இயலாதவர்களுக்கு வீட்டிலேயே சென்று இலவச மருத்துவ உதவி மேற்கொள்ளும் புதிய சேவையை மாவட்ட கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்டுவட காயம், கழுத்து எலும்பு முறிவு போன்ற காயங்கள் காரணமாக கை கால்கள் முற்றிலும் செலிழந்தவர்கள் நீண்ட நாட்களாக படுக்கையில் இருப்பதால் படுக்கை புண் ஏற்பட்டு முற்றிலும் செயலற்ற நிலையில் உள்ளனர். மேலும், மார்பக புற்றுநோய், கர்பப்பை வாய் புற்றுநோய், கடுமையான நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இதே போன்று செயலற்ற நிலையில் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற இயலாத நிலையில் உள்ளனர். அவசர நிலையின் போதும், உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையிலும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லும் போது நோயாளிகளும், அவர்களின் உடனாளர்களும் அதிக சிரமப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு இதுபோன்று உடல் பாதிப்புகளால் மருத்துவமனைக்கு செல்ல இயலாதவர்களுக்கு வீட்டிலேயே சென்று இலவச மருத்துவ உதவி அளிப்பதற்காக 24 நேரமும் செயல்படும் வகையில் 8925 – 123450 என்ற கைபேசி எண் மூலமாக மருத்துவ அழைப்பு என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த அமைப்பின்கீழ் உள்ள 18 வட்டார மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை அழைத்து உதவி கோரும் போது தொடர்புடைய வட்டாரத்தில் பணிபுரியும் நோய்தடுப்பு சிகிச்சை பணியாளர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளியின் வீட்டிற்கே சென்று தேவைப்படும் மருத்துவ உதவிகள் அளிப்பார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பக்கவாத நோயால் கை, கால்கள் செயல் இழந்த 487 பேர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 118, தண்டுவட காயம் 62 பேர், மன நலம் குன்றியவர்கள் 15, நீண்ட நாள் படுக்கை புண் உள்ளவர்கள் 65, பெருங்குடல் பை பாதுகாப்பு 7 பேர், வயது முதிர்வால் நடமாட இயலாதவர்கள் 191 ஆக மொத்தம் 945 நபர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ் இவர்கள் அனைவரும் கொண்டுவரப்பட்டு உடனடி சிகிச்சை பெற்று பயனடைவார்கள். எனவே, மருத்துவ இயலாமை காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள நோயாளிகள் அவசர சிகிச்சை தேவைப்படும் போது 8925 – 123450 என்ற மருத்துவ அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குநர்கள் மீரா (திருவண்ணாமலை), கோவிந்தன் (செய்யாறு), பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பாண்யடின், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதர், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *