நாடும் நடப்பும்

குப்பைகளை எரிக்காதீர், சைக்கிளை மறக்காதீர்!

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது, அதை கடந்த மாத மத்தியில் ஐ.நா. நடத்திய வீடியோ கூட்டத்தில் கரிம உமிழலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி பல்வேறு நாடுகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பாரீஸ் ஒப்பந்தம் தொடர்பாகத் தங்கள் நிபந்தனையற்ற ஈடுபாட்டைச் செலுத்தும் ஒன்பது ஜி20 நாடுகளின் பட்டியலை அதில் வெளியிட்டனர், அதில் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது வரவேற்கத் தகுந்தது.

உலகின் கரிம உமிழ்வில் ஜி20 நாடுகள் 78%-க்கு காரணமாக இருக்கின்றன. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் சில நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் இலக்குகளை மேலும் தாங்கள் விஸ்தரிக்கப்போவதாக இந்த மாநாட்டில் உறுதிகூறின. பெருந்தொற்றின் காரணமாகப் பசுங்குடில் விளைவு வாயு உமிழ்வு சற்றே குறைந்திருக்கிறது. இது எல்லா நாடுகளும் தங்கள் வளர்ச்சிப் பாதைகளை மறு ஆய்வு செய்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறது.

முன்னுதாரணமில்லாத இந்த நிகழ்வு உலகமெங்கும் உள்ள நாடுகள் தங்கள் பொருளாதாரத்துக்கு புத்துயிர் தருவதற்கு நிதியூட்டம் செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவுக்கும் இந்தத் தருணத்தில் ஒரு சவால் எழுந்துள்ளது. பெருந்தொற்று மறுவாழ்வு நடவடிக்கைகளை மரபான கொள்கைகளிலிருந்து விலகி பசுமைக் கொள்கைகளைச் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் காடுகளின் பரப்பு அதிகரித்திருப்பதாக இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதப்பட்டுக் கொண்டார்.

பாரீஸ் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை 2030–-ல் 250 கோடி டன்களிலிருந்து 300 கோடி டன்கள் வரை கார்பன் டையாக்ஸைடை கிரகிக்கக்கூடிய அளவுக்கு இந்தியாவில் காடுகளின் பரப்பு அதிகரிக்க வேண்டும். இதில் உயிர்ப்பன்மையைப் பாதுகாத்தல், பருவநிலையில் நல்ல தாக்கத்தைச் செலுத்துதல், உள்ளூர்ச் சமூகங்களுக்கு வாழ்வாதாரம் அளித்தல் என்று பல்வேறு நன்மைகளும் அடங்கியுள்ளன. ஆனால் வனப்பரப்பை விஸ்தரித்தல் குறித்து மாநிலங்கள் அளித்த தரவுகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது என்று ஒன்றிய அரசு கூறியிருப்பதைக் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

நாளை நாடெங்கும் போகிப் பண்டிகை கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறோம். முன்பு எல்லாம் சிறுவர்கள் சைக்கிள் டியூப்கள் முதல் பல்வேறு பழைய பொருட்களை குவித்து வைத்து எரித்தபடி கைதட்டி கொண்டாடுவார்கள்.

அதனால் எழுந்த கரும்புகையால் சென்னை நகரமே புகை மூட்டத்தில் ‘இருண்டதை’ மறந்து விடக்கூடாது.

அச்சமயத்தில் விமான சர்வீஸ்கள் கூட இயங்க முடியாது திணறியது. டெல்லியில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் காலைப்பொழுது விமானங்களும் ரெயில் சேவைகளும் தடை பெறுவது வாடிக்கை. ஆனால் அதேபோன்று சென்னையிலும் நடந்துள்ளது!

தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பதும் போகித் திருநாளில் குப்பையை எரிப்பதும் தவறு என உணர்ந்து பள்ளி மாணவர்கள் இனி அப்படி செய்ய மாட்டோம் என உறுதி ஏற்றனர், அதனால் தற்போது அப்படி அதீத கரும்புகை மண்டலம் உருவாவது இல்லை.

ஆக பள்ளிப்பருவத்திலேயே சிறுவர்களிடம் நமது சிக்கல்களையும் அதன் தீர்வுகளையும் புரிய வைத்து விட்டால் அடுத்த தலைமுறை அதே சிக்கலில் சிக்கித் தவிக்காது!

ஆகவே பாரீசு ஒப்பந்தத்தின் அடித்தளமாக இருக்கும் பல்வேறு கருத்துக்களை பள்ளிப்பாடமாக வந்துவிட்டால் சிறுவர்களின் சிந்தனையைத் தூண்டி விட்டு நல்ல தீர்வை சமுதாயம் பெற முடியும்.

சமீபமாக பாரீஸ் மாநகரில் சைக்கிளில் பயணிப்பவர்கள் ஜனத்தொகை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபமாக சைக்கிள் ஓட்டம் போடப்பட்ட தளங்கள் பஸ், கார் வாகன சாலைகளாக மாறின, அல்லது சைக்கிளில் செல்பவர்களை மிரட்டும் வகையில் வேகமாக செல்வதால் சைக்கிளில் செல்பவர்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாவதும் உண்டு.

இதைக்கண்ட பிரான்ஸ் அரசு, சைக்கிளின் அருமை பெருமையை நாமே செயல்படுத்தாமல் இருந்தால் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அர்த்தமில்லை என யோசித்து சைக்கிள் ஓட பாதைகளை அமைத்து வருகிறார்கள்.

மொத்தத்தில் பாரீசில் சைக்கிள் சவாரி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் வாகன கரும்புகை வெளியேற்றம் வெகுவாக குறையுமா? என்று உலகமே மிக ஆர்வத்துடன் அதை கண்காணிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *