செய்திகள்

7 பேர் விடுதலையில் தி.மு.க.வின் பச்சோந்தி நாடகம்: எடப்பாடி தாக்கு

Spread the love

சேலம், பிப். 25–

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையில் தி.மு.க. பச்சோந்தி நாடகம் ஆடுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இது பற்றி அவர் கூறியதாவது:–

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேர் விடுதலை பற்றி ஸ்டாலின் பேசினார். அம்மாவின் பிறந்த நாளான இன்று இதைப் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அந்த 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அம்மா முயற்சி செய்தார்கள். துரதிஷ்டவசமாக அம்மா மறைந்து விட்டார். ஆனால் அம்மா எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றுகின்ற விதமாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரின் பார்வையில் இருக்கின்றது. ஸ்டாலின் கேட்கின்றார். ஏன் இன்னும் விடுதலை செய்யவில்லை என்று. அதற்காக போராட்டம் நடத்தப்படும் என்று.

பச்சோந்தி

தி.மு.க. ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்த போது, கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, அமைச்சரவை கூட்டி, 7 பேர் விடுதலை குறித்து பரிசீலிக்கப்பட்டது. அப்பொழுது என்ன முடிவு எடுத்தார் என்றால், நளினியை மட்டும் விடுதலை செய்யலாம், மற்றவர்களுக்கு ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் அமைச்சராக இருக்கின்றார்கள். நளினியை மட்டும் விடுதலை செய்து, மற்ற 6 பேரை விடுதலை செய்ய கூடாது என்று தீர்மானத்தில் கையெழுத்திட்டு விட்டு, இப்போது நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இப்போது பொய் பேசி வருகிறார்கள். நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நளினியை தவிர்த்து 6 பேருக்கும் நிறைவேற்றப்படலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு இப்பொழுது நாடகம் ஆடுகிறார். பச்சோந்தி கூட கொஞ்சம் நேரம் கழித்து தான் நிறம் மாறும், ஆனால் தி.மு.க.வின் ஸ்டாலின் மாறிக் கொண்டே போகிறார்.

நேரத்திற்கு தகுந்தாற்போல் நிறத்தை மாற்றிக் கொள்கிறார். அப்படிப்பட்ட தலைவர் தான் ஸ்டாலின். அவர் எப்பொழுது பார்த்தாலும் முதலமைச்சர், முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார், நாங்களா வேண்டாம் என்று சொன்னோம், மக்கள் கொடுத்தால் நீங்கள் போய் எடுத்துக் கொள்ளுங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லையே? அண்ணா தி.மு.க.வை பொறுத்தவரை, மக்கள் தான் முதலமைச்சர், நான் முதலமைச்சர் அல்ல. மக்கள் தான் நாட்டை ஆளுகிறார்கள், நாங்கள் சேவகர்களாக இருக்கின்றோம். உங்களைப் போல் எப்பொழுது பார்த்தாலும், முதலமைச்சராக வருவேன், வருவேன் என்று கொக்கரித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் அல்ல.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *