செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடியில் அதிக பயன் பெற்றது தி.மு.க: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அண்ணாதி.மு.க.வினருக்காக விவசாயக் கடன் தள்ளுபடி என்பதா?

ராணிப்பேட்டை, பிப்.10–

விவசாய கடன் தள்ளுபடியில் அதிக பயன் பெற்றது தி.மு.க. தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (9–ந் தேதி) ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி, முத்துக்கடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:–-

சிறுபான்மையினர் மக்களுக்கு அரணாக திகழ்வது அண்ணா தி.மு.க அரசு. இந்தியாவிலேயே அமைத்திப் பூங்காவாக திகழ்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. இங்கு சாதிச்சண்டை, மதச் சண்டை கிடையாது. இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு கொடுக்கின்ற அரசு, அம்மாவின் அரசு. தேர்தல் நேரத்தில் ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டத்தை உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுக்கவில்லை. மக்களின் நலனுக்காக இதைச் செய்தோம். தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 6 புதிய மாவட்டத்தை உருவாக்கிய அரசு அம்மாவின் அரசு. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கண்ட கனவை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.

இந்த மாவட்டத்திற்கு 2 கல்லூரிகளை வழங்கி இருக்கின்றோம். இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அதிக அளவில் கொண்டு வந்துள்ளோம். அதேபோல் கலைக்கல்லூரி, தொழிற்கல்லூரி, ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்து சாதனைப் படைத்துள்ளோம்.

இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் உயர்ந்திருக்கிறது. அம்மா 2011–ம் ஆண்டு பதவியேற்கும் போது 100-க்கு 32 சதவிகிதம் பேர் தான் உயர்கல்வி பயின்று வந்தார்கள். அம்மா எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் தற்போது 100-க்கு 49 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு உதவிகள்

இஸ்லாமியப் பெருமக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக முகமது ஜானை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளோம். தி.மு.க உட்பட எந்த கட்சியிலாவது தேர்ந்தெடுத்தார்களா? சிறுபான்மையினர் மக்கள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும். அண்மையில் நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு பயிர்சேதத்தினை பார்வையிட சென்ற போது, நாகூர் தர்காவிற்கு வருமாறு இஸ்லாமிய சகோதரர்கள் என்னை அழைத்தார்கள்.

அப்பொழுது நாகூர் தர்காவில் உள்ள குளக்கரை சுற்றுச்சுவர் கனமழையால் சேதமடைந்துள்ளது. அதனை சீர்செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக அம்மாவின் அரசு ரூ.4.50 கோடியில் குளக்கரை சுற்றுச்சுவர் சீர்செய்ய நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றது. ரமலான் நோன்பின் போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசலுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் 5,145 டன் விலையில்லா அரிசி வழங்கும் அரசு அம்மாவின் அரசு.

நாகூர் சந்தனக்கூடு திருவிழாவிற்கு சந்தனக்கட்டைகளை விலையில்லாமல் வழங்கி கொண்டிருக்கிறோம். மாவட்ட ஹாஜிகளுக்கு ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கி கொண்டிருக்கிறோம். உலமாக்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.1,500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கியது எங்களுடைய அரசு. ஹஜ் புனித யாத்திரை செல்ல மத்திய அரசு நிதியுதவியை ரத்து செய்த போது கூட எங்களுடைய அரசு தொடர்ந்து நிதியுதவி வழங்கியது. ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள ரூ.6 கோடி வழங்கிகொண்டிருந்தோம்.

அந்த நிதியுதவியை உயர்த்தி தர கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையினை ஏற்று ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கி கொண்டிருக்கிறோம். ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் தங்கும் விடுதி கட்டித்தர கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஹஜ் புனித யாத்திரை பயணிகள் தங்கும் விடுதி சென்னையில் கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதிக்கு நான் வருகை தரும் போது, குளங்கள் மற்றும் ஏரிகள் எல்லாம் நீரினால் நிரம்பி தழும்பிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் குடிமராமத்து திட்டம். இத்திட்டத்தின் மூலம் பெய்கின்ற மழை நீர் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் பதுகாத்து குடிநீர் மற்றும் வேளாண் பணிக்காக தேக்கிவைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வினர் தான் அதிக கடன் வாங்கினர்

போக்குவரத்து நெரிசல்களை குறைக்கவும், விபத்தில்லா தமிழகம் உருவாக்கவும் பாலங்கள் மற்றும் சாலைகள் தந்து கொண்டிருக்கின்றோம். ஆற்காடு நகருக்கு புறவழிச்சாலை, சோளிங்கர் நகருக்கு புறவழிச்சாலை போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே போக்குவரத்து விபத்தை குறைத்த முதல் மாநிலம் என்று தரைவழி அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டுள்ளது.

புரவி மற்றும் நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இன்னல்களை துடைக்க 16.43 லட்சம் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்து, நேற்றைய தினம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் அதில் ஒரு உள்நோக்கம் கற்பிக்கின்றார். விவசாயிகள் தான் கூட்டுறவு வங்கியில் பயிர்கடன் பெற்றுள்ளனர்.

ஆனால், ஸ்டாலினோ, நாங்கள் அதிமுகவினருக்கு கொடுத்து விட்டோம் என்று கூறிவருகிறார். அது எவ்வாறு கொடுக்க முடியும். ஏன், தி.மு.கவினர் யாரும் பயிர்கடன் பெற்று வேளாண் பணி மேற்கொள்ளவில்லையா? காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என கட்சி பார்த்தா கடன் வழங்குகின்றோம். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அதிகம் பயன்பெற்றது தி.மு.கவினர் தான். அவர்கள் தான் அதிகம் தோட்டம் வைத்துள்ளனர். நமது மக்கள் ஏழை மக்கள். பச்சோந்தி நிறமாறக்கூடியது, அதை விட வேகமாக நிறம் மாறக்கூடியவர் ஸ்டாலின்.

ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைப்பவன் விவசாயி மற்றும் விவசாயத்தொழிலாளி. உணவில்லாமல் வாழமுடியுமா? முடியாது. அப்படிப்பட்ட உணவை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளோம். இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பிடித்து மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதினை பெற்று வருகின்றோம். ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பெட்டி ஒன்றை வைத்துக்கொள்கிறார். இன்னமும் சொல்கிறார் உங்கள் பிரச்சனைகளை எல்லாம் பெட்டியில் போடுங்கள், நான் பூட்டி வைத்துக் கொள்கிறேன் என்கிறார். தான் முதலமைச்சர் ஆன பிறகு 100 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண்பதாக கூறுகிறார். 100 நாட்களில் தீர்வு எப்படி காண முடியும். இது என்ன படமா? பெட்டி என்றால் திமுகவினருக்கு பிடிக்கும், அதனால் தான் போகும் போதே பெட்டி எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

இது நவீன உலகம், மக்களை ஏமாற்றமுடியாது ஸ்டாலினே. நீங்கள் எப்போதுமே அந்த பெட்டியின் பூட்டை திறக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஆட்சிக்கு வரப்போவது இல்லை. அம்மா சட்டமன்றத்தில் எனக்குப் பின்னால் இன்னும் நூற்றாண்டு காலம் ஆனாலும் அண்ணா தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்” என்றார். இன்னும் நூற்றாண்டு காலம் அண்ணா தி.மு.க ஆட்சியில் இருந்தால் நீங்கள் எப்போதும் திறக்க முடியாது.

இது ஒரு விஞ்ஞான உலகம், பெட்டியில் மனு போடுவது அந்த காலத்தோடு முடிந்து விட்டது. இப்போது எல்லாம், அனைவர் கைகளிலும் செல்போன் உள்ளது. குடிநீர்பிரச்சனையா, சாலைப் பிரச்சனையா அதை முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்க்கும் மேலாண்மைத் திட்டம் இன்னும் ஒரு வார காலத்தில் துவக்க இருக்கின்றோம். ஒரு போட்டோ போட்டால் போதும், அது நேரடியாக முதலமைச்சருக்கு வரும். அதற்கு உதவி மையம் எண் 1100. உங்களுடைய இல்லத்தில் இருந்தே பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு இந்த திட்டம் துவக்கப்பட உள்ளது. இது போன்ற பல்வேறு திட்டங்கள் அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த மாவட்டத்திற்கு 26 அம்மா மினி கிளினிக் கொடுத்திருக்கின்றோம்.

சிறப்பான ஆட்சி இல்லை என்று கூறுகிறீர்கள். சிறப்பான முறையில் செயல்பட்டதனால் தான் துறை வாரியாக தேசிய அளவில் விருதுகளைப் பெற்று வருகின்றோம். உள்ளாட்சித்துறையில் 143 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளோம். தமிழகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலே தொடர்ந்து 6–வது முறையாக முதலிடம் வகிக்கின்றது. மின்சாரத்துறையில் விருது, போக்குவரத்துத்துறையில் விருது, கல்வித்துறையில் விருது, சமூக நலத்துறையில் விருது, பொதுப்பணித்துறையில் விருது இப்படி பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழகம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அம்மாவின் ஆட்சி தொடர துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *