செய்திகள்

அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி வீடு வீடாக துண்டுபிரசுரம்

தமிழ்மகன் உசேன் தலைமையில் எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனை கூட்டம்

அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி வீடு வீடாக துண்டுபிரசுரம்

தி.மு.க.வை ஓடஓட விரட்டி அடித்து அண்ணா தி.மு.க. வெற்றிக்கு சூளுரை

பட்டி, தொட்டி எங்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட முடிவு

சென்னை, ஜன.11–

அண்ணா தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்து சொல்ல அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்ட அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் முடிவு செய்துள்ளது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 104–-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்; புரட்சித்தலைவி அம்மாவின் 73–-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்; தமிழக சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி வாகை சூடிட, மன்றத்தின் மகத்தான பணிகள் குறித்தும்; அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர்கள் – நிர்வாகிகளின்ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் டி.கே.எம். சின்னையா தலைமை வகித்தார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் முன்னிலை விளக்க உரையாற்றினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் க.தவசி வரவேற்புரை ஆற்றினார்.

தலைமைக்கழக நிர்வாகிகள் சி.பொன்னையன், ஜே.சி.டி. பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன், அ.அன்வர் ராஜா, என். சின்னத்துரை, சி.த. செல்லப்பாண்டியன், திருப்பூர் சி.சிவசாமி, வாலாஜாபாத் பா.கணேசன், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் கோ. சமரசம், ஆர்.எம். பாபு முருகவேல்,

எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் புரசை கோ. செல்வம், புரசை வி.எஸ்.பாபு, பி. குமாரசாமி, பி.நாராயண பெருமாள், கே.எஸ். துரைமுருகன், கே. கலாநிதி, வரகூர் அ. அருணாச்சலம், என்.எஸ். மோகன், எம்.என். ராஜாராம், எஸ்.டி.ஜெயபாலன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் இ.வேலாயுதம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:–

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இரு தலைவர்களின் புகழ் மேலும் சிறக்க அவர்களது வழியிலான ஆட்சியின் மாட்சி இமயமாய் உயர்ந்து ஒளிரவும், முதலமைச்சர் எடப்பாடியார் தொடர்ந்து அடுத்த முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமரவும், தமிழகம் தரணி போற்ற மேலும் தழைத்தோங்கி பெருமை பூத்து மிளிரவும், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி கனி பறித்து வாகை சூடிட அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் கடும் உழைப்பை தரும் என்று ஓர் பிரகடனமாய் இக்கூட்டத்தில் அறிவிக்கிறது.

அகில இந்திய அளவிலான தொழில் மதிப்பீட்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அறிவித்துள்ளது.

அதாவது தமிழகம் இந்திய மாநிலங்களிலேயே வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்குவதிலும் சிறப்பிடம் பெற்ற முன்னணி மாநிலமாக உயர்ந்து பெருமை பெற்றிருக்கிறது.

மகத்தான இச்சாதனைகளுக்கு நாயகர்களாக விளங்கி தொழில்துறையில் வெற்றி கண்ட முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோருக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது.

அரசுப்பள்ளிகளில் படித்த ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்து அவர்களும் மருத்துவர்களாகும் வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை அமுல்படுத்தி வரலாற்றில் சமூகப் புரட்சியை உருவாக்கிய சாதனையாளர் முதலமைச்சர் எடப்பாடிக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.க்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய நாட்டில் எங்கும் காணாத அதி அற்புதமான ‘‘அம்மா மினி கிளீனிக்” மக்கள் நல மருத்துவச் சாதனைக்காக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் எம்.ஜி.ஆர். மன்றம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

முதலமைச்சர் எடப்பாடியார், இந்துக்கள் அனைவரும் தமிழ்க் கடவுளாக வணங்கி வழிபட்டு வரும் முருகப் பெருமானுக்கான தைப் பூசத் திருநாளுக்கு பொதுவிடுமுறை அறிவித்து மக்களின் பாராட்டைப் பெற்றார். அதற்காக எம்.ஜி.ஆர். மன்றம் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இன்றைக்கு மக்கள் விரோத சக்தியாக தமிழகத்தில் சட்டத்தை மீறி, மக்களின் அமைதியான வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கவும் அரசின் ‘‘கிராமசபை” என்ற பெயரைப் பயன்படுத்தி, ஊழல் மகாகட்சியான தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்காங்கே நடத்தி வரும் நடவடிக்கைக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

அவரது தந்தை ஆட்சியில் இருந்த போதும் ஊழல், கொள்ளை, அடாவடித்தனம், நிர்வாகச்சீர்கேடு ஆகிய குற்றத்திற்காக தேர்தலில் மக்கள் தொடர்ந்து இரண்டு முறை தோற்கடித்து விரட்டி அடித்தார்கள். இன்றைக்கு அவரது பிள்ளையோ பிள்ளை, கொள்ளையோ கொள்ளை என பேர் பெற்று பிறக்கும் போதே அவரது உதிரத்தோடு ஒட்டிப் பிறந்த தீயசக்தி, அம்மாவின் ஆட்சிக்கு மக்கள் செல்வாக்குப் பெருகிவரும் மகத்துவத்தைக் கண்டு ஆத்திரம், வயிற்றெரிச்சல் கொண்டு உச்சக்கட்ட அடாவடித்தனத்தை தனது தொண்டர்களுக்கும் கற்பித்து அவர்கள் அழிவின் விளிம்பிற்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் கண்காணித்தே வருகிறார்கள்.

எனவே அத்தீயசக்தியான தி.மு.க.-வை வரும் தேர்தலில் முழுமையாக தோற்கடித்து விரட்ட மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை நிலையை அறிந்துகொள்ள அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் எச்சரிக்கிறது.

வீடு வீடாக சென்று அரசின் சாதனை பிரச்சாரம்

தமிழகத்தில் ஒரு தீயசக்தியின் நிர்வாகத்தால் கடும் துயரத்திற்கு மக்கள் தள்ளப்பட்டு அல்லல் பட்ட காலத்தில் அத்துயரை துடைக்க பேரொளியாய் எழுந்து தமிழகத்தைக் காத்தவரும், நிகரற்ற ஆட்சி நிர்வாகம் உருவாக்கி இந்திய வரலாற்றிலேயே புதிய அத்தியாயத்திற்கு உரிய நாயகருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 104–ம் ஆண்டு பிறந்த நாள் ஜனவரி 17 என்றும்,

6 முறை தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் இந்திய மாநிலங்களிலேயே சிறந்த மாநிலம் என்ற நிலைக்கு உயர்த்தியவரும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை எக்கு கோட்டையாக்கியவரும், கோடான கோடி மக்களின் பாசமிகு தாயாகவும், புகழ் ஏணியின் உச்சிக்கு உயர்ந்து சிறந்த புரட்சித் தலைவி அம்மாவின் 73–ம் ஆண்டு பிறந்த நாள் பிப்ரவரி 24 என்றும் அனைவரும் அறிவார்.

மகத்தான அப்பெரும் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களை ஆண்டுதோறும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்து தொண்டர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

இந்த ஆண்டு நாம் கொண்டாடப்போகும் அவ்விழாக்களுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. ஆம்! அவ்விழாக்கள் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார நிகழ்ச்சிகளாக நடத்தப்பட வேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம்.

எனவே தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலே இருக்கிற மன்றத்துத் தோழர்கள் அக்கடமையை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு நிகழ்ச்சிகளை நடத்திட பெரிதும் வேண்டுகிறோம். அம்மா அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு, வீடாய் சென்று வழங்கிடவும், ஆங்காங்கே தெருமுனை கூட்டங்களை நடத்துவது எனவும், குறிப்பாக மக்களுக்கு நலஉதவி, மாணவ மாணவிகளுக்கு போட்டிகள், உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் அம்மா ஆட்சியின் சிறப்பையும், முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்களின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் விளக்கிக் காட்டும் வகையில் நிகழ்ச்சிகளை அமைத்து நடத்திட ஆங்காங்கே உள்ள மன்றத்துத் தோழர்களை இக்கூட்டம் அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *