செய்திகள்

ஐகோர்ட்டில் இன்று நேரடி விசாரணை துவங்கியது

சென்னை, பிப். 8–

சென்னை ஐகோர்ட், மதுரை கிளையில் இன்று நேரடி விசாரணை துவங்கியது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளை மற்றும் கீழ் கோர்ட்டுகளில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக காணொலி காட்சி மூலமாகவே விசாரணை நடந்து வந்தது.

பின்னர் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக ஒருசில வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டன. பெரும்பாலான வழக்குகள் காணொலி வாயிலாகவே விசாரிக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளை ஆகியவற்றில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இன்று நேரடி விசாரணை தொடங்கும் என்று நீதிபதிகள் அடங்கிய நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் தலைமை பதிவாளர் குமரப்பன் கூறியிருந்தார்.

அதன்படி 10 மாதங்களுக்கு பிறகு இன்று சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன.

ஆஜராக வந்த வக்கீல்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. உடல் வெப்பத்தை சோதித்த பிறகே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

நேரடி விசாரணையை பொறுத்தமட்டில் இறுதி விசாரணையில் இருக்கும் வழக்குகள் மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்தன.

காலை, மாலை என இரண்டு வேளைகளில் 1 மணி நேரத்துக்கு 5 வழக்குகள் மட்டுமே விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் மற்ற வழக்குகள் காணொலி மூலமே நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கில் இரு தரப்பிலும் தலா ஒரு வக்கீல் வீதம் கோர்ட் அறையின் பரப்பளவுக்கு ஏற்ப வக்கீல்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *