சென்னை, டிச. 18
பிரபல தமிழ் நடிகர் தனுஷ், ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்,
சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆகிய படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர்களான ருஸோ பிரதர்ஸ் (அந்தோனி ருஸோ, ஜோசப் ருஸோ) அடுத்ததாக தி கிரே மேன் என்கிற ஆங்கிலப் படத்தை இயக்குகிறார்கள். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவரவுள்ளது.
அடுத்த மாதம் (2021) படப்பிடிப்பு ஆரம்பமாகி, 2022ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் ரையன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார் தனுஷ்.
‘‘நெட்பிளிக்ஸில் வெளியாகும் தி கிரே மேன் படத்தில் நானும் இணைகிறேன். இந்த ஆக்ஷன் படத்தில் நடிப்பதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். என்மீது அன்பு செலுத்தும் ரசிகர்களுக்கு நன்றி’’ என ட்விட்டரில் தனுஷ் கூறியுள்ளார்.
தமிழில் அறிமுகம், பின் இந்தியில் அறிமுகம். இதன் மூலம் அகில இந்திய நட்சத்திரமான தனுஷ், ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது அவரின் கலை வாழ்வில் மிகப்பெரிய திருப்பம். பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இமாலய சரித்திர சாதனை.