நாடும் நடப்பும்

நிலவு மண் மீது ஆசை

15 ஆண்டுகளுக்கு முன்பே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2025–ல் சந்திரனில் புதுப்புது ஆய்வுகள் நடைபெற ஆய்வு கூடங்கள் அமைப்போம். 2050–ல் செவ்வாய் கிரகத்தில் குடி புகுவோம் என்று கூறியிருந்தார். வல்லரசு நாடுகள் மட்டுமே சந்திரனுக்கு சென்று வந்த சாதனைக்கு இணையாக நமது இஸ்ரோ விஞ்ஞானிகளும் மிக குறைந்த செலவில் சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் ராக்கெட் அனுப்பி ஆய்வுகள் நடத்தினர்.

குறிப்பாக நமது நிலவு ஆய்வுகளின் காரணமாகவே அமெரிக்க முன்னணி அண்டசராசர ஆய்வு நிறுவனமான நாசா நிலவில் நீர் இருந்தது என்று திட்டவட்டமாக அறிவித்தது.

இரண்டாவது முறையாக மீண்டும் நிலவுக்கு அனுப்பிய விண்கலம் தரையிறங்கிய போது தோல்வியை கண்டதால் நிலவு பற்றிய ஆய்வுகள் சற்றே பின்தங்கியது.

தற்போது சீனாவின் விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்கி, அங்கே துளைபோடும் கருவிகளை வைத்து நிலவின் மண்ணை எடுத்து லாவகமாக ஓர் பெட்டகத்தில் சேமித்து விட்டு இரண்டு நாட்களாக வேறு பல ஆய்வுகள் நடத்தி கொண்டு இருக்கிறது. டிசம்பர் 16 அன்று மீண்டும் பூமிக்கு திரும்ப பயணத்தை துவக்கி விடும்.

கிட்டத்தட்ட இரண்டு கிலோ எடையளவு நிலவு மண்ணை எடுத்து வரும் இந்த பயணம் 1970 களுக்குப் பிறகு மீண்டும் சந்திரனில் இருந்து எடுத்து வரப்படுகிறது. அமெரிக்க அப்போலோ விண்கலம் இரண்டு முறை சென்று வெற்றிகரமாக பூமி திரும்பி இருக்கிறது. ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் ஆளில்லாமல் சென்று 170 கிராம் மட்டுமே எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அமெரிக்க விண்வெளி வீரர்கள் அந்த இரண்டு பயணத்தின் போது மொத்தம் 382 கிலோ நிலவு மண்ணை எடுத்து வந்தனர்.

பிறகு நவீன விஞ்ஞானத்தால் மண்ணின் தன்மையை தொலைதூரத்தில் இருந்தே ஆய்வு செய்ய முடிந்தால் எடுத்து வரும் சிரமம் தேவையற்றதாக போய்விட்டது!

இம்முறை சீனா கொண்டு வர இருக்கும் மண் மாதிரியை கொண்டு பல நவீன ஆய்வுகள் நடத்தலாம். பூமி மண்ணை கொண்டு கண்ணாடி லென்ஸ், சிலிக்கான் சில்லுகள் என பலவற்றை தயாரிக்கின்றோம். நமது பூமியின் புவிஈர்ப்பு சந்திரனை விட 6 மடங்கு அதிகமாகும். ஆகவே இங்குள்ள தயாரிப்புக்கு தேவைப்படும் எரிசக்தி திறனில் மிகக் குறைந்த சதவிகிதத்தில் சந்திரனில் தயாரிப்பு ஆலைகள் இயங்க முடியும்.

சந்திரனின் மண் வளத்தில் வேறு புதுப்புது உபயோகங்கள் நமக்கு அடுத்த சில நூற்றாண்டுகளில் கிடைக்க இருப்பதற்கான அச்சாரமே இன்றைய சந்திரனின் மண் மீது நமக்கு இருக்கும் அக்கறையாகும்.

அதை எப்படி உறுதியாகக் கூறி விட முடியும்? என கேட்கலாம். 1970–களில் தந்தி தொலைத் தொடர்புகள் இருந்த காலத்தில் நாசா, ரஷ்யா விண்வெளியில் ராக்கெட்டுகளையும் மனிதர்களையும் அனுப்பி வைத்து தொலை தொடர்பில் சாதித்தார்கள்.

இன்றைய அதிவேக நவீன தொலைதொடர்பு வயர்லெஸ் ஆக மாறிய தொலைத்தொடர்பு யுகப் புரட்சி காலக்கட்டத்தில் மீண்டும் நிலவு ஆய்வுகள் நடைபெறுவதால் நமது பூமியில் இருக்கும் பல சிக்கல்களுக்குத் தீர்வாக அங்கு குடிபெயர்வது பற்றிய எண்ணம் அதிகமாகி வருகிறது.

மிகக்குறைந்த புவிஈர்ப்பு உள்ளதால் நிலவில் பல புதுமையான சமாச்சாரங்களை எதிர்பார்ப்பது வெறும் காணல் நீர் கனவாகாது, நம்மால் செய்ய முடிந்தவை ஆகும். முதலில் நாம் அங்குள்ள தட்பவெப்பங்கள், மண் வளத்தையும் ஆராய்ந்து வருவதால் அடுத்த கட்ட திட்டம் அங்கு குடியிருப்பு அமைப்பது, சூரிய மின்சக்தி கொண்டு இயங்குவது, பிறகு குறைந்த தண்ணீர் சத்துடன் விவசாயம் செய்வதிலும் ஈடுபட வேண்டிய கட்டாயம் வரத்தான் போகிறது.

இந்த வாரத்தில் சூரிய குடும்பத்தை சார்ந்த விண்கல் (Meteor) ஒன்றில் ஜப்பான் ராக்கெட்டை தரையிறங்கச் செய்து, அங்கிருந்தும் மண்ணை எடுத்து வந்து விடும். அதுவே சூரிய குடும்பத்தின் மிகப்பழமை வாய்ந்த விண்வெளி பொருளாக இருக்கும்.

கிட்டத்தட்ட பூமி உருவாகிய காலக்கட்டத்தில் இருந்த அந்த விண்கல்லில் இருந்து வர இருக்கும் அந்த மண்ணை ஆராயும்போது பூமி உருவான வரலாறு பற்றி மேலும் பல புது உண்மைகள் நமக்கு புரிய வைக்கும்.

இவையெல்லாம் நம் வருங்கால சந்ததியர்கள் நலமாக வாழ வழி செய்ய இருப்பதால் உலக ஆய்வாளர்கள் பிரச்சினைகளையும் இன, மத சமாச்சாரங்களை உதறி விட்டு கூட்டாக ஆய்வுகளை செய்து கொண்டிருப்பது மனநிறைவைத் தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *