செய்திகள்

காஞ்சிபுரம் நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி: 250 டாக்டர்களுடன் 30 குழுக்கள் நியமனம்

Spread the love

காஞ்சிபுரம், அக்.9–

காஞ்சிபுரம் நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளுக்கு 250 மருத்துவர்களை உள்ளடக்கிய 30 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து நகரில் பல்வேறு இடங்களில் சுகாதார துறையினர் நகராட்சி நிர்வாகத்தினர் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நகராட்சி பணியாளர்களுக்கு கொசு மருந்து தெளிக்கும் எந்திரம் மற்றும் நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள் ஆகியவற்றை சுகாதாரப் பணி துறை கூடுதல் இயக்குனர் சோமசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. முக்கியமாக கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர் மூலமாக வீடு வீடாக சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 250 மருத்துவர்களை கொண்ட மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு நகரின் பல இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து தேவையான மருத்துவ ஆலோசனைகளும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நிலவேம்பு குடிநீர்

காஞ்சிபுரம் நகரில் செவிலிமேடு, ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 20 வார்டுகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் மொத்தம் 30 குழுக்கள் ஐந்து பிரிவாக பிரிந்து சென்று, ஒரு வாரத்துக்கு பணியில் ஈடுபடுவர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86 பேருக்கு காய்ச்சலும், 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல், நிலவேம்பு குடிநீர் வழங்கப் படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர்கள் செந்தில்குமார், வி.கே.பழனி, நகராட்சி பொறியாளர் மகேந்திரன், சுகாதார அலுவலர் டாக்டர் முத்து, சுகாதார ஆய்வாளர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *