நாடும் நடப்பும்

மகிழ்ச்சி தரும் உற்பத்தி ஆரம்பம்

பிரதமர் மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்பு’ அழைப்பு எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதை ஏட்டளவில் படித்து வரும் நமக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை தந்திருப்பது சமீபத்திய தீபாவளியாகும்!

ஆண்டுக்கு ஆண்டு சீன வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையும் வண்ணமிகு பட்டாசுகளின் அறிமுகமும் அதிகரித்து வந்ததால் தீபாவளி நேரத்தில் சீன பொருட்களின் விற்பனை ரூ.100 கோடிக்கு இருந்திருக்கும்.

ஆனால் சீன ராணுவத்தின் அத்துமீறல்களால் ஏற்பட்ட எல்லை பதட்டத்தை தொடர்ந்து நம் வீரர்கள் 20 பேரின் வீரமரணத்தை தொடர்ந்து சீன பொருட்களுக்கு தடையை மத்திய அரசு அறிவித்தது. பொதுமக்களும் இனி சீன பொருட்கள் வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பதால் சீன பொருட்கள் புறக்கணிப்பு இம்முறை தீபாவளியையொட்டி முழுமையாகவே இருந்ததால் சீன ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

குறிப்பாக மின்சார விளையாட்டு பொம்மைகள், துணிகள், சமையலறை சாதனங்கள், காலணிகள், வண்ண வண்ண கைப்பைகள், அழகு சாதனங்கள், பேன்சி நகைகள், மலிவு விலை செல்போன்கள் மற்றும் அதன் சார்ஜர்கள், கீறலை தடுக்கும் பிளாஸ்டிக் உறைகள் போன்ற உதிரி பாகங்கள், கடிகாரங்கள், வாகன உதிரி பாகங்கள் போன்ற பல பொருட்கள் இம்முறை சீன தயாரிப்பு என்றால் மக்கள் வாங்க முன்வரவில்லை.

இந்த ‘சீன பொருட்கள் புறக்கணிப்பு’ முடிவால் இந்திய தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்து இருக்கிறது. தீபாவளி பண்டிகை காலத்தில் நாடு தழுவிய விற்பனை ரூ.90 கோடியாக இருப்பதாக உள்ள அறிக்கை மனநிறைவைத் தருகிறது.

முன்பு இருந்த தீபாவளி குதூகலமும் ஷாப்பிங் மகிழ்ச்சியும் காணப்படாததால் விற்பனை குறைந்து இருந்தாலும் அவை யாவும் இந்திய பொருட்களாக இருப்பதைப் பொருளாதார வல்லுனர்கள் உற்றுப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் ஆன்லைனில் வாங்கும் போது விலை குறைவாக இருக்கிறதா? என்று மட்டும் பார்த்தவர்கள் எல்லோருமே அப்பொருள் தயாராகுவது எந்த நாட்டில்? என்பதையும் பார்த்துதான் வாங்க ஆரம்பித்து உள்ளனர்.

இதே போக்கு தொடர்ந்தால் நம் நாட்டிலேயே எல்லா தரப்பினருக்கும் ஏற்ற விலைகளில் உரிய தரத்துடன் தயாரிப்புகள் அதிகரிக்க துவங்கிவிடும்.

முன்பெல்லாம் இந்தியர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதும் அன்னிய செலவாணி கொண்டு பங்குகளில் முதலீடு செய்யவே முடியாது என்பது மாறி நாமும் வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம், நம் தொழில் துறையிலும் அந்நிய முதலீடுகள் வரலாம் என்று கொள்கை தளர்வுகள் வந்த போது யாரும் நம் மண்ணில் தயாரிப்பை துவங்க ஆர்வம் காட்டவில்லை.

சீனாவில் தயாரிப்பு ஆலைகள் உலக தேவையை பூர்த்திசெய்ய ஏதுவாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் வேறு எங்கும் உற்பத்தியை துவக்க அவசியமும் இல்லாத நிலையில் இந்தியாவில் புதிய தொழிற்சாலைகள் வரவில்லை.

ஆனால் சீன பொருட்களுக்கு தடை வந்துள்ளதாலும் இந்திய நுகர்வோரின் தேவைகள் அதிகரிப்பாலும் உந்தப்பட்டு நாடெங்கும் உற்பத்தி துறை புதிய ஊக்கத்துடன் செயல்பட தயாராகி வருகிறது.

சீனாவின் லடாக் சீண்டல் முடிவால் தூங்கும் புலியை சீண்டிவிட்ட கதையாய், இந்தியாவின் தொழில்துறை தூக்கத்திலிருந்து எழுந்து விட்டது, விவசாய உற்பத்தியை மட்டும் முதுகெலும்பாய் கொண்டு இயங்கும் நமது பொருளாதாரம் விரைவில் தொழில்துறை உற்பத்தியால் புதிய முகம் கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டது என்ற மகிழ்ச்சியுடன் கொரோனா தொற்றுக்குப் பின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி விட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *