போஸ்டர் செய்தி

கும்பகோணத்தில் டெல்லி பெண்ணை பலாத்காரம்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Spread the love

தஞ்சை,ஜன.13–

வடமாநில பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வசந்தகுமார், புருஷோத்தமன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இயற்கை மரணம் அடையும் வரை 4 பேரும் சிறையிலேயே இருக்க வேண்டும் என தஞ்சை மகளிர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. சிறையில் இருந்து 4 பேரின் சடலம் தான் வெளியே வர வேண்டும் என்றும் நீதிபதி எழிலரசி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுனர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி டெல்லியை சேர்ந்த பெண் இரவு ரயிலில் கும்பகோணம் வந்தபோது பலாத்காரம் செய்யப்பட்டார்.

டெல்லியில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் 23 வயது நிரம்பிய இளம்பெண்ணுக்கு பதவி உயர்வுக்கான பயிற்சி கும்பகோணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இதற்காக டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்தார். அந்த இளம்பெண் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு கடந்த 2-ந் தேதி திருச்செந்தூர் விரைவு ரெயிலில் இரவு 10.30 மணிக்கு வந்துள்ளார்.

பின்னர் டெல்லியில் இருந்து ஏற்கனவே கும்பகோணத்தில் அந்த வங்கிக்கு பயிற்சிக்கு வந்திருந்த தனது தோழிகளுக்கு தொடர்பு கொண்டு ரெயில் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அந்த சமயத்தில் மழை பெய்வதால் சிறிது நேரம் ரெயில் நிலையத்தில் காத்திருக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் நீண்டநேரம் காத்திருந்த அந்த இளம்பெண் தன் தோழிகளிடம் தொடர்புக் கொண்டு அவர்கள் தங்கி உள்ள ஓட்டல் விவரங்களை கேட்டுள்ளார்.

நள்ளிரவு 12 மணி ஆகியது. ரெயில் நிலையத்தில் ஆட்டோ எதுவும் இல்லாததால் மழையில் நனைந்தவாறு ரெயில் நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்துள்ளார். அப்போது ரெயில் நிலையத்தில் யாரோ ஒருவரை இறக்கி விட வந்த வெளியூர் ஆட்டோவை கையசைத்து நிறுத்தி அதில் ஏறி தான் செல்ல வேண்டிய ஓட்டல் விவரங்களை ஆட்டோ டிரைவரிடம் கூறியுள்ளார்.

முதன்முறையாக கும்பகோணம் வந்ததால் அந்தப் பெண்ணுக்கு சரியான வழி தெரியவில்லை. அந்தப் பெண் இந்தியில் பேசிக்கொண்டே வந்ததால் அந்த ஆட்டோ டிரைவர் அதிக பணம் வசூலிக்கலாம் என எண்ணி அந்த பெண்ணை வெவ்வேறு பாதைகளில் சுற்றி சுற்றி வந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் தன்னுடைய பாதையில் திசை மாறி செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் இன்னும் சிறிது தூரத்தில் ஓட்டல் வந்துவிடும் என கூறிக்கொண்டு தொடர்ந்து ஆட்டோவில் சுற்றி சுற்றி வந்துள்ளார். பயந்துபோன இளம்பெண் டெல்லியில் உள்ள தன்னுடைய தமிழ் தெரிந்த நண்பருக்கு தொடர்பு கொண்டு அழுதுள்ளார். இதனால் அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்தப் பெண்ணை செட்டி மண்டபம் பைபாஸில் நள்ளிரவில் நடுவழியில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.

அதன் பிறகு அந்தப் பெண் தன்னுடைய டிராலி பேக்கை எடுத்துக்கொண்டு மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நான்கு பேரில் ஒருவர் அந்தப் பெண் தனியாக நடந்து வருவதைக் கண்டு அந்த பெண்ணிடம் தமிழில் பேசியுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணிற்கு தமிழ் புரியாததால், ஆங்கிலத்தில் அந்த நபரிடம் ஓட்டல் வழியை கேட்டுள்ளார். உடனே அந்த வாலிபர் நான் மோட்டார் சைக்கிளில் வந்து இறக்கிவிடுவதாக கூறி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அந்தப் பெண்ணை ஏற்றுக்கொண்டார். அந்தப் பெண்ணிற்கு பின்னால் மற்றொரு வாலிபரும் ஏறிக்கொண்டார்.

இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு நாச்சியார்கோவில் பைபாஸ் ரோட்டிற்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மற்ற 2 பேரையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்து அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து கதற கதற கற்பழித்துள்ளனர். அந்த இளம்பெண் 2 மணி நேரம் , அந்த 4 காம கொடூரர்களுடன் போராடியுள்ளார்.

அதன் பின்னர் அந்தப் பெண்ணை 4 வாலிபர்களில் ஒருவர் அழைத்துக் கொண்டு நாச்சியார்கோவில் மெயின் ரோட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அந்தப் பெண்ணும் வாலிபரும் ஏறிக்கொண்டனர். ஆட்டோவில் அழுதுக் கொண்டே வந்த அந்த பெண்ணிடம் தாங்கள் செய்ததை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர். அதனை அந்த ஆட்டோ ஓட்டுனர் கேட்டபடி வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே ஆட்டோவை நிறுத்தி அந்த வாலிபர் கீழே இறங்கினார். பின்னர் ஆட்டோ டிரைவரிடம் செல்போனை மறந்து வைத்து விட்டு வந்ததாகவும் உங்களுடைய செல்போனில் தன்னுடைய நண்பருக்கு போன் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து செல்போன் எண்ணை கூறும் படி அந்த ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.

அந்த வாலிபர் தன்னுடைய நண்பனின் செல்போன் எண்ணை கூறும் போது அதனை அந்தப் பெண் தன்னுடைய மனதில் பதிந்து வைத்துக்கொண்டார். பின்னர் செல்போனில் பேசி அந்த வாலிபர் தன்னுடைய நண்பனிடம் மோட்டார் சைக்கிளை எடுத்து பழைய மீன் மார்க்கெட் வரும்படி கூறியுள்ளார். அதன்படி அங்கு வந்த தன்னுடைய நண்பனின் மோட்டார் சைக்கிளில் ஏறி கொண்டு ஆட்டோ டிரைவரிடம் அந்தப் பெண் கூறும் ஓட்டலுக்கு அழைத்து சென்றுவிடுமாறு கூறிவிட்டு அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று உள்ளனர். ஓட்டலில் அந்த இளம்பெண் இறங்கியவுடன் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அந்தப் பெண் தன்னை வந்து இறக்கிவிட்ட ஆட்டோ எண்ணை குறித்து வைத்துக் கொண்டார்.

இதுகுறித்து ஓட்டலில் தங்கியிருந்த தன்னுடைய தோழிகளிடம் கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர பாலியல் பலாத்காரம் சம்பவம் வெளியில் தெரியாமல் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் போலீசாரிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

டெல்லியில் இருந்து தன்னுடைய பெற்றோர் வரும் வரை புகார் கொடுக்க மாட்டேன் என மறுத்து விட்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எந்த தகவலும் இல்லாததால் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் வெளியே தெரிய தொடங்கியது.

இதனைப்பார்த்த ஆட்டோ டிரைவர் தன்னுடைய ஆட்டோவில் வந்த பெண்ணாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் தகவல் தெரிவித்தார். அவர் அளித்த தகவல்களை போலீசார் வாங்கி வைத்துக் கொண்டனர்.

இனி இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் வேறு எந்த பெண்ணிற்கும் நடக்கக் கூடாது. எனவே போலீசில் புகார் கொடுக்கும் படி தன்னுடைய மகளை பெற்றோர்கள் வற்புறுத்தினர்.

அப்போது அந்த பெண் போலீசாரிடம் தான் வந்து ஓட்டலில் இறங்கிய ஆட்டோ பதிவு எண்ணையும், தான் மனதில் பதிந்து வைத்திருந்த அந்த வாலிபர் கூறிய செல்போன் எண்ணையும் அரைகுறையாக போலீசாரிடம் கூறியுள்ளார். அதன்பிறகு அந்த ஆட்டோ எண் யாருடையது என விசாரித்தபோது ஏற்கனவே போலீசாரிடம் தகவல் தெரிவித்த ஆட்டோ டிரைவரின் ஆட்டோ எண் என தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரை வரவழைத்து அவரது செல்போனில் அந்த வாலிபர் பேசிய செல்போன் எண்ணை கண்டுபிடித்து அந்த எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அந்த செல்போன் யாருடையது என்பதை வைத்து போலீசாருக்கு துப்பு துலங்கியது. கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மகன் (வயது 21), என்பவருடையது என தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவரும் அவருடைய நண்பர்களான கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (24), செட்டி மண்டபம் நகரைச் சேர்ந்த சிவாஜி மகன் புருஷோத்தமன் (19), கும்பகோணம் அலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் ( 19) ஆகிய 4 பேரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் நேற்று 4 வாலிபர்களை கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *