போஸ்டர் செய்தி

டெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

Spread the love

புதுடெல்லி,பிப்.27–

டெல்லியில் நடந்த வன்முறையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் சிலர் இறந்ததையடுத்து, வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல்களின்போது கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த வன்முறை சம்பவங்களில் நேற்று காலை வரை, தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடல் மீட்கப்பட்டது. மருத்துவமனையில் மேலும் 8 பேர் உயிரிழந்ததையடுத்து, வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், இன்று காலை குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் உள்ளிட்ட இடங்களில் சிலர் இறந்தனர். இதன்மூலம், வன்முறையால் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி வன்முறை தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதட்டம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றவண்ணம் உள்ளனர்.

இயல்பு நிலை திரும்புகிறது

டெல்லியில் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது என்று டெல்லி சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் ஸ்ரீவத்ஸ்வா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– டெல்லியில் வன்முறை ஏற்பட்ட வடகிழக்கு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விஷயங்கள் அனைத்தும் இயல்பு நிலை திரும்புவதற்கு பங்களிக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

106 பேர் கைது

டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 18 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி போலீஸ் பி.ஆர்.ஓ. ரந்தாவா கூறுகையில், வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எங்களிடம் சி.சி.டி.வி. பதிவுகளும், வலுவான ஆதாரமும் உள்ளது. இன்று எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. நிலைமை தீவிரமாகவும், கவனமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மூத்த அதிகாரிகள் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளனர்.போலீசார் மற்றும் பொது மக்கள் மீது வீட்டின் மேல்தளங்களில் இருந்து கல்வீசி தாக்குபவர்களை கண்டறிய டிரோன்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வட கிழக்கு டெல்லியை சேர்ந்தவர்கள் புகார் அளிக்க 22829334 / 22829335 என்ற மேலும் 2 எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளது. மக்கள் யாரும் வதந்திகளை நம்ம வேண்டாம் என்றார்.

இந்துக்கள் அடைக்கலம்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அக்கம் பக்கத்தில் உள்ள இந்துக்கள் தங்களின் வீடுகளில் அடைக்கலம் கொடுத்து வருகின்னறர்.கலவரத்தை நேரில் பார்த்த இஸ்லாமியர் ஒருவர் கூறுகையில், பிப்ரவரி 25 அன்று பகல் 1 மணியளவில் சுமார் 1000 பேர் எங்கள் பகுதிக்குள் நுழைந்தனர். அவர்கள் கூச்சலிட்டதால் நாங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினோம். அவர்கள் எங்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். இங்கு நாங்கள் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால் இந்துக்களுடன் சிறு பிரச்சினை கூட ஏற்பட்டதில்லை. இப்போதும் வீடுகளை, உடைமைகளை இழந்த எங்களை அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று பாதுகாக்கின்றனர் என்றார்.

முகமூடி ஆசாமிகள்

கலவரக்காரர்கள் முகமூடி அணிந்து வந்ததால் அவர்கள் யார் என தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கலவரத்தின் போது நாங்கள் ஆதரவின்றி நின்றோம். பலமுறை போலீசுக்கு போன் செய்தும் அவர்கள் தாமதமாகவே வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடைகள் திறக்கவில்லை

கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார், துணை ராணுவம் குவிக்கப்பட்டடதையடுத்து, தற்போது அங்கு கலவரம் கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. ஆங்காங்கே சிறுசிறு வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

பதட்டம் நீடிப்பதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகளில் குறைந்த அளவிலான வாகனங்களே செல்கின்றன. வன்முறை நடந்த பகுதிகளில் சாலைகளை சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

வன்முறை நடந்த பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சென்று ஆய்வு செய்தார். பாதுகாப்பு படைகள் உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும், அச்சப்பட தேவையில்லை என்றும் மக்களிடம் அவர் உறுதி அளித்தார்.

போலீசார் கொடி அணிவகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை முதல் வன்முறை மற்றும் பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் வடகிழக்கு பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீ வைப்பு சம்பவம் தொடர்பாக நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 8 மணி வரை 19 அழைப்புகள் வந்ததாக தீயணைப்பு துறை இயக்குனர் அதுல் கார்க் தெரிவித்தார். 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டதாகவும், 4 தீயணைப்பு நிலையங்களிலும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். தீயணைப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் முகாமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *