செய்திகள்

வெள்ளைத் தாமரைப் பூவில் – நினைவைத் தொட்டார்; திக்குத் தெரியாத காட்டில் சிலிர்க்க வைத்தார் ரிதன்யா!

உன் நண்பனைச் சொல்… நீ யார் என்பதை நான் சொல்கிறேன்!

இது ஓர் பழமொழி.

அதே ரீதியில், பரதத்தில் உன் குரு யார் என்பதைச் சொல், உன் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை நான் சொல்கிறேன் என்று சொல்லி விடலாம்!

ஆடுகின்ற கால்களில் கொஞ்சும் சலங்கை எங்கும் ஒலிக்க…

பாடுகின்ற பாட்டிலே பண்பாடு எதிரொலிக்க…

சோலை மயிலினம் சொக்கவைக்கும் உந்தன் நாட்டியம்

என்று முன்னுரை எழுதி விடலாம், ரிதன்யா பிரியதர்ஷினியின் அரங்கேற்ற நிகழ்வை பார்த்திருக்கும் அந்த ஆனந்தத்தில்!

அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்க விரும்பாத ஆசான்.

முயற்சியும், பயிற்சியும் வேண்டும்;

இலக்கணம் இங்கிதம் தெரிந்திடல் வேண்டும்;

கற்பது தெளிவுடன் கற்றல் வேண்டும்

என்பதில் உறுதியாய் இருக்கும் முன்வரிசை ஆசான்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவர் ஊர்மிளா சத்யநாராயணன்.

நாட்டிய உலகின் பிதாமகன்களில் தனி இடம் பிடித்தவர் கே.என்.தண்டாயுதபாணி.

சொல் வாக்கிலும் (ஜதி நட்டுவாங்கம்), செல்வாக்கிலும் வெற்றி வலம் வந்த நாட்யாச்சாரியார்கள் முன்வரிசை நாயகி கே.ஜே. சரசா.

இருவரிடமும் பரதம் பயின்ற ஊர்மிளாவின் சிஷ்யை ரிதன்யா என்றால்…

பரதத்தின் வழிவழி பாரம்பரிய பெருமை பேசும் இல்லையா, ஊர்மிளாவிடம்?

மக்கள்குரல் டிரினிட்டி மிரர் கடந்த ஆண்டுகளில் சென்னையில் நடத்திய இசை நாட்டிய விழாக்களிலும் குருவோடு இணைந்து கோஷ்டி நடனத்தில் நாட்டிய நாடகத்தில் தன்னைப் பதிவு செய்தவர் ரிதன்யா.

கதம்ப மாலையில் ஒரு மலராய் இணைந்து இருந்தவர் நேற்றைய அரங்கத்தில் தனி மலராய் மணம் வீசி நின்றார்!

அரங்கேற்ற நிகழ்ச்சியில் புஷ்பாஞ்சலி, ஜதிஸ்வரம், வர்ணம், கோபிகா கீதம், பாரதியார் பாடல், தில்லானா ஆகிய வடிவங்களில் ரிதன்யா பிரியதர்ஷினி தொடர்ந்து 2.30 மணி நேரம் பரதம் ஆடி அசத்தினார்.

புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்… ஓம் சரஸ்வதி தேவியே போற்றி… மகாகவி பாரதியாரின் பாடல். மேடையில் நடுநாயகமாக நின்ற நிலையில் ரிதன்யா தோன்றிய அந்த நிமிடமே.. படபடவென ஒலித்த கைத்தட்டல், பாட்டின் முடிவில் இரு மடங்கானது.

ஜதீஸ்வரம் ஜதி + ஸ்வரத்துக்கு ஈடு கொடுத்த வேகம், அனுபவ பயிற்சியை அங்கீகரிக்க வைத்தது.

‘‘செந்தில் மேவும்…’’ லால்குடி ஜெயராமனின் பாடல் சுகானுபவம் அருமையான பாவங்கள்.

கோபிகா கீதத்தில் ‘மதுரா நகரிலோ…’ பாடல் வரிகளுக்கும், ‘திக்குத் தெரியாத காட்டில்…’ எனும் பாரதியார் வரிகளுக்கும் ரிதன்யாவின் அங்க அசைவு, அபிநயம், பாவம் பிரமாதம். ஆசானுக்குப் பேர் சொல்லும் சிஷ்யை.

குரு ஊர்மிளா சத்யநாராயணன் நட்டுவாங்கம், ஜி.ஸ்ரீகாந்த் பாட்டு, தனஞ்ஜெயன் மிருதங்கம்; அனந்த கிருஷ்ணன் வயலின், ஜே.பி. ஸ்ருதிசாகரின் புல்லாங்குழல் பக்கவாத்தியக்காரர்கள்.

மாமல்லபுரம் நாட்டிய விழா, பொன்னியம்மன் கோவில் நவராத்திரி விழா, சென்னையில் திருவையாறு இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளில் குருவுடன் கூட்டணியாய் மேடை ஏறிய முன் அனுபவம் ரிதன்யாவுக்கு!

சென்னை அடையாறு சிஷ்யா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி. கல்வியில் சிறந்தவர். ஓவியம், நிகழ்ச்சி தொகுப்பு, -வர்ணனை, விளையாட்டு… ஆகிய கலைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

கல்வியிலும் கலையிலும் ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர்.

கல்வியில் கலையில் இன்னும் கவனம் பதியட்டும்.

முயற்சி, பயிற்சியில் முனைப்பு இன்னும் கூடட்டும்.

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் உணர்வு இன்னும் பெருகட்டும்.

இனிவரும் காலம் வெற்றி உன் வாசல் கதவை தட்டட்டும்!

ரிதன்யாவை வாழ்த்தி விடைபெற்றோம்.

வீ. ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *