செய்திகள்

இந்திய ஆட்சி, காவல் பணியைப் போல நீதித்துறை பணியை உருவாக்க வேண்டும்

Spread the love

டெல்லி, பிப். 15–

இந்திய ஆட்சிப் பணி, இந்திய போலீஸ் பணி போல, இந்திய நீதித்துறை பணியை உருவாக்கி, அதில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற தலித் எம்பிக்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக, மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இல்லத்தில், தலித் எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நீதிபதி உள்ளிட்ட நீதித்துறை பணிகளில், தலித் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை அழுத்தமாக முன் வைக்கப்பட்டது. இதற்காக, தனியாக இந்திய நீதித்துறை பணி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதுகுறித்து கூட்டத்திற்குப் பின்னர் ராம் விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

அனைத்து எம்பிக்களும் தலித்துகளுக்கு நீதித்துறை பணிகளில் தனி இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கையை வைத்தனர். காரணம், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது அதில் தேக்க நிலை ஏற்படுகிறது. இதுமாதிரியான சிக்கலைத் தவிர்க்கவே இட ஒதுக்கீடு கோருகின்றனர்.

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் கூறியிருப்பது தலித் சமுதாயத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி நியமனங்கள், தேர்வுகளில் இட ஒதுக்கீடு உள்ளது. அதேபோல இந்திய நீதித்துறை பணியை உருவாக்கி இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று எம்பிக்கள் வலியுறுத்தினர்.

வெளிப்படையான நீதித்துறை தேவை, அது தற்போது இல்லை. எனவே இந்திய நீதித்துறை பணியை உருவாக்க வேண்டும். மேலும் அனைத்துப் பிரிவினருக்கும் நீதித்துறையில் உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையை வைத்துத்தான் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கை நியாயமானதே. எனவே நான் அதை ஆதரிக்கிறேன்.

இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நீதித்துறை இட ஒதுக்கீடு குறித்து சாதகமான பதிலை நாடாளுமன்றத்திலும் மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தை சீரியஸாகவே மத்திய அரசு அணுகும் என்றார் பாஸ்வான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *