செய்திகள்

பிரான்ஸ் நாட்டில் 2 வாரம் ஊரடங்கு: மாமல்லபுரம் முகநூல் பக்கத்தில் உருக்கமான வீடியோ

Spread the love

காஞ்சீபுரம் ,மார்ச் 24-

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் விதத்தில் பிரான்சில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அங்கு வீட்டை விட்டு வௌியேறினால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக மாமல்லபுரத்தை சோ்ந்த சிற்பக்கலைஞர் சீனிவாசன் பாரீஸ் நகரில் இருந்து பேசி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான வீடியோ பதிவு செய்து வௌியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான் நாட்டிற்கு அடுத்தபடியாக பிரான்சில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி, நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் பிரான்சில் கடுமையான 2 வார ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் சிற்பக்கலைஞர் சீனிவாசன் என்பவர் பிரான்ஸ் நாட்டு பெண் கேப்ரியேல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பாரீஸ் நகரில் 2 மகள், ஒரு மகனுடன் வசித்து அங்கு சிற்பங்கள் வடித்து விற்பனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு பற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றை பேசி வௌியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் பிரான்சில் அதிகமாக பரவி வருவதால் அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஈபிள் டவர், பூங்காக்கள், அரண்மனை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கேளிக்கை பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், பள்ளிகள் மூடப்பட்டன.

இதனால் பிரானஸ் முழுவதும் முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த சனி, ஞாயிறுக்கிழமைகளில் இருந்து ஊரடங்கு சட்டத்தை கடுமையாக கடைபிடிக்க மக்களுக்கு பிரான்ஸ் அரசு வலியுறுத்தி உள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வௌியே வரவேண்டாம் என்று அங்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரான்ஸ் அரசின் அறிவிப்பினை மீறி யாரும் வீட்டைவிட்டு வௌியே வந்தால் 10 ஆயிரம் ரூபாய் (133 யுரோ) அபராதம் விதிக்கப்படுகிறது. அவசர தேவைக்கு வௌியே செல்ல வேண்டும் என்றால் இன்டர்நெட்டில் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அதனை பிரிண்ட் எடுத்து எந்த காரணத்திற்காக வௌியே செல்ல வேண்டும் என்ற தகவலை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பிறகு போலீசரர் நேரிடையாக சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்து, விசாரித்து அனுமதி வழங்கிய பிறகே மருத்துவமனை, உணவுகள் வாங்கவும், கடைகளுக்கு செல்வது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு வௌியே செல்ல முடியும். காவல் துறை அனுமதி பெறாமல் தெருக்களுக்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும் கடுமையான சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பாரீஸ் நகரில் உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரட், ரொட்டி போன்ற உணவுகளே கிடக்கின்றன. ஒரு சில இடங்களில் சிறிய உணவு கடைகளே திறந்து காணப்படுகிறது.

தற்போது குளிர் காற்று வீசுவதால் உடனடியாக கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதால் இந்த கடுமையான ஊரடங்கு சட்டத்தை பிரான்ஸ் முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு பள்ளி வார விடுமுறையை கழிக்க என் பிள்ளைகளுடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். தற்போது வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடப்பது வேதனையாக உள்ளது. ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த இங்கு மக்கள் அனைவரும் பிரான்ஸ் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு முகநூல் பக்கத்தில் சிற்பக்கலைஞர் சீனிவாசன் தனது வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *