செய்திகள்

தமிழகத்தில் 671 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, மார்ச்.11-

தமிழகத்தில் ஒரே நாளில் 671 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயருகிறது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 407 ஆண்கள், 264 பெண்கள் என மொத்தம் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 275 பேரும், கோவையில் 63 பேரும், செங்கல்பட்டில் 53 பேரும், திருவள்ளூரில் 39 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரியில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

கொரோனாவால் இதுவரையில் 12 ஆயிரத்து 530 பேர் உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 532 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 40 ஆயிரத்து 180 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஒரே நாளில் 87 ஆயிரம் தடுப்பூசி

தமிழகத்தில் 48-வது நாளாக நேற்று 1,569 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 86 ஆயிரத்து 900 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 21 ஆயிரத்து 950 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 34 ஆயிரத்து 485 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 10 ஆயிரத்து 26 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 20 ஆயிரத்து 439 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 11 லட்சத்து 25 ஆயிரத்து 703 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மன்னார்குடி பள்ளிக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 பேருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால்

பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 24 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முடிவில் மேலும் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகள் அனைவரும் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *