செய்திகள்

பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத்தில் 2 நாட்கள் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

இந்தியாவில் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத்தில் 2 நாட்கள் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

* இங்கிலாந்தின் புதிய வகை வைரசையும் குணப்படுத்தும்

* முன்கள பணியாளர்கள் உட்பட 30 கோடி பேருக்கு முன்னுரிமை

புதுடெல்லி, டிச.26-

கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான ஒத்திகை, 4 மாநிலங்களில் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணி, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷியா போன்ற நாடுகளில் தொடங்கி விட்டது. இந்தியாவில் அடுத்த மாதம் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அதன் அடிப்படையில், தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆயத்த பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணியை செய்யும் 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசிகளை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்க வேண்டும். அதற்கு இந்தியாவில் தற்போதுள்ள 28 ஆயிரத்து 947 குளிர்பதன கிடங்குகள் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

கொரோனா தடுப்பூசி கிடைத்தவுடன், சுகாதார பணியாளர்கள் 1 கோடி பேர், முன்கள பணியாளர்கள் 2 கோடி பேர், வயது அடிப்படையிலான முன்னுரிமை பிரிவினர் 27 கோடி பேர் என மொத்தம் 30 கோடி பேருக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி போட தேசிய நிபுணர் குழு சிபாரிசு செய்துள்ளது.

தடுப்பூசி எடுத்துக்கொள்வது கட்டாயம் அல்ல, விருப்பப்பட்டவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசையும் தடுப்பூசி குணப்படுத்தும் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணியில் அரசு யந்திரத்தின் தயார் நிலையை மதிப்பிடுவதற்காக, ஒத்திகை பணிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில், வருகிற 28 மற்றும் 29ந் தேதிகளில் இந்த ஒத்திகை நடைபெறும்.

அந்த மாநிலங்களில் தலா 2 மாவட்டங்களில் ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், ஊரக ஆஸ்பத்திரிகள் ஆகிய 5 வகையான இடங்களில் ஒரே நேரத்தில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும். இதில் உண்மையான தடுப்பூசி பயன்படுத்தப்படாது.

தடுப்பூசி தொடர்பான பணிகளை நிர்வகிக்க ‘கோ–வின்’ என்ற இணையதளம் உள்ளது. அதில் பயனாளிகள் பெயர்களை பதிவு செய்வதில் இருந்து ஒத்திகை தொடங்கும். திட்டமிடல், அமலாக்குதல், தகவல் அனுப்புதல் ஆகிய அனைத்தும் இந்த இணையதளத்தில் சோதித்து பார்க்கப்படும். பயனாளிகளுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்புவது, குளிர்பதன கிடங்குகளை சோதனை செய்வது, தடுப்பூசிகளை அனுப்புவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள், தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி பணியை மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் ஒத்திகை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *