முழு தகவல்

வைரஸ்கள்-கோவிட்-19: மாற்றுமருத்துவ பங்களிப்பு!

ஒவ்வொரு உயிரினமும் அந்தந்த மண்ணில் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள்களை கொண்டே, தங்களின் வாழ்நிலைகளை அமைத்துக்கொள்கின்றன. இதன் அடிப்படையிலேயே அந்தந்த நிலத்தின் காலநிலை, பருவநிலை, வாழ்க்கைச்சூழலுக்கு ஏற்பவே மானுட இனமானாலும், உயினங்களானாலும் அவற்றின் உடல் தகவமைக்கப்பட்டிருக்கும்.

அதனால்தான், ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளும் உணவு, மற்றொருவருக்கு ஒவ்வாமையையும் கூட தருகிறது. இந்த அடிப்படையிலேயே மருந்துகள் செயல்படும் தன்மையும் மாறுபடுகிறது. அந்தந்த மண்ணின் தட்பவெப்ப நிலைகளில் விளையும் உணவுப் பொருள்களை உண்ணும் மக்களுக்கு இயற்கையாகவே உடலில் எதிர்ப்பாற்றல் இருக்கிறது.

கார்ப்பொரேட் மருத்துவ அழுத்தம்

இந்நிலையில், அந்தந்த நாட்டின், மண்ணின் மருத்துவம் மக்களால் புறக்கணிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக, ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவமே உலகெங்கும் செழித்துள்ளது. அதற்கு, அந்தந்த மண்ணின் மருத்துவத்துக்கு அந்தந்த நாட்டின் அரசுகள் போதிய அக்கறை செலுத்தாததும் காரணமாக உள்ளது.

மற்றபடி, அலோபதி மருத்துவர்கள் பயன்படுத்தும் நவீன மருத்துவ தொழில்நுட்ப கருவிகளை மாற்றுமருத்துவர்களும் பயன்படுத்திக்கொள்ள அரசுகள் உரிய வழிகாட்டுதல்களையும், உரிய வசதிகளையும் அளித்தால், அலோபதி மருத்துவம் போலவே மற்ற மருத்துவ முறைகளும் செழித்து ஓங்கும். ஆனால், அதில் பன்னாட்டு மருந்து (கார்ப்பொரேட்) நிறுவனங்களின் மறைமுக ஆதிக்கம் இருப்பதையும் மறுக்க முடியாது.

இதற்கு எடுத்துக்காட்டாக, மாற்று மருத்துவத்தில் சிகிச்சை பெற்று ஒருவர் இறந்து போனால்கூட, அதனை ஊதி ஊதி பெரிதாக்கும் ஊடகங்கள், அலோபதி மருத்துவத்தில் உலகம் எங்கும் சிகிச்சை பலனளிக்காமல் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் இறக்கும்போதும், அது இயல்பானதாவே எடுத்துக்கொண்டு கடந்து விடுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் மாற்று மருத்துவர்கள்.

நிலவேம்பு குடிநீர் பயன்பாடு

இந்நிலையில், பல்வேறு பெருந்தொற்று நோய் காலங்களில் அந்தந்த மண்ணிற்கு சொந்தமான மருத்துவங்களே பெருமளவில் கைகொடுத்திருப்பதை மறுக்க முடியாது. எடுத்துக்காட்டாக, டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்திய போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா சித்த மருத்தவத்தின் அடிப்படையிலான நிலவேம்பு குடிநீர், அதனை தடுத்து நிறுத்துகிறது என்பதை அறிந்து, அலோபதி மருத்துவத்துடன் சேர்த்து, பயன்படுத்த அறிவுறுத்தினார். அதன்படி, இன்றுவரையில் டெங்கு தடுப்புக்கு சித்தமருத்துவத்தின் நிலவேம்பு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று நோய் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், அலோபதி மருத்துவத்தால் இந்நாள் வரை அதனை கட்டுக்கு கொண்டுவர முடியவில்லை. அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் பல்வேறு நாடுகளில் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. இச்சூழலில், கோவிட்-19 தீநுண்மி (Virus) தோன்றிய சீனாவில், அதன் பரவலை சிலமாதங்களில் கட்டுப்படுத்திவிட்டு இயல்பு நிலைக்கு பெருமளவில் திரும்பி விட்டனர். அதற்கு காரணம், அந்த மண்ணுக்கு உரிய உள்நாட்டு மருத்துவமுறைகளை பயன்படுத்தியதே என்று சொல்லப்படுகிறது.

மண்ணின் மருத்துவப் பங்களிப்பு

இதுபோல் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்திய நாடுகளில் அந்தந்தந்த நாட்டின் மண்ணின் மருத்துவம் பெரும் பங்களிப்பை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாற்று மருத்துவமுறைகள் எனப்படும் இந்திய மருத்துவமுறைகளான சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்டவற்றின் வளர்ச்சிக்கான இந்திய அரசின் ஆயூஷ் அமைச்சகம், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாற்று மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தி உள்ளது.

ஆயுர்வேத சிகிச்சை நெறிமுறை

அறிகுறியற்ற கோவிட்-19 பாதிப்புகளுக்கு தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறை வகுத்துள்ளது. இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், 5 மாதங்களுக்கு முன்னரே மற்றொரு வழிமுறையை வெளியிட்டிருந்தது. அதில், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா மூலம் எப்படி தற்காத்துக்கொள்வது என்று கூறி இருந்தது.

அந்த வழிகாட்டுதலில், ‘கோல்டன் மில்க்’ எனப்படும் அரைதேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்த 150 மில்லி பால் ஒருவேளையோ இருவேளையோ குடிப்பது, மூக்கில் எண்ணெய் தடவுதல் மற்றும் நசியம் எண்ணும் எண்ணெய் விடுதல், கண்டூசம் எனும் வாயில் எண்ணெய் விட்டு கொப்பளித்தல், புதினா இலை மற்றும் ஓம விதைகளை சேர்த்து ஆவிபிடிப்பது, துளசி, கருமிளகு, சுக்கு, உலர்ந்த திராட்சை, எலுமிச்சை, வெல்லம் சேர்த்து மூலிகை நீர் அருந்துவது, உணவில், மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை அடிக்கடி சேர்த்து கொள்வது, மூச்சுப்பயிற்சி, தியானம் நாள்தோறும் 30 நிமிடம் செய்வது, சியவனபிராஷம் லேகியத்தை 10 கிராம் தினமும் காலையில் எடுத்துக்கொள்ள கூறியிருந்தது.

இது பொதுமக்களுக்கு அதிக செலவில்லாத உடல்நலம் காக்கும் முறைகளாகும். மேலும் தமிழக அரசு, இத்துடன் ஆயுர்வேதத்தில் இந்து காந்தம் கஷாயம், அகஸ்ய ரசாயனம், அகஸ்திய ஹரீதகி போன்ற மருந்துகளையும் சேர்த்து கோவிட்- 19 வராமல் தடுக்கவும், லேசான அறிகுறிகளுக்கும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி இருந்தது.

2 வது வழிகாட்டுதலாக, அஸ்வகந்தா சூரணம் 3 கிராம் அளவு காலை, இரவு இருவேளை வெந்நீரில் சாப்பிடவும், குடூச்சி கண வடி (அல்லது) ஆயுஷ் 64 என்னும் சீந்திலை பிரதானமாகக் கொண்டு செய்யக்கூடிய மாத்திரியை காலை, இரவு பயன்படுத்தவும் மற்றும் முன்பே கூறியிருந்த சியவனபிராஷம் லேகியத்தை 10 கிராம் தினமும் காலையில் எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளது. இந்த முறைகள், ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கும். மீறி லேசான அறிகுறிகள் வந்தாலும் நோய் உடனடியாக குணமாக வாய்ப்பாக இருக்கும்.

தடுப்பு நடவடிக்கைகளைக் கையாளும் இந்த நெறிமுறை, கோவிட்-19 மேலாண்மை மட்டுமல்லாமல், நவீன காலத்தின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பாரம்பரிய அறிவைப் பயன்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என மத்திய அமைச்சரும் குறிப்பிட்டார். மிதமான மற்றும் அறிகுறியற்ற கோவிட் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க, எளிதில் கிடைக்கும் ஆயுர்வேத மூலிகைககள் உதவும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புக்கு ஆயூஷின் ஆயுர்வேத நெறிமுறைகள் உதவும்

சித்த மருத்துவம்

கொரோனா தொற்றுக்கு, தமிழ்நாட்டின் ஆதிகால மருத்துவமான சித்தமருத்துவம் சிறப்பாக செயல்படுகிறது என்று பல்வேறு தரவுகள் வெளியானது. இதனையடுத்து, சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீர் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை பெறுவோருக்கும் கொடுக்க வேண்டும் என்று அரசு பரிந்துரைத்து செய்ததன் அடிப்படையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சித்த மருந்துகளை பயன்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் இருந்ததாக சித்த மருத்துவர் தில்லைவாணன் கூறி இருந்தார். மேலும் கூறும்போது, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியில் செயல்படும் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் ஆகஸ்டு மாதம் வரையிலேயே 2,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றார்.

மேலும் கூறும்போது, மஞ்சள் பயன்படுத்துவதால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவது சீன ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எனவே, மஞ்சள் கலந்த பாலை நாம் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதிமதுரம் சூரணம் இருமலுக்கு நல்லது. ஆடாதோடா கசாயத்தில் அதிமதுரமும் சேர்ந்துள்ளதால் குடிக்கலாம்.

நாம் உண்ணும் உணவுதான் கரோனாவுக்கான மருந்தாக உள்ளது. விட்டமின் சி-க்கு கொய்யா சாப்பிடலாம். முளை கட்டிய தானியங்களில் இருந்து அதிகப்படியான ஜிங்க், புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கும். விட்டமின் டி-3 கிடைக்க எண்ணெய் தேய்த்து வெயிலில் நிற்கலாம்.

கொதிக்க வைத்த பூண்டு பால் குடிப்பதால் அலிசின் என்ற வேதிப்பொருள் உடலில் கரோனா வைரஸ் பல்கிப் பெருகுவதை தடுக்கிறது என முதல் நிலை ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் அனைத்து வகையான விட்டமின்களும் நமக்கு கிடைக்கிறது. நுரையீரல், மூச்சுக்குழாய் பிரச்சினைகளை தீர்ப்பதில் தூதுவளை சூப் சிறப்பாக கைகொடுக்கிறது. துளசி கசாயம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கற்பூரவள்ளி தழை அல்லது சாறாக 5-10 மி.லி கொடுக்கலாம்.

வேலூரில் சித்த மருத்துவ முறையில் கொரோனா வார்டில் எங்களுக்கு கிடைத்த பின்னூட்ட தகவலின் அடிப்படையிலும் பல்வேறு உலக நாடுகளில் மூலிகைகளை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி தகவல்களையும் சேகரித்து சித்த மருத்துவத்தின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என தெரிவித்திருந்தார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சி

அதேபோல், கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் சித்த மருத்துவ சிகிச்சையின் பலன் குறித்து ஆராய்ச்சி தொடங்கியுள்ளதை கலெக்டர் ம.ப.சிவன்அருள் செப்டம்பர் 15 ந்தேதி கூறினார். மத்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஒப்புதலோடு திருப்பத்தூர் அக்ரஹாரம் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சித்த மருத்துவம் சார்ந்த மருந்துகளின் ஆய்வினை முறையாக தொடங்கும் விதமாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்த குறிப்பிட்ட நோயாளிகளின் அனுமதியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் சித்த மருந்துகள் வழங்கப்படுவதற்கு முன்னதாக நோயாளியின் உடல் நிலையினையும், சித்த மருந்துகள் எடுத்துக்கொண்ட பின் நோயாளியின் உடல் நிலையின் மாற்றத்தையும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைகளுக்கு அனுப்பிட இன்று 20 பேருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுவதை கலெக்டர் நேரடியாக பார்வையிட்டு வாழ்த்து தொிவித்தார்.

சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு மைய வளாகத்திலே உணவு சமைத்து வழங்குவதுடன் மண்பானை உணவுகள், மூலிகை சூப், ஆவி பிடித்தல், யோகா பயிற்சிகள், காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சியும் இரவில் பஃபே முறையில் நிலாச்சோறு, விளையாட்டுடன் வீடியோ படக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதால் நோயாளிகள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதுடன் விரைவில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் மற்றுமொரு முன் முயற்சியாக சிறிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்டோபர் 8 ந்தேதி சித்த மருத்துவ சிகிச்சை பிரிவை ஆய்வு செய்த பின்னர் கலெக்டர் சிவன்அருள் கூறும்போது, கொரோனாவுக்கு சிகிச்சை பெறும்போது, எந்தவொரு நோயாளியின் உடல்நலமும் குன்றாமல், முன்னேற்றமடைந்தது சித்த மருத்துவத்தின் சிறப்பு காட்டுகிறது. சிகிச்சைக்கு முன்னும் பின்னும் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை நோயாளிகளிடம் ஆய்வு செய்தபோது, பெரிய மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இங்கு நடைபெறும் ஆய்வுகள் விரைவில், சித்த மருத்துவத்தை உலகமே திரும்பிப்பார்க்க வைக்கும் என கூறி உள்ளார்.

ஓமியோபதி மருத்துவம்

ஓமியோபதி மருந்தான, ஆர்சானிகம் ஆல்பம் 30 கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் தடுப்பு மருந்தாக, தமிழ்நாட்டில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுஷ் அமைச்சின் செயலாளர் ராஜேஷ் கோடெச்சா அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் தடுப்பு மற்றும் முன்காப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டு மார்ச் மாதத்திலேயே கடிதம் எழுதினார். அவரது கடிதம் ஆர்செனிகம் ஆல்பம் 30 இன் மூன்று நாள் அளவை ஒரு முற்காப்பு மருந்தாக பரிந்துரைத்தது. அடுத்த நாள், கோவிட்-19 போன்ற நோய்க்கு எதிராக “தடுப்பு மற்றும் முன்காப்புக்கு எளிய தீர்வுகள் கொண்ட மற்றொரு அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டது மற்றும் ஆர்சானிகம் ஆல்பம் 30 ஐ ஓமியோபதி தீர்வாக பட்டியலிட்டது.

“ஆர்செனிகம் ஆல்பம் 30ஐ தினமும் ஒரு முறை வெறும் வயிற்றில் மூன்று நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். சமூகத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஒரே அட்டவணையைப் பின்பற்றி ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அறிகுறியை பொருத்து பிரையோனியா ஆல்பா, ருஸ் டாக்ஸிகோ டென்ட்ரான், பெல்லடோனா மற்றும் கெல்மேசியம் உள்ளிட்ட பல்வேறு ஹோமியோபதி சிகிச்சையில் ஆர்செனிகம் ஆல்பத்தை கடிதம் பட்டியலிட்டது.

“காலரா, ஸ்பானிஷ் இன்ஃப்ளூயன்ஸா, மஞ்சள் காய்ச்சல், ஸ்கார்லட் காய்ச்சல், டிப்தீரியா, டைபாய்டு போன்ற தொற்றுநோய்களின் போது ஓமியோபதி தடுப்புக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது” என்று அது கூறியுள்ளது. 2014ம் ஆண்டில் எபோலா வைரஸ் பரவலின்போது, ​​உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒரு நிபுணர் குழு, “இதுவரை அறியப்படாத செயல்திறன் மற்றும் பாதகமான விளைவுகள் நிரூபிக்கப்படாத, தடுப்புக்கான சாத்தியமான சிகிச்சையாக உள்ளது என்று பரிந்துரைத்தது.

அக்குபஞ்சர்+மூலிகைகள்

அக்குபஞ்சர், அக்குபிரசர் இரண்டு மருத்துவ முறைகளிலும் கொரோனா தொற்றுக்கும் தீர்வு உள்ளது என்கிறார் கோவையைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் குமரகுரு.

கொரோனா நோயாளிகளின் உடல்நிலையை பொறுத்து முதல், இரண்டு, மூன்று என்ற படிநிலைகளின் படி பாயிண்ட் செலக்சன்கள் இருக்கும். சீனாவில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் குணமடைந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது. கடந்த காலங்களில் சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரல் பாதிப்புக்கும் செரிமானத்துக்கும் தொடர்பு உள்ளது. எனவே, வயிறும், மண்ணீரலும் சரியாக இயங்குகிறதா என்று பார்த்து அதிலிருந்து சிகிச்சையை துவங்குவோம். அக்குபஞ்சர் மருத்துவத்துடன் அந்தந்த நோய்காரணிகளுக்கான மூலிகைகளையும் நோயாளிகளுக்கு கொடுக்கும் பொழுது சிகிச்சையில் நல்ல முன்னேற்றத்தை காண இயலும்.

சீனாவில் அவர்களது பாரம்பரிய மூலிகை மருந்துகளுடன் அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாம் நமது நாட்டுப்புற மூலிகைகளுடன் இயற்கை உணவுகளையும், உண்ணும் பழக்க வழக்கத்தையும் குறிப்பாக, உணவை நன்கு மென்று சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்தாலே பல நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் கூறி உள்ளார்.

எழுத்து, தொகுப்பு: மா. இளஞ்செழியன், ஷீலா பாலச்சந்திரன்.

செய்திப் பிரிவு: மக்கள் குரல் இணையதளக் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *