செய்திகள்

‘கோவாக்சின்’ முதன்மையான தடுப்பூசி இல்லை: எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

புதுடெல்லி, ஜன. 4–

கோவாக்சின் தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது முதன்மையான தடுப்பூசியாக பயன்படுத்தப்படாது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது,

புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு நேற்று மத்திய அரசு அனுமதியளித்து. இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்தத் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு ஏற்கனவே இங்கிலாந்து அனுமதியளித்திருந்தது.

அதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை முடியாமலேயே கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இது பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறுகையில், “இரு தடுப்பூசிக்கும் ஒரே மாதிரியான அனுமதி வழங்கப்படவில்லை. கோவாக்சின் ஒரு பேக்கப் தான். கொரோனா பாதிப்பு உயரவில்லை என்றால் சீரம் தடுப்பூசியே பயன்படுத்தப்படும். அடுத்த மாத தொடக்கத்தில் தான் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தரவுகள் நமக்குக் கிடைக்கும். அது திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், சீரம் தடுப்பூசிக்கு வழங்கப்பட்டதைப் போன்ற அனுமதி கோவாக்சினுக்கும் வழங்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *